உண்மைகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கு உயரிய விருது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்த ‘நியூயோர்க் டைம்ஸ்’, ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ ஆகிய பத்திரிகைகளுக்கு இந்த ஆண்டு புலிட்ஷர் (Pulitzer Prize) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


‘நியூயோர்க் டைம்ஸ்’, ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ ஆகிய இரு பத்திரிகைகளும் வெவ்வேறு புலனாய்வுகளை மேற்கொண்டு ட்ரம்ப் மற்றும் ட்ரம்ப் குடும்பத்தினரைப் பற்றிய சில உண்மைத் தகவல்களை வெளிக்கொண்டுவந்தன.

அவ்வகையில் குறித்த விருதுகளுக்கான பத்திரிகைகளின் விபரங்கள் நேற்று (திங்கட்கிழமை) புலிட்ஷர் விருதுக்குழுவால் அறிவிக்கப்பட்டன.

‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை தனது புலனாய்வு மூலம், தன்னிடம் உள்ள சொத்துகள் அனைத்தும் தானே சம்பாதித்தது என்ற ட்ரம்பின் கூற்று பொய் என நிரூபித்ததற்காகவும் அவரது மாபெரும் வணிக சாம்ராஜ்ஜியம் மிகப்பெரிய அளவில் வரி ஏய்ப்புக்கான சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி வந்ததை நிரூபித்ததற்காகவும் மதிப்புவாய்ந்த பத்திரிகை விருது வழங்கப்படுவதாக புலிட்ஷர் விருதுக்குழு அறிவித்துள்ளது.

மேலும், 2016இல் ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலகட்டத்தில் இரு பெண்களுடன் ட்ரம்ப் நெருக்கமாக இருந்ததாக கூறப்படும் சம்பவத்தில் அதுகுறித்த இரகசியங்களை வெளியிடாமல் இருக்கவும் அதைப்பற்றி பேசாமல் இருப்பதற்காகவும் அவ்விரு பெண்களுக்கு பணம் வழங்கப்பட்ட இரகசியத்தை ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ பத்திரிகை வெளியிட்டது. புலனாய்வு மூலம் இத்தகவலை வெளியிட்டமைக்காக இப்பத்திரிகைக்கு இந்த ஆண்டு புலிட்ஷர் விருது வழங்கப்படுகிறது.

அதேபோல், கடந்த 2018, பெப்ரவரி மாதத்தில் மார்ஜோரி ஸ்டாங்மேன் டாக்லாஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டதையடுத்து இதை முன்கூட்டியே தடுக்கத் தவறிய மாகாணத்தின் சட்ட அமுலாக்க அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகியவற்றின் மெத்தனப் போக்குகளை மிகச்சரியாக வெளியுலகுக்கு எடுத்துக்காட்டிய ‘தி சௌத் ஃப்ளோரிடா சன் சென்டினல்’ பத்திரிகைக்கும் இந்த ஆண்டு புலிட்ஷர் விருது வழங்கப்படுகிறது.

இவ்விழாவில் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பேர்க் நகரில் தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்ததை வெளிக்கொண்டுவந்த ‘பிட்ஸ்பர்க் போஸ்ட்’ இதழுக்கும், யேமனில் நடைபெற்றுவரும் போர் அவலங்களை உலகத்திற்கு வெளிக்கொணர்ந்த ‘தி அசோஸியேடட் பிரஸ்’ இதழுக்கும் மியான்மாரில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுவந்த அட்டூழியங்களை வெளிக்கொணர்ந்த ‘ரொய்ட்டர்ஸ்’க்கும் புலிட்ஷர் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.