சில நிமிடங்களில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்!

மும்பை வாடியா அருகில் உள்ள பேரல் பகுதியைச் சேர்ந்தவர் நிலேஷ். இவரின் ஒன்றரை வயது மகன், ரோனித். வழக்கம் போல வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென தொண்டைப் பகுதியைப் பிடித்தவாறே அழ ஆரம்பித்தது. அத்துடன் வாயிலிருந்து ரத்தம் கசிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரோனித் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் குழந்தைக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாமல் தவித்தனர்.

உடனே குழந்தையை வாடியாவில் உள்ள `பாய் ஜெர்பை' மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தை ஏதோ விழுங்கி இருப்பதை அறிந்தார். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது குழந்தையின் தொண்டையின் குரல்வளை பகுதியில், உணவுக்குழாயில் நான்கு செ.மீ அளவுள்ள பொருள் ஓன்று சிக்கியிருந்தது தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட காயம் காரணமாக வாயிலிருந்து ரத்தம் கசிந்துள்ளது.

இதையடுத்து, உணவுக்குழாயில் சிக்கிய பொருளை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து எண்டாஸ்கோப்பி கருவி உதவியுடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


சில நிமிடங்களுக்குப்பிறகு, அந்தப் பொருளை அகற்றி வெளியில் எடுத்துப் பார்த்தபோது, அது பெண்கள் தலையில் அணியும் ஹேர்பின் என்பது தெரியவந்தது. சுமார் நான்கு செ.மீ நீளம் கொண்ட அந்த ஹேர்பின் அகற்றப்பட்டதும் அவசர சிகிச்சைப் பிரிவில் குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு குழந்தை நலமாக இருப்பதாகக் குழந்தையின் தந்தை நிலேஷ் தெரிவித்தார்.``குழந்தையின் உணவுக்குழாயில் ஹேர்பின் சிக்கி இருந்ததால் காயம் ஏற்பட்டு, மிகவும் சிக்கலான நிலைமையில் இருந்தது. தக்க நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததால், உடனே அதை அகற்றி சிகிச்சை அளித்தோம். குழந்தை தற்போது நலமாக இருக்கிறது" என்று மருத்துவமனையின் தலைமை நிர்வாகி டாக்டர் மின்னி போத்தன்வாலா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.