ராமநாதபுரத்தில் உற்சாகமின்றிப் பேசிய மோடி!!

ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களைப் பிரதமர் மோடி அறிமுகம் செய்யாமல் சோர்வுடன் பேசியதால் பா.ஜ.க தொண்டர்கள் சோர்ந்து போயினர்.

 ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவரும், தூத்துக்குடி வேட்பாளருமான தமிழிசை, சிவகங்கை வேட்பாளர் ஹெச்.ராஜா, ராமநாதபுரம் வேட்பாளர் நயினார் நாகேந்திரன், நெல்லை அ.தி.மு.க வேட்பாளர் மனோஜ் பாண்டியன் மற்றும் பரமக்குடி சட்டமன்ற வேட்பாளர் சதன் பிரபாகரன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். பகல் 1.35 மணிக்குப் பேச துவங்கிய மோடி, ''கலாம் பிறந்த மகத்தான இப் புண்ணிய பூமியில் வணக்கத்தைத் தெரிவித்து கொள்கிறேன். காசி பார்லிமென்ட் உறுப்பினராக இங்கு வந்துள்ளேன். அப்துல் கலாம் கண்ட கனவுகளை நிறைவேற்றும் இடத்தில் உள்ளோம். அவரது கனவுகளை நனவாக்கி இந்தியாவை வளர்ச்சிக்கு எடுத்துச் செல்வோம். 2019 -ல் இந்தியா 2014-ஐ  விட மாறுபட்டுள்ளது. வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. காஸ் இணைப்பு மூலம் தாய்மார்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆயுஸ்மான் திட்டத்தின் கீழ் 50 கோடி இந்தியருக்குத் தரமான சிகிச்சை வழங்கப்பட உள்ளது. சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அறிக்கையில் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மே 23 -மோடி அரசு மீண்டும் பொறுப்பேற்கும் போது நீர்வளத் துறைக்கு எனத் தனி அமைச்சகம் உருவாக்கப்படும். மீனவர்கள் வாழ்வை மேம்படுத்த புதிய பாதை உருவாக்கி உள்ளோம். மீனவர்களுக்கு புதிய திட்டம் உருவாக்கப்படும். விஞ்ஞானம் மூலம் மீனவர்கள் பல நன்மைகள் அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு வட்டார மொழியில் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மூக்கையூர், பூம்புகார் துறைமுக  பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளது. மீனவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் அவர்கள் சர்வதேச கடல் எல்லை கடக்க வேண்டிய உள்ளது. தூக்குத் தண்டனை வரை சென்ற தமிழக மீனவர்கள் உள்ளிட்ட  1,900 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேம்பாடு, அனைவருக்கும் மேம்பாடு, அனைவரும்  இணைந்த மேம்பாடு குறிக்கோளாக கொண்டுள்ளோம்.  காங்., திமுக கூட்டணிக்கு நாட்டை பற்றிய சிந்தனை இல்லை.

அவர்கள் இலக்கு மோடியை அகற்ற வேண்டும் என்பது மட்டுமே. சர்ஜ்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கையின் போது, திமுக., காங்., கூட்டணி இந்திய ராணுவத்தைக் குறை கூறினர். காலம் மாறி விட்டது. பயங்கரவாத தாக்குதலை அனுமதிக்க முடியாது. வாக்கு வங்கியை நோக்காகக் கொண்ட திமுக., காங்., கூட்டணி பேதம் பேசி வருகின்றனர். சபரிமலை விவகாரத்தில் நம் நம்பிக்கையை அழிக்க முயல்கின்றனர். பா.ஜ.க இருக்கும் வரை அது நடக்காது. காங்., கண்ணோட்டம் வெட்கக்கேடானது. 356 ஐ காங்., பயன்படுத்தி எம் ஜி ஆர் அரசைக் கலைத்தனர். திமுக ஆட்சியையும் கலைத்துள்ளனர். காங்., திமுக., முஸ்லிம் லீக்கிற்கு வாக்களித்தால் குறைவான வளர்ச்சிக்கு வித்திடும். காங் கூட்டணிக்கு வாக்களித்தால் அரசியலில் கிரிமினல் நுழைய வழி வகுக்கும்'' என்றார்.
 
பிரசார கூட்டமாக இருந்தாலும் சரி அல்லது அரசு விழாவாகவும் இருந்தாலும் சரி உணர்ச்சிப் பூர்வமாகவும், ஆவேசமாகவும் பேசுவது பிரதமர் மோடியின் வழக்கம். ஆனால் இதற்கு நேர்மாறாக ராமநாதபுரத்தில் மோடியின் பேச்சு இருந்தது. இதனால் கூட்டத்திற்கு வந்திருந்த பா.ஜ.க தொண்டர்கள் சோர்ந்து போனதுடன், மோடி பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கிருந்து வெளியேறினர். மேலும் மேடையில் இருந்த வேட்பாளர்களை அறிமுகம் செய்தோ அல்லது அவர்களது பெயர்களை குறிப்பிட்டு வாக்களியுங்கள் என்றோ மோடி பேசவில்லை. இதனால் மேடையில் இருந்த தலைவர்கள் மட்டுமல்ல, கூட்டத்தில் பங்கேற்ற கூட்டணி கட்சியினரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.  இக்கூட்டத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், மணிகண்டன் மற்றும் அன்வர் ராஜா எம்.பி, பா.ஜ.க நிர்வாகிகள் சுப.நாகராஜன், குப்புராமு,முரளிதரன், ஆத்ம கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.