உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் சென்னை இளைஞர்!!

மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் பிரபலமாகி வருவதால், உள்ளூர் சில்லறை விற்பனையகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.
கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் சென்னை போன்ற நகரங்களில் தெருவுக்குத் தெரு சின்னச் சின்ன மளிகைக் கடைகள், பழக் கடைகள் இருக்கும். ஆனாலும் மக்கள் மளிகைப் பொருள்கள் தொடங்கி அன்றாட காய்கறிகள் வரை ஆன்லைனில் ஆர்டர் செய்வது வாடிக்கையாகிக் கொண்டு வருகிறது. நாம் வசிக்கும் பகுதியில் என்னென்ன கடைகள் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளக்கூட இன்று நிறைய பேருக்கு நேரம் இல்லை.
இணைய வணிக பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டுள்ளது  உள்ளூர் சில்லறை விற்பனையாளர்கள்தான். பெருநிறுவனங்கள் விளம்பரம் செய்து, சலுகைகள் கொடுத்து மக்களைக் கவருகின்றனர். ஆனால், சிறிய வியாபாரிகள் தங்களிடம் தரமான பொருள்கள் இருந்தாலும்கூட விளம்பரம் செய்ய இயலாத சூழலால் அதிகப்படியான மக்களைச் சென்றடைய முடிவதில்லை. உள்ளூர் சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் சென்னை இளைஞர் பிரதாப் ராஜ் களமிறங்கியுள்ளார். உள்ளூர் சில்லறை விற்பனையாளர்களுக்கு விளம்பரம் கிடைக்கும் விதமாக `CTONSHOP’  என்னும் ஒரு மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
CTONSHOP
CTONSHOP - COME TO OUR NEIGHBOUR SHOPS  அதாவது `நம் பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு வாருங்கள்’ என்னும் செயலி மூலம், சென்னையில் உள்ள சிறிய சிறிய கடைகள் பற்றி முழுத் தகவல்கள் மக்களுக்கு வழங்கப்படும். உள்ளூர் கடைகள், வண்டிக் கடைகள், சிறு வணிக நிலையங்கள், முன்னணி சில்லறை விற்பனை நிலையங்கள் என அனைத்து விற்பனையகங்களும் இதில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக வியாபாரிகள் செய்ய வேண்டியது ஒன்றுதான். அவர்களின் கடை விவரங்கள், அவர்களின் தயாரிப்புகள் உள்ளிட்டவற்றைப் புகைப்படம் எடுத்து அடிப்படைத் தகவல்களுடன் மொபைல் செயலியில் பதிவு செய்ய வேண்டும். வண்டிக் கடைகள், சிறிய வணிகங்கள், குடிசை உற்பத்தி பொருள்கள், பெண்கள் சுய உதவிக்குழுவின் வணிகம், வீடு சார்ந்த தொழில்கள், கைவினைப்பொருள்கள் என அனைத்து தரப்பும் இந்தச் செயலியில் தங்களின் விவரங்களைப் பதிவேற்றிக் கொள்ளலாம். உங்கள் கடைக்கு ஏற்கெனவே வந்த வாடிக்கையாளர் `CTONSHOP’ -ல் உங்கள் கடைக்கு ரேட்டிங் கொடுக்க முடியும். மக்கள் கொடுக்கும் ரேட்டிங் வாயிலாக மேலும், வாடிக்கையாளர்களைச் சென்றைய முடியும். இதுதான் இந்தச் செயலியின் குறிக்கோள். இது முற்றிலும் இலவசமான செயலி.
சென்னை இளைஞர் பிரதாப் ராஜ்
`CTONSHOP’   செயலியின் நிறுவனர் பிரதாப் ராஜ் நம்மிடம் பேசுகையில், `` நான் அகமதாபாத் தேசிய கல்வி நிறுவனத்திலிருந்து எம்.டெஸ் (M.Des) முதுகலைப் பட்டம் பெற்றேன். கடந்த 10 வருடங்களாக எம்.என்.சி ஐடி நிறுவனத்தில் பணியாற்றினேன். தற்போது சாப்ட்வேர் டிசைனிங் செய்து வருகிறேன். பல ஆண்டுகளாக இந்தியாவில் சில்லறை விற்பனை வளர்ச்சியைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டேன்.
இந்திய ஆன்லைன் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டை வால்மார்ட் வாங்கிவிட்டது நாம் அனைவரும் அறிந்ததே. இந்தியாவின் ஆன்லைன் ஷாப்பிங் பிரபலமடைந்ததால் சிறு வணிகங்கள் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டது. ஆனால், அதில் இருந்த ஒரே ஆறுதல் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தியது ஃப்ளிப்கார்ட் எனும் இந்திய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் செயலியைத்தான்.  ஆனால், அதையும் வால்மார்ட் வாங்கிவிட்டது. இதன்மூலம் இந்தியாவின் `circular economy’ பாதிக்கப்படும். அதாவது இந்தியாவின் பணம் இந்தியாவுக்குள்ளேயே சுழற்சி முறையில் புழங்கியது. ஆனால், தற்போது வெளிநாட்டு பெருநிறுவனங்களின் கைகளின் புழங்குகிறது. இதனால் இந்தியப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடையும். இவை அனைத்தையும் மனதில் கொண்டு உருவாக்கியதுதான் இந்த `CTONSHOP’   செயலி.

சில மாதங்கள் சென்னையில் உள்ள கடைகளின் உரிமையாளர்களுடன் உரையாடி,  தொழில் முதலீடு, மார்க்கெட்டிங் உத்திகள், போட்டி, வாடிக்கையாளர்களைச் சென்றடைய முடியாத சூழல், ஆன்லைன் சில்லறை நிறுவனங்களின் மேலாதிக்கம் ஆகியவற்றைக் குறித்து களத்தில் இருந்து ஆய்வு செய்தேன். அது பிரச்னைகளுக்கான தீர்வைக் கொண்டு வர வழிவகுத்தது. அனைத்து சில்லறைக் கடைகளையும் பற்றி ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து மொபைல் செயலியை வடிவமைத்தேன். சுருக்கமாகச் சொல்லப் போனால், அனைத்து உள்ளூர் கடைகளுக்கான டிஜிட்டல் சந்தை (Digital Open Market) இது.
ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தரமான பொருள்களை டெலிவரி செய்கிறதா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. நாம் வசிக்கும் பகுதிகளிலேயே தரமான ஆடை முதல் காய்கறி வரை கிடைக்கும். ஆனால், நாம் கடைகளைத் தேடுவதில் ஆர்வம் செலுத்துவதில்லை. நேரமும் இல்லை. இந்தச் செயலி சென்னையில் உள்ள சின்னச் சின்னக் கடைகளை அடையாளம் காட்டும். இது முற்றிலும் இலவசமான செயலி. தற்போது சேவை நோக்கில் செயல்படுகிறது. முதலீட்டாளர்கள் கிடைக்கும் பட்சத்தில் சில வியாபார அம்சங்களும் சேர்க்கப்படும். இன்று முதல் இந்தச் செயலி ஆண்டிராய்டு மொபைல் போன்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது’’ என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.