பகிடிவதையால் பட்டப்படிப்பை கைவிட்ட யாழ். பல்கலைக்கழக மாணவன்!!

யாழ்.பல்கலைக்கழக மாணவன் ப.சுஜீபன் யாழ். பல்கலைக்கழகத்தின் பகிடிவதை காரணமாக உடலியல் ரீதியான துன்புறுத்தல் வன்கொடுமைகளால் மனித உரிமை மீறப்பட்டு தனது பல்கலைக்கழகக் கல்வியை இடைநிறுத்துவதாக பாதிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் ப.சுஜீபன் வேதனையுடன் கூறியுள்ளார்.



குறித்த மாணவன் இது தொடர்பில் தனது முகநூல் வாயிலாக பகிரங்கமாக தனது வேதனைகளையும், பிரச்சினைகளையும் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதையால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டும் , அவமானப்படுத்தப்பட்டும் உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட முதலாம் வருட மாணவன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பது தனது உயிருக்கே ஆபத்தானது என்னும் நிலையில் தனது பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை இடைநிறுத்தியுள்ளார்.

கஸ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்து கஸ்டப்பட்டு பாடசாலைக் கல்வியைக் கனவுடன் கற்ற போதிலும் தொடர்ந்தும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை சிரேஸ்ட மாணவர்களது மனித உரிமை மீறல்களால் தொடர முடியவில்லையே தான் கண்ட கனவு வீணாகியுள்ளதாக வேதனையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த யுத்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பகுதியில் வாழ்ந்து பல்வேறுபட்ட வளப்பற்றாக்குறைகளுடன் பல கஸ்டங்களை எதிர்நோக்கி கல்வி கற்றவர் என்பதும், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்து அனைத்தையும் இழந்து கஸ்டப்பட்டு அவலங்களை எதிர்நோக்கிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களின் அடித்துத் துன்புறுத்தல் தாங்க முடியாது ஏன் எனக்கு அடிக்கிறியள்? நான் என்ன குற்றம் செய்தேன் என்று வினவிய போது திருப்பிக் கதைக்காதை எனக்கூறி மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளதாகவும், வீதியில் வைத்து அவமானப்படுத்தியுள்ளதாகவும் தனது முகநூலில் இம்மாணவன் ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார்.
மற்றும் சிரேஸ்ட மாணவர்கள் சிலரால் இம்மாணவனது முகநூல் போன்று இன்னொரு முகநூலை உருவாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவனது ஒழுக்கத்திற்குப் பங்கம் ஏற்படும் வகையில் சில பதிவுகள் இடப்பட்டுள்ளது.
மேற்படி மாணவனை பல தடவைகள் தாக்கி வன்கொடுமைப்படுத்தியுள்ளார்கள். அதனால் யாழ்.போதனா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளார். யுத்த காலம் உட்பட தற்போது வரை ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களே யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர்களை மிருகத்தனமாகத் தாக்கி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்மாணவன் மீது வதை புரிந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பல்கலைக்கழக மாணவர்களைப் பாதுகாக்க உரிய பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்வருவதுடன். பாதுகாப்புடன் தனது பட்டப்படிப்பை மேற்கொள்ள உயர்கல்வி அமைச்சு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் கால் வைக்கும்போது நான் கண்ட கனவுகள் இலட்சியப் பாதைகள் அனைத்தும் என் கண்முன்னே வந்தது! அவை அனைத்தும் வந்த சில நொடிகளில் என் கன்னத்தில் இடி விழுந்தது போன்று சத்தம். யார் என்று பார்த்தால் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களாம் அடித்ததற்கும் காரணம் எதுவும் சொல்லாது நகர்ந்து சென்றார்கள் என பாதிக்கப்பட்ட மாணவன் கண்ணீருடன் பதிலளித்துள்ளார்.
இவை அனைத்திற்கும் மேலாக பகிடிவதை என்னும் போர்வையில் தாங்கள் தங்கும் அறைகளில் எங்களை கூட்டிச்சென்று இரக்கம் இன்றி தாக்குகின்றனர்.
எனினும் பல்கலைக்கழகம் சென்றால் எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று எனக்கே தோன்றுகின்றது. எனது கனவுகள் அனைத்தும் புதைந்தது பகிடிவதையால் பட்டப்படிப்பும் இடையில்முற்றுப்பெற்றது. எனவும் தெரிவித்துள்ளார்.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.