`கூட்டணிக்காக போனேன்; தனியா பலத்தை நிரூபிக்கணும்னு சீமான் சொல்லிட்டாரு! - இயக்குநர் கெளதமன்!!

மண்ணைக் காக்கின்ற ஒரு போராட்டம்தான் இந்தத் தேர்தல். பா.ஜ.க-வின் நேரடியான முகம்தான் ரஜினி. மறைமுகமான முகம்தான் கமல்" என தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் இயக்குநர் கெளதமன் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் கெளதமன் மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக் கலவரத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மனிதப் படுகொலைகள் நடந்துள்ளது. அதன் துயரத்தை தாங்க முடியாமல்தான் சென்னையில் போராட்டங்களை நடத்தினோம்.

இந்த மண்ணிலிருந்து ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக அகற்றிடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைத்திடவும், தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் வேண்டுகோளை ஏற்றுதான் இந்த தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பமனுத் தாக்கல் செய்துள்ளேன்.


மண்ணைக் காக்கின்ற ஒரு போராட்டம்தான் இந்தத் தேர்தல். அடுத்து வரும் தலைமுறையினருக்கு சுத்தமான நிலம், நீர், காற்று, சுற்றுச்சூழல் ஆகியவற்றை செய்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதற்கு நான் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்த ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இயங்க அனுமதி அளித்தவர்களும், திறந்து வைத்தவர்களும், இந்த ஆலைக்கு எதிரான முற்றுகைப் போராட்டத்தில் மக்களை சுட்டுக் கொல்ல காரணமாக இருந்தவர்களும் தைரியமாக மக்களிடம் சென்று ஒட்டுக் கேட்கிறார்கள். மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் கலவரத்தில் 13 உயிர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நாள். அதற்கு அடுத்த நாளான மே 23-ம் தேதி தேர்தல் தீர்ப்பு வர உள்ளது.


இந்த மண்ணைக் காக்க கெளதமனைத் தேர்ந்தெடுத்தோம் என மக்கள் தேர்தலில் தீர்ப்பளிப்பார்கள் என்ற உறுதியுடன்தான் போட்டியிடுகிறேன். இந்தத் தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சிகள் அனைத்துமே தங்களது தேர்தல் அறிக்கையில் ஒரு இடத்தில்கூட ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக அகற்றுவோம் என்பது பற்றி ஏன் பேசவில்லை என்ற கேள்வியை எழுப்புகிறேன். இத்தொகுதிக்காக நாங்கள் வடிவமைத்துள்ள தேர்தல் வாக்குறுதிகளில் முதலாவது கோரிக்கையே ஸ்டெர்லைட் ஆலையை மண்ணில் இருந்து அகற்றுவதுதான். ஸ்டெர்லைட் மட்டுமல்ல பனைத்தொழிலாளர்கள், மீனவர்கள், மாணவர்கள், விவசாயிகள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினர்களுக்காக 25 கோரிக்கைகளை குறிப்பிட்டுள்ளோம்.


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானிடம், ``மண்ணைக் காக்க ஒன்றாக இந்தத் தேர்தலை சந்திப்போம்" எனக் கேட்டேன். அதற்கு, ``நாம் தமிழர் கட்சியின் பலத்தையும், வாக்கு எண்ணிக்கையையும் இந்தத் தேர்தலில் நிரூபிக்க வேண்டியதுள்ளது" என்றார். அதற்காக ரஜினியையும், கமலையும் நான் தேடவில்லை. ஆதரவு கேட்கவில்லை. ஏனெனில், பா.ஜ.க.வின் நேரடியான முகம்தான் ரஜினி. மறைமுகமான முகம்தான் கமல்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்குழுவில் கட்சிகள் சாராதவர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. அனைத்தையும் தாண்டி, இந்த மண்ணின் மக்களின் பேராதரவு உள்ளது. தமிழகத்தில் இந்த ஒரு தொகுதியில் மட்டுமே எங்களது கட்சியின் சார்பில் போட்டியிடுகிறோம். ஏனெனில் தலையாய பிரச்னை தூத்துக்குடியில்தான் உள்ளது. அதை தீர்க்க வேண்டும் என்பதற்காக இத்தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளோம்" என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.