``அந்த விசித்திர மனநிலையை உருவாக்கியதுதான், `காட்ஃபாதர்’ படத்தின் வெற்றி!’’

காட்ஃபாதர் உலகம் வன்முறையிலானது. அதை `கே’வைப்போன்ற சாமானியர்களான நாம் வெறுக்காமல் கொண்டாட்டமாக ஏற்றுக்கொண்டோம்.
இந்த விசித்திர மனநிலையை நம் மீது புகுத்தியதில்தான் வெற்றிபெற்றுள்ளார், பிரான்சிஸ் போர்ட் கொப்பலோ. அதனாலேயே, இப்படம் உலக சினிமாக்களுக்கெல்லாம் காட்ஃபாதராக உள்ளது.
``அந்த விசித்திர மனநிலையை உருவாக்கியதுதான், `காட்ஃபாதர்’ படத்தின் வெற்றி!’’
உலக சினிமாவை காட்ஃபாதருக்கு முன் காட்ஃபாதருக்குப் பின் என்று இரண்டாகப் பிரிக்கலாம். அந்தளவுக்கு சினிமா ஆர்வலர்களால் கொண்டாடித் தீர்க்கப்படும், இன்று வரை சினிமா ஆய்வகங்களிலும் அனைவரது விருப்பப் பட்டியலிலும் தனக்கென தனி இடத்தைத் தக்க வைத்துகொண்டு இருக்கும் ஒரு படம் `காட்ஃபாதர்.’ சினிமாவில் `கேங்ஸ்டர் மூவி’ என்ற பிராண்டுக்குப் பெருமதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தது இப்படம். மாஃபியாக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி 1969-ம் ஆண்டு மேரியோ புஸோ எழுதிய `தி காட்ஃபாதர்’ நாவல் நல்ல வரவேற்பைப் பெற்றது. நாவலைத் திரைப்படமாக்க முடிவு செய்தது, பாராமெளன்ட் பிக்சர்ஸ் நிறுவனம்.

அப்போது வெளியான சில மாஃபியா திரைப்படங்கள் தோல்வியடைந்தன. அதனால, பல இயக்குநர்கள் `காட்ஃபாதர்’ படத்தை இயக்கத் திட்டவட்டமாக மறுத்தனர். படத்தில் இத்தாலிய மரபுப் பின்னணி பேசுபொருளாக இருப்பதால், இத்தாலிய - அமெரிக்க இயக்குநர் ஃப்ரான்சிஸ் ஃபோர்டு கொப்பலோ சிறந்த தேர்வாக அமைந்தார். பாராமெளன்ட் நிறுவனம் பட்ஜெட்டிலும் படத்தின் செயல்பாட்டிலும் அதிகம் கண்டிப்பு காட்டியது. குறிப்பிட்ட பட்ஜெட், குறிப்பிட்ட நடிகர்கள் என்று தயாரிப்பாளர் நெருக்கடி ஒருபுறம், சிக்கலான கதையமைப்பு மறுபுறம். முதலில், கொப்பலோ படத்தை இயக்க மறுத்தார். பின்னாளில், கொப்பலோ என்ற இளம் இயக்குநரை ஹாலிவுட்டின் தலைசிறந்த இயக்குநராக உருவாக்கியது `காட்ஃபாதர்’ திரைப்படம்.

நியூயார்க் நகரின் நிழலுலக தாதா, விட்டோ கோர்லியோனி (மர்லன் பிராண்டோ). பல குடும்பங்கள் நியூயார்க்கில் ஆதிக்கம் செலுத்தினாலும், அடிப்படையில் ஓர் இத்தாலியரான கோர்லியோனியின் செல்வாக்கைப் பெறமுடியவில்லை. மாஃபியா உலகில் போதைப் பொருள்கள் கடத்தல் அப்போதுதான் தொடங்குகிறது. போதை வர்த்தகத்தில் கோர்லியோனியின் ஆதரவைப் பிறர் நாட, இதன் சிக்கலால் தன் நிலை சரியும் என்று மறுக்கிறார். இதைக் காரணமாக வைத்து கோர்லியோனி சுடப்பட்டு, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். தன் தந்தையைச் சுட்டவர்களைக் கொன்று பழிவாங்குகிறார், கோர்லியோனியின் இளைய மகன் மைக்கல் (அல்பசினோ). பிறகு, இந்தப் பிரச்னையை எவ்வாறு கோர்லியோனி தீர்த்து வைக்கிறார், தாம் மற்றும் தன் குடும்பத்தைச் சூழ்ந்திருக்கும் சூழ்ச்சிகளை வென்று, அடுத்த காட்ஃபாதராக மைக்கல் எப்படி உருவாகிறார்... இதைக் கொண்டாட்டத்தில் ஆரம்பித்து, ரத்தமும் சதையுமாக முடித்து வைத்தது, `காட்ஃபாதரி’ன் முதல் பாகம்.


இருளிலிருந்து பின்னணி இசையுடன் க்ளோஸப் முகமாக, காட்ஃபாதரிடம் உதவிக் கேட்கும் நண்பர். பூனையை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் காட்ஃபாதர், சிறு சிறு மேனரிசங்களோடு அறிமுகமாகும் ஆரம்பக்காட்சி. காட்ஃபாதர் கோர்லியோனியின் உலகம் கறுப்பு என்பதால், அந்த இடம் கருமைப் படலமாகக் காட்சியளிக்கும். காட்பாதர் ட்ரைலாஜியின் அடையாளமாக இந்த எளிய காட்சியமைப்பே இன்று வரை முன்னிறுத்தப்படுகிறது. மேலும், படம் முழுக்க காட்ஃபாதரின் காட்சிகள் பெரும்பாலும் அவ்வாறே அமைக்கப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் நடக்கும் திருமணக் காட்சி கிட்டத்தட்ட 20 நிமிடத்துக்குமேல் நீளும். பல பாத்திரங்களைக் கொண்ட சிக்கலான திரைக்கதை அமைப்பில், இந்த ஒரு நிகழ்விலேயே சாமர்த்தியமாக அனைவரையும் ஒருங்கிணைத்திருப்பார் இயக்குநர். காட்ஃபாதரின் அடுத்தடுத்த பாகங்களிலும் இதே யுத்தி கையாளப்பட்டிருக்கும். அதிகம் கொலைகள் நிகழ்வதால், ஒவ்வொரு கொலையையும் ஒவ்வொரு வெரைட்டியாகத் தேர்வு செய்த விதம், பார்வையாளனுக்கு அலுப்பைக் கொடுக்காமல் ரசிக்க வைக்கும். குறிப்பாக, இறுதிக் காட்சியில் நான்-லீனியராக நடக்கும் தொடர் கொலைகள், பல படங்களுக்கான இன்ஸ்பிரேஷனாகப் பின்னாளில் அமைந்தது. மைக்கல் போதை வியாபாரி சோலோசவைய்யும் போலீஸ் அதிகாரியையும் சுடும் ஹோட்டல் காட்சியும், ஐந்து குடும்பங்களுடனான கேங்ஸ்டர்ஸ் மீட்டிங்கும் படத்தின் தாக்கத்துக்குக் குறிப்பிட வேண்டியவை.

விட்டோ கோர்லியோனி தொழிலைப் போலவே, குடும்பத்தின் மீதும் பற்றோடு இருப்பார். தங்கைக்காக அவள் கணவனை நடுரோட்டில் வைத்து அடிக்கும் மூத்த அண்ணன் சன்னி, அதுவரை விருப்பமில்லாதபோதும் அப்பா மற்றும் அண்ணனுக்காகக் கொலை செய்யும் மைக்கல் என்று அனைவரும் குடும்ப உறவில் வலுவாகப் பிணைக்கப்பட்டிருப்பார்கள். காட்பாதர் ஃபேமிலி என்ற அம்சமே படத்தின் தனித்துவத்தோடு உடன்பட்டிருக்கும். இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில், இத்தாலியில் அமெரிக்க வாகனங்கள் பயணிப்பது போன்ற பீரியட் மற்றும் யதார்த்த காட்சியமைப்பை இதில் நுணுக்கமாகக் காணலாம். `I Believe in America’ என்ற உச்சரிப்போடுதான் படம் தொடங்கும். `என்னதான் இருந்தாலும் அவன் ஒரு இத்தாலியன்’ என்ற பொருமலே மற்ற குடும்பங்கள் ஒன்றிணைந்து எதிர்க்கக் காரணமாக இருக்கும். `We are not Communists’ என்று மீட்டிங்கில் கிண்டலாகச் சிரிப்பது... என அரசியல் சொல்லாடல்கள் படத்தின் இயங்கியலைச் சூழலோடு நெருக்கமாக்கியிருக்கும்.

முன்பு நடித்த அத்தனை படங்களையும் மறக்கச் செய்து, மர்லன் பிராண்டோ என்றால் `காட்ஃபாதர்’ என்ற சித்திரத்தை உருவாக்கியது இப்படம். பல நடிகர்களை முயற்சி செய்து பிறகு, பிராண்டோவைத் தேர்ந்தெடுத்தார் கொப்பலோ. ஆனால், பிராண்டோவை பாராமெளன்ட் நிறுவனம் ஏற்கவில்லை. இந்தக் கையறு நிலையெல்லாம் சமாளித்தே படம் தொடங்கப்பட்டது. அந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் பிராண்டோ. சினிமாவில் உள்ள அனைவரும் ஏங்கும் ஓர் விருதை, அமெரிக்க பூர்வகுடிகள் மீது ஹாலிவுட் காட்டும் பாரபட்சத்தைக் காரணமாகக் கூறி, விருதை மறுத்தார் பிராண்டோ. நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த அல்பசினோ, இந்தப் படத்தின் மூலம் நட்சத்திரப் புகழை அடைந்தார். அடிப்பட்ட முகத்துடன் தங்கையைப் பார்த்தவுடன் கையைக் கடிக்கும் ஜேம்ஸ் கேன், சோகமோ, துக்கமோ குடிக்கும் ஒயினைப்போல் அளவாகக் காட்டும் ராபர்ட் டுவல்... என்று  காட்ஃபாதரின் மொத்தக் குழுவும் பார்வையாளனோடு பொருந்திப்போனது.

கல்ட் ரக பீரியட் சினிமாவில் காட்சியின் அமைப்பு, நிகழ்வுகளின் தன்மையை வெளிப்படுத்துவதில் தனித்துவமான முயற்சி `காட்ஃபாதரி’ல் மேற்கொள்ளப்பட்டது. அதுவரை இல்லாத அளவுக்குப் புதுமையான உத்திகளை ஒளியமைப்பில் கையாண்டார் ஒளிப்பதிவாளர் கோர்டர்ன் வில்லிஸ். நிழல் உலகம் என்பதால், படம் முழுக்க இழையோடும் கறுப்பு, காட்ஃபாதரின் `டார்க் ஒளியமைப்பு’ இன்றும் பேசுபொருளாகவே உள்ளது. நினோ ரோடாவின் இசை, உணர்வுகளின் உச்சபட்ச கிளர்ச்சியை ஏற்படுத்தும். படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை ஒலித்துக்கொண்டிருக்கும் மைய இசை சலிப்பை ஏற்படுத்தாமல் ரசிக்க வைத்திருக்கும்.

காட்ஃபாதரை வரவேற்கச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார் லூக்கா பிராசி. உண்மையில் அது அவர் நடிப்பதற்காக எடுத்த பயிற்சி. அது காட்சியாக்கப்பட்டிருக்கும். சில நொடிகள் காட்டப்படும் வெட்டப்பட்ட குதிரைத் தலைக்கு, நிஜ குதிரைத் தலையை ஏற்பாடு செய்திருந்தார்களாம். இப்படி ஒவ்வொரு நிகழ்வுக்கும் அசாத்திய முயற்சிகளைச் செய்தார் கொப்பலோ. காட்ஃபாதரான விட்டோ கோர்லியோனி கெட்டவர். மற்றவர்களிடமிருந்து அவர் கொஞ்சம் உயர்வாகத் தெரிய, போதைப் பொருள் கடத்தலை மறுப்பது என்ற காரணம் மட்டுமே உள்ளது. அதுவும், நலன் கருதியன்றி, தன் சொந்த செல்வாக்குக்காகவே மறுப்பார். யார் சார்பில் திரையை அணுகுகிறோமோ, அவரோடு உடன்பட்டு அவரின் நன்மை - தீமைகளை நம்முடையதாக உணர்கிறோம் என்ற சினிமா மொழியும் இங்கு தகர்க்கப்படுகிறது.

தன் குடும்பம் செய்வதை ஆரம்பத்தில் விரும்பாத மைக்கல், பிறகு தன் முகத்தை மாற்றுகிறார். தொடரும் அவரின் செயல்கள், வன்முறையற்ற வாழ்வை விரும்பும் அவரின் மனைவி கேவின் எண்ணத்திலிருந்து விலகுகிறது. காட்ஃபாதர் உலகம் வன்முறையிலானது. அதை `கே’வைப்போன்ற சாமானியர்களான நாம் வெறுக்காமல் கொண்டாட்டமாக ஏற்றுக்கொண்டோம். இந்த விசித்திர மனநிலையை நம் மீது புகுத்தியதில்தான் வெற்றிபெற்றுள்ளார், பிரான்சிஸ் போர்ட் கொப்பலோ. அதனாலேயே, இப்படம் உலக சினிமாக்களுக்கெல்லாம் காட்ஃபாதராக உள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.