ஏழு தமிழர் விடுதலைக்காக மனித சங்கிலி-மார்ச்9!

மார்ச் 9 - தமிழ்நாடெங்கும் ஏழு தமிழர் விடுதலைக்காக மனித சங்கிலி பெருந்திரள் மக்கள் பங்கேற்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்றி அனுப்பி மூன்று மாதங்கள் கடந்த பிறகும் ஆளுநர் அதில் கையெழுத்திடாமல் காலம் கடத்துவது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கின் விளைவே ஆகும்!

இந்நிலையில், ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பல்வேறு ஊர்களில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி வருகிறார். அதில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் பங்கேற்று வருகிறார்கள்.

அதில் தீர்மானித்தபடி, வரும் 2019 மார்ச் - 9 காரி (சனி) அன்று மாலை 4 மணி முதல் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவை ஆகிய நகரங்களில் அனைத்துக் கட்சியினர் - இயக்கத்தினர் பங்கேற்கும் மனித சங்கிலிப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஏழு தமிழர் விடுதலை கோரி இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் ஆங்காங்கே தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்.

சென்னை - காஞ்சி மாவட்டத் தோழர்கள் சென்னையிலும், புதுச்சேரி - கடலூர் - விழுப்புரம் மாவட்டத் தோழர்கள் புதுச்சேரியிலும், நாகை - திருவாரூர் - தஞ்சை - திருச்சி - புதுக் கோட்டை - பெரம்பலூர் - அரியலூர் மாவட்டத் தோழர்கள் திருச்சியிலும், மதுரை - தேனி மாவட்டத் தோழர்கள் மதுரையிலும், நெல்லை - தூத்துக்குடி மாவட்டத் தோழர்கள் நெல்லையிலும், ஈரோடு - கோவை மாவட்டத் தோழர்கள் கோவையிலும், சேலம் - நாமக்கல் - தருமபுரி - கிருட்டிணகிரி மாவட்டத் தோழர்கள் சேலத்திலும் இந்த மனித சங்கிலியில் பங்கேற்க வேண்டும். தோழமை அமைப்புகளோடு கலந்து கொண்டு ஒருங்கிணைப்பாக ஈடுபட வேண்டும். தமிழ் மக்களை இப்பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்கச் செய்ய வேண்டும்!

மார்ச் 9 - மனித சங்கிலிப் போராட்ட நாளன்று பேரியக்கத் தோழர்களும், தமிழ் மக்களும் அவரவரது சுட்டுரை (Twitter), முகநூல் (Facebook) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் #28YearsEnoughGovernor என்ற குறிச்சொற்றொடர் (Hashtag) பயன்படுத்தி பதிவுகள் இட வேண்டும் என்றும் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தோழர் கி. வெங்கட்ராமன்  .

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.