பெண்ணின் மானமும் வீரமும்..!

பூத்துக்குலுங்கும் பூக்களிலும்
வானில் மிதக்கும் நிலவிலும்
பெண்மையின் மென்மையை
வார்தைகளால் வர்ணம் தீட்டி
வர்ணனையால் ஆடையகற்றி
அம்மணமாய் அழகு பார்த்து
பக்கம் பக்கமாய் பாக்கள்
வனையும் பாவலனே!

விழி நிமிர்த்திய வீரத்தின்
கதை சொல்கிறேன் கேள்!
அழியாத வரலாறாய் மண்ணின்
மாண்பு காத்த காவியத்தின்
கண்ணகிகளை பாடுவோம்
வா!

இலட்சிய தீயை நெஞ்சிலேற்றி
சமையலறையை தகர்த்து
சாதனைத் தாரகைகளாய்
விடுதலை வானில் சுடர்களாய்
முகம் முகவரி மறைத்து
தாகத்தை சுமந்து
சாவுக்கு சவால் விடுத்தனர்.

தமிழரின் வாழ்வுக்காய்
தனிமனித விருப்புக்களை
துறந்து
நெருப்புக்கு நெருப்பாய்
நிமிர்ந்து
தேசத்தின்  சிறுத்தைகளாய்
சீறிப்பாய்ந்தனர்.

ஆக்கிரமிப்பு படையின்
ஆடுகளத்தில் ஆண்களுக்கு
நிகராய் நெச்சுநிமிர்த்தி
புதிய புறநானூற்றின்
ஈழத்து இதிகாசத்தில்
வீரத்திலகமாய் முதலில்
விதைக்கப்பட்டவள்
மாலதியென்ற மறத்தமிழ்

கஸ்தூரியும் பாரதியும்
கவிதைகளில் தீந்தமிழ் ஊட்டி
துர்காவும் விதுசாவும்
துப்பாக்கியில் செந்தணல் மூட்டி
சாவுகளின் மேட்டில் சரித்திரம்
நிலைநாட்டினர்.

ஈனப்பிறவிகளின்
ஊனச்செயல் கண்டு
மானப்போர் தொடுத்து
உண்ணா நோன்பிருந்து
அன்னை பூபதித் தாயவள்
தன்னை மண்ணோடு
அணைத்து நிலம் காத்து
நின்றாளே..

ஒன்றொன்றாய்
அடுக்கிய தியாகங்கள்
தோற்றுப்போகவில்லை
மண்டியிடாத மானத்தோடு
வரமாய் வாழ்கிறது

தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.