வவுனியா பேயாடி கூழாங்குளத்தில் பௌத்த விகாரை விவகாரத்தில் அரசாங்க அதிபர் மன்னிப்பு கோரல்!!

வவுனியா – பேயாடி கூழாங்குளத்தில் பௌத்த விகாரைக்கான காணி கோரல் தொடர்பாக மேலதிக அரசாங்க அதிபரால் அனுப்பப்பட்ட கடிதம் தவறானதென தெரிவித்து, அரசாங்க அதிபர் மன்னிப்பு கோரியுள்ளார்.


இந்த சம்பவம் மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகபூசணி அம்மன் ஆலய காணியை பெளத்த மதகுரு கோரிய விவகாரம் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று (வியாழக்கிழமை) மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அரச அதிபர், சர்வமத குருமார்கள், பிரதேச செயலாளர், பேயாடி கூழாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்தினர், அந்தணர் ஒன்றியம் ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது மாவட்ட செயலகத்தால் அனுப்பட்ட கடிதம் தவறுதலாக அனுப்பட்டதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார். குறித்த விகாரை அமைந்துள்ள காணியினை யாரும் உரிமை கோரவில்லை என்றும் முன்னர் போலவே வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்த அவர், குறித்த கடிதம் தொடர்பாக தான் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறிருக்க எதற்காக மாவட்ட செயலகம் அவ்வாறானதொரு கடிதத்தை அனுப்பியது என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இருபது வருடங்களுக்கு முன்பு வவுனியா பேயாடிகூழாங்குளம் பகுதியில் இந்து ஆலயம் அமைந்திருந்த காணியினை கையகப்படுத்திய இராணுவத்தினர், தமது வழிபாட்டிற்காக புத்தருடைய சிலையினை உருவாக்கி, ஆலயமாக அமைத்து வழிப்பட்டு வந்தனர்.

எனினும் தற்பொழுது அந்தப் பகுதிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட போதும், குறித்த புத்தர் சிலை அவ்விடத்திலிருந்து அகற்றப்படவில்லை.

இந்நிலையில் குறித்த காணியினை பௌத்த மதகுரு ஒருவர் தமக்கு வழங்கும்படி கோருவதாகவும் அவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க குழுவினருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக, வவுனியா மாவட்ட செயலகத்தால் நல்லிணக்க குழுவினருக்கு கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கபட்டிருந்தது.

அத்தோடு அந்த கடிதம் புத்தர் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள நாகபூசணி அம்மன் ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.