850 ஆண்டுகள் பழைமையான தேவாலயத்தில் பயங்கர தீவிபத்து!!

பாரீஸ் நகரின் புகழ்பெற்ற தேவாலயம் நோட்ரே டேம். பிரான்ஸ் நாட்டின் முக்கிய இடங்களில் ஒன்றாகக் கருதப்படுவதும், அந்நாட்டின் அடையாளமாகவும் விளங்கும் 850 வருட பாரம்பர்யம் மிக்க தேவாலயம்.
யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட இந்தத் தேவாலயத்தில் நேற்று மாலை அந்த அசம்பாவித சம்பவம் நடந்தது.

திங்கள் அன்று மாலை வேளையில், தேவாலயத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தேவாலயத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கின்றனர் அதிகாரிகள். மேலும், இது ஒரு விபத்து என்றும், விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்கின்றனர்.

பழைமையான கட்டடத்தின் சுவர்களின் ஆரம்பித்த தீ, மளமளவெனக் கட்டடத்தின் கூரைப் பகுதிக்குப் பரவியது. இந்தக் கட்டடத்தின் கூரை முழுவதும் மரங்களால் செய்யப்பட்டுள்ளதால் தீ வேகமாகப் பரவியதுடன் கூரை முற்றிலுமாக சேதமடைந்தது.

தேவாலய மணி இருக்கும் கோபுரத்துக்கும் தீ பரவியது. ஆனால், சுமார் 500 தீயணைப்பு வீரர்களில் 4 மணி நேர முயற்சிக்குப் பின்னர், கோபுரம் சாய்ந்து விழாமல் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக கடும் புகை எழுந்தது. பொதுமக்கள் பலர் தங்களின் மனதுக்கு நெருக்கமான தேவாலயத்தின் நிலையைக் கண்டு கண் கலங்கி நின்றனர்.

தேவாலயத்தில் நூற்றாண்டுகள் கடந்த கலை வடிவங்கள் இருக்கிறது, அதை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் உள்ளனர். எனினும் புனரமைப்பு பணிகளுக்காகக் கடந்த வாரம் முக்கியமான 16 செப்பு சிலைகள் அகற்றப்பட்டன. அதனால் அவை அனைத்தும் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளன. மேலும், கட்டடத்தின் கூரை தவிர்த்து மற்றப் பகுதிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான். அவர்,  ``இந்தத் தேவாலயம் நாட்டின் உணர்வு. பிரான்ஸ் நாட்டின் அனைத்து குடிமக்களைப் போலவே நானும் நம்மில் ஒரு பகுதி எரிவதைச் சோகத்துடன் பார்க்கிறேன்” என்றார். மேலும், சேதமடைந்த இந்தக் கட்டடத்தை மீண்டும் அதே நிலைக்குக் கொண்டு வர முயற்சிகள் செய்யப்படும். அதற்கு நிதி திரட்டுவதற்கானப் பணிகளும் தொடங்கும் என்றார். இது பழைமையான கட்டடம் என்பதால் இதன் சேதங்களை சரி செய்ய அதிக நிதி தேவைப்படும்.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஃபிரான்கோயிஸ் ஹென்றி, இந்தத் தேவாலயத்தை சரிசெய்ய தானும் தன் குடும்பத்தினரும் 100 மில்லியன் யூரோக்களை வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 780 கோடி ரூபாய் ஆகும். பலர் தற்போது தேவாலயத்தைச் சரி செய்யும் பணிக்கு நிதி வழங்க முன்வந்துள்ளனர்.


இந்தத் தேவாலயத்துக்கு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 13 மில்லியன் மக்கள் வருகின்றனர். இதில் ஈஃபில் கோபுரத்தைக் காண வரும் மக்களின் எண்ணிக்கையைவிட அதிகம். இந்தத் தேவாலயம் 12 -ம் நூற்றாண்டு கட்டப்பட்டுள்ளது. இரண்டு உலகப் போரின்போதும் எந்தச் சேதத்தையும் இந்தத் தேவாலயம் எதிர்கொள்ளவில்லை.

கடைசியாக பிரெஞ்ச் புரட்சி நடந்தபோது சேதம் ஏற்பட்டது. பின்னர் அது சரி செய்யப்பட்டது. 8 நூற்றாண்டுகளுக்கு மேல் அந்த நாட்டு மக்களின் உணர்வோடு வாழ்க்கையோடு இணைந்துபோன இந்தத் தேவாலயம் தீ விபத்தில் சேதமானதைக் கண்டு பலர் கதறி அழுதனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.