இந்து - கத்தோலிக்க முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம்.!

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை காரணமாக வைத்து அங்கு தமிழர் என்ற அடையாளத்துடன் அன்னியோன்யமாக வாழ்ந்துவரும் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் விஷமத்தனமான செயற்பாடுகள் குறித்து மக்கள் விழிப்பாக இருந்துகொள்ள வேண்டும் .
இந்து - கத்தோலிக்க பதற்றத்தை தூண்டும் வகையில் சில தீய சக்திகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக நான் அறிகின்றேன் . இதன் ஒரு அங்கமாக மன்னாரில் உள்ள கத்தோலிக்க குருமார்கள் மற்றும் மக்களை அச்சுறுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுவருவதாக அறிந்து நான் மிகவும் கவலை கொண்டுள்ளேன் . தமிழ் மக்களின் உரிமைகளுக்கான பல தசாப்தகால போராட்டத்தின் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்து . கத்தோலிக்க வேறுபாடு ஏற்பட்டது கிடையாது .
எமது உரிமைகளுக்கான பல்வேறு வடிவங்களிலான போராட்டங்களில் கத்தோலிக்க மக்களும் கத்தோலிக்க மத குருமார்களும் மகத்தான பங்களிப்பை வழங்கியிருக்கின்றார்கள் . மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் எமது மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகத்துக்கு கொண்டுசென்று நீதி மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை ஏற்படுத்துவதற்கும் அளப்பரிய சேவையை கத்தோலிக்க மத குருமார்கள் செய்திருப்பது எம் எல்லோருக்கும் தெரியும் . குறிப்பாக எனது மதிப்புக்குரிய மன்னார் மாவட்டத்தின் முன்னாள் பேராயர் இராயப்பு யோசப் அவர்கள் உயிர் ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் எமது அரசியல் உரிமைகளை வலியுறுத்தியும் , மனித உரிமைகளை பாதுகாப்பதற்குமாக ஆற்றியுள்ள மகத்தான சேவையினை இந்த சந்தர்ப்பதில் நினைவு கூறுகின்றேன் . அதேபோல , தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான பணிகளில் ஈடுபட்டு 12 க்கும் அதிகமான பாதிரியார்கள் தமது உயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள் . பலர் காணாமல் போயிருக்கின்றார்கள் . முள்ளிவாய்காலில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டபோது கத்தோலிக்க மத குருமார்கள் மக்களின் பாதுகாவலர்களாக செயற்பட்டு தமது உயிர்களை இழந்திருக்கின்றார்கள் .

 அதேபோல , தந்தை செல்வா எந்தவித மத வேறுபாடுகளும் இல்லாமல் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக இறுதிவரை அயராது உழைத்தார் . அவரை தமது தலைவனாக ஏற்று தமிழ் மக்கள் பெரும் ஆதரவை வழங்கினார்கள் . பின்னர் தம்பி பிரபாகரன் எமது உரிமைகளுக்காக போராடியபோது எந்தவித மத வேறுபாடுகளும் இன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அவர் பின்னே அணிதிரண்டு அளப்பெரும் தியாகங்களைச் செய்தார்கள் . ஆகவே , எந்த ஒரு காரணத்தையும் முன்னிட்டு தமிழ் மக்கள் மத்தியில் இந்து கத்தோலிக்க அடிப்படையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் . இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் . எவரது தூண்டுதல்களுக்கும் ஆளாகி எந்த ஒரு முரண்பாட்டு நடவடிக்கைகளிலுந் தயவு செய்து ஈடுபடாதீர்கள் . பொறுத்தார் பூமி ஆள்வார்கள் . இது இந்துக்களுக்கும் பொருந்தும் கத்தோலிக்க மக்களுக்கும் பொருந்தும் என்பதை மறவாதீர்கள் .

 நீதியரசர் க . வி . விக்னேஸ்வரன் செயலாளர் நாயகம் தமிழ் மக்கள் கூட்டணி முன்னாள் முதலமைச்சர் வடமாகாணம்
 06 . 03 . 2019

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.