யாழில் மீண்டும் புதுப்பொலிவு பெறும் தட்டி வான்கள்!!

யாழ்ப்பாணத்தில் கடந்த நூற்றாண்டின் இறுதிக் காலம்வரை பெரும் புழக்கத்திலிருந்த பொதுமக்கள் போக்குவரத்து சாதனமான தட்டிவான் மீண்டும் புதுப்பொலிவு பெற்று போக்குவரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


இதுகுறித்த மேலதிக விடயங்களினைத் தேடுகிறது இந்த பத்தி….

தமிழர்களை முதுகில் சுமந்து தமிழர்களோடே இடப்பெயர்வு அவலங்களைத் தாங்கிநின்ற தட்டிவான்கள் இப்பொழுது எங்கே? எத்தனைபேருக்கு இது இன்னமும் ஞாபகத்திலிருக்கின்றது?

இது ஒரு பிரித்தானியத் தயாரிப்புத்தான், ஆனாலும் இதற்குரிய அந்தஸ்தையும் அடையாளத்தையும் கொடுத்து நிலைநாட்டியவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்களே.

இன்றைய ‘மினிபஸ்’கள் (தனியார் சிற்றுந்துகள்) ஆற்றுகின்ற சேவையையே அன்றைய தட்டிவான்களும் செய்தன. ஆனாலும் இன்றைய மினிபஸ்களில் மக்கள் நடத்துனர்களால் ‘திட்டுக்கொட்டு’ வாங்குவதும், பயணிகளின் நெரிசல்களால் புழுங்கி அவிவதும், சில்லறைக்காசு கொடுக்காமல் ஏமாற்றப்படுவதும், இன்னும் பிற வதைப்புக்களுமென அன்றைய தட்டிவான்களில் முற்றாகவே காணப்படவில்லை.

அதற்கு ஒரு காரணம் இத்தகைய போக்குவரத்து மீறல்களைக் கண்டவிடத்து லஞ்சம் எனும் போர்வையால் இழுத்துமூடிக் குளிர்காய்கின்ற இன்றைய பொலிஸாரினைப் போலன்றி அன்று விடுதலைப் புலிகள் இருந்தார்கள். மாவீரர்களின் உடலங்கள் துயிலுமில்லங்களை நோக்கிக் கொண்டுசெல்லும் வித்துடல் பவனியிலும் தட்டிவான்களே பங்கெடுத்தன.

வலிகாம இடப்பெயர்வு நிகழ்ந்த பாரிய போர்க்காலமான 1995களில் இதன் அளப்பரிய பங்களிப்பினை ஒவ்வொரு யாழ்ப்பாணத்தவரும் உணர்ந்திருப்பர். உற்ற உறவுகளோடு கூடிமகிழ்ந்திருந்த கோவில்கள், ஒற்றை வரம்புகளில் ஓடிமகிழ்ந்திருந்த வயல்வெளிகள் என அனைத்தையும் இழந்து முற்றத்தில் வீழ்ந்து வெடிக்கும் குண்டுகள் கொடுத்த பீதியினால் கையிலகப்பட்ட பொருட்களோடு நெடுந்தூரம் நடைப்பிணமான அந்த இடப்பெயர்வுக் காலத்தில் தட்டி வான்கள் மறக்கப்படமுடியாதவை.

வலிகாமத்திலிருந்து தென்மராட்சிக்கும் தென்மராட்சியிலிருந்து வடமராட்சி கிழக்குக்கும் வன்னிக்குமென ஒரே கால்நடையாகவே அலைந்த அந்தக் கணங்களில் பல குடும்பங்களின்மீதும் இரக்கப்பட்டு ஏற்றிச்சென்றது இந்த தட்டிவான்களே.

சிறுதூரப் பயணம்தான், ஆனாலும் அப்பயணத்தின்போது ‘புட்காரா’ ரக விமானத்தின் பேரிரைச்சலுடனான வட்டமிடலில் கதிகலங்கிப்போய் தட்டிவானுள்ளே உயிர்வெறுத்து மூழ்கிப்போயிருந்த அந்தச் சொற்பநேரக் கணங்கள் மிகப்பெரியது.

வன்னியில் போர் ஓரளவு ஓய்விற்கு வந்தபின் யப்பானிலிருந்து மினிபஸ்கள் வரத்தொடங்கின. இவை வடக்கிலும் ஆக்கிரமிக்கத்தொடங்கிய 2000ம் ஆண்டுகளின்பின் தட்டிவான்களின் சேவைகள் அஸ்தமிக்கத்தொடங்கின. இன்று இவை எந்தக் கோடிக்குள் அடைபட்டுக்கிடக்கின்றனவோ என மனம் அங்கலாய்க்கின்றது. யுத்த முடிவின்பின்னரும் கொடிகாமத்தில் ஒன்றிரண்டு ஓடித்திரிவதாக கூறப்பட்டுகிறது.

இந்த நிலையில் மீண்டும் யாழ்ப்பாணத்தின் பசுமை கனக்கும் நினைவுகளைச் சுமந்தபடி பழமை மாறாது தட்டிவான் ஒன்று புதுப்பொலிவு பெற்றுவருகின்றமை மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.