அணையாத் தீபம் அன்னை பூபதி!!

தேசபக்தி எனப்படுவது அடிமனதில் எழுகின்ற ஒரு தீ. அது ஒரு மனிதனை ஆட்கொண்டு விட்டால் இலட்சியத்துக்காக உயிரைத் தருவதற்கும் கூட அவன் தயங்குவதில்லை. அவ்வாறு தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து தேசத்தையும் அதன் கௌரவத்தையும் காப்பவர்கள் தேசபக்தர்கள் எனக் கருதப்படுகின்றனர். அவர்கள் தேசத்தினாலும், தேச மக்களாலும் என்றென்றும் நினைவு கூரப்படுவர்.
விடுதலைப் போராட்டம் ஒன்று நடைபெறுகின்ற தேசத்தில் தேசப்பற்றாளர்களுக்கான கௌரவம் அபரிமிதமாக இருக்கும். அது தேசப்பற்றாளர்களைக் கௌரவிப்பதாக மட்டும் அமையாது, புதிய தேசப்பற்றாளர்கள் உருவாவதற்கான உந்து சக்தியாகவும் அமைந்து விடுகின்றது. அத்துடன், தேசத்தின் மீது காதல் கொண்டோருக்கு தமது பணியை மென்மேலும் விஸ்தரிப்பதற்கான உத்வேகத்தையும் தருகின்றது.
தேசப் பற்றாளர்களாக விளங்குபவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டியது அவசியமல்ல. அதேவேளை, அவர்களின் செயற்பாடுகள் ஆயுதப் போராட்டத்துக்குச் சற்றும் குறைவானதல்ல. ஆயுதம் ஏந்திய போராளிகளுக்குக் குறி வைப்பதற்கு முன்னதாகவே தேசப் பற்றாளர்களை அகற்றிவிட எதிரி துடிப்பதில் இருந்தே இவர்களின் பணி எதிரியின் இருப்புக்கு எத்துணை இடைஞ்சலாக இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
உலகப் பந்தின் ஒரு மூலையில் உள்ள இலங்கைத் தீவிற்குள் மட்டுப் பட்டதாகவே ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போதிலும் அது பல சாதனைகளைப் படைத்திருக்கின்றது. ஏனைய விடுதலைப் போராட்டங்களுக்கு பல முன்மாதிரிகளைத் தந்திருக்கின்றது. போராளிகளின் செயற்பாடுகளில் மட்டுமன்றி தேசப் பற்றாளர்களின் அர்ப்பணிப்பில் கூட பல முன்மாதிரிகள் படைக்கப் பட்டிருக்கின்றன. அதிலொன்றே ‘அணையாத் தீபம்” அன்னை பூபதியின் தியாகமும் எனலாம்.
மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் நலனுக்காக உயிர் ஈந்தோரை நினைவு கூரும் முகமாக தாயக மக்களால் பிரதி வருடமும் ஏப்ரல் 19 இல் அனுட்டிக்கப்படும் ‘தமிழீழ நாட்டுப்பற்றாளர் தினத்தை” ஒட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது.
* ஈழத் தமிழினத்தின் தேசிய விடுதலைக்கான போராட்டத்தில் ஒளியேற்றிய தீபங்கள் பற்பல. அவற்றின் தியாகங்கள் விலை மதிக்க முடியாதவை. அவை ஒவ்வொன்றும் தன்னளவில் தனித்துவமானவையும் கூட. அத்தகையவற்றுக்குள்ளும் ஈண்டு குறிப்பிடத்தக்க தீபங்கள் ஒருசில உள்ளன. அந்த வரிசையில் வரும் அணையாத தீபங்களுள் ஒன்றே ‘அணையாத் தீபம்” அன்னை பூபதி.
ஈழ தேசிய விடுதலைப் போரட்டத்தில் யுத்த களத்தில் தீரமுடன் போராடி தம்முயிர் ஈந்த மாவீரர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் அதிகம். அவர்களுள் தமது அடையாளத்தை இறுதிவரை வெளியிடாது ஆகுதியாகிய கரும்புலிகளும் அடக்கம். எதிரியோடு சரிக்குச் சமமாக ஆயுதமேந்தி – தற்காப்புக்கும், தாக்குதலுக்கும் வாய்ப்புள்ள ஒரு களத்தில் – போராடி வீரமரணம் எய்தியோரின் தியாகம் ஒருவகையினதென்றால் நிராயுதபாணியாக, தற்காப்புக்கு எத்தகைய வாய்ப்பும் அற்ற அகிம்சைக் களத்தில், மனவுறுதி ஒன்றை மாத்திரமே ஆயுதமாகக் கொண்டு மாண்புடன் போராடி மடிந்தோர் வேறு வகையினர். இவர்களின் தியாகம் ஒரு வகையில் முன்னைய வகையினரை விட ஒருபடி உயர்ந்தது எனலாம்.
உலகப் பொதுமையான இந்தப் போராட்ட வடிவத்தை சகல விடுதலை அமைப்புக்களையும் போன்றே ஈழ தேசிய விடுதலைப் போராட்டமும் உள்வாங்கிக் கொண்டது. அதன் அடையாளமாக இன்றும் எம்மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாட்டுப் பற்றாளர் அன்னை பூபதியும், ‘தியாக தீபம்” திலீபனும் ஆவர்.
ஒரு போராளியாக ஆயுதப் பயிற்சியைப் பெற்று, ஒரு மக்கள் தலைவனாகப் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவத்துடன் உண்ணா நோன்பிருந்து தன்னை வருத்தி திலீபன் செய்த தியாகம் மகத்தானது, தன்னிகரற்றது. வாழ்வின் வசந்தத்தில் இருந்த அவன், பூரண வாழ்க்கையை வாழ்ந்து, அனுபவிக்க வேண்டியவை அனைத்தையும் அனுபவிக்க முன்னரேயே கொண்ட இலட்சியத்துக்காக உயிரைத் துறந்திருந்தான்.
ஆனால், அன்னை பூபதியோ சாதாரண குடும்பப் பெண்மணியாக இருந்து கொண்டே தாய்நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர். பெரும்பாலான தாய்மாரைப் போன்று தேச விடுதலைப் போராட்டத்தில் பார்வையாளராக மாத்திரம் இருந்துவிட்டுப் போகாமல் காத்திரமான பங்காளியாக மாறி தமிழின வரலாற்றில் தடம் பதித்தவர். வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்து மரணம் என்பதன் விளைவைத் தெரிந்து கொண்ட பின்னரும் கொண்ட இலட்சியத்துக்காக வைராக்கியத்துடன் இருந்து தனது வாழ்வைத் தியாகம் செய்தவர்.
அவர் தனது தேசப்பற்றை நிரூபிக்கத் தெரிவு செய்திருந்த களம் மிகவும் வித்தியாசமானது, அதே நேரம் அது சவால் நிறைந்ததாகவும் இருந்தது.
பேரினவாதம் தமிழ் மக்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக மாறிய நிலையில் சிங்களப் பேரினவாதத்தின் அடிமைத் தளையில் இருந்து விடுபடும் நோக்குடனேயே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப் பட்டது. தேசியம், தாயகம், தன்னாட்சி ஆகிய உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவென சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராகப் போராடிய தமிழ் மக்கள் ஒரு காலகட்டத்தில் இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராகவும் போராட வேண்டிய நிலைக்குத்; தள்ளப் பட்டார்கள்.
தமிழ் மக்களின் நலன் பேணும் நோக்கில் செய்து கொள்ளப் பட்டதாக வர்ணிக்கப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தம் சிங்களப் பேரினவாதிகளின் குள்ளநரித் தனத்தால், தமிழ் மக்களின் நலனை மறுதலித்து தனது வல்லாதிக்க நலனை மேம்படுத்தும் சிந்தனையின் பால் இந்தியாவைத் தூண்டியது. இதன் விளைவாக தமிழ் மண்ணில் மீண்டும் ஒரு இரத்தக் களரி உருவானது.
தமது தந்தையர் நாடான இந்தியாவை ஒரு இரட்சகராகப் பார்த்து வந்த தமிழ் மக்களுக்கு, இந்தியாவுக்கு எதிரான ஒரு ஆயுதப் போராட்டம் என்பது ஜீரணிக்க முடியாத விடயமாக இருந்தது. இந்திய இராணுவம் ஈழத் தமிழ் மண்ணில் நிலை கொண்டிருந்த சுமார் 3 வருட காலத்தில் இந்தியா தொடர்பிலான அடையாளச் சிக்கல் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இருந்து வந்ததை மறைப்பதற்கில்லை.
அவ்வாறான ஒரு சூழலிலேயே அன்னை பூபதி இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல் களமிறங்கினார். அன்னையர் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி திருமதி டேவிட் அன்னம்மா உண்ணா நோன்பில் குதித்து, அவர் இந்திய இராணுவத்தினாலும், கைக் கூலிகளாலும் பலவந்தமாக அகற்றப்பட்ட நிலையிலேயே அன்னை பூபதி துணிவுடன் உண்ணா நோன்பில் ஈடுபட முன்வந்தார்.
சாகும்வரை தனது உறுதியில் இருந்து தளராது அவர் மேற்கொண்ட உண்ணா நோன்புப் போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி தமிழீழப் பிரதேசமெங்கும் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கியது. அவரது போராட்டத்தை ஒட்டி தாயகம் முழுவதிலும் பல்வேறு எழுச்சி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
எனினும், அவரின் கோரிக்கைகளை இந்திய வல்லாதிக்கம் ஏற்றுக் கொள்ள முன்வராத நிலையில் 1998 ஏப்ரல் 19 ஆம் திகதி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் குருந்தை மரத்தின் கீழே அவரின் ஆவி பிரிந்தது.
அகிம்சையைப் பேசிக் கொண்டே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிகப் பாரிய அடக்குமுறை மற்றும் நாசகாரச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் இந்திய வல்லாதிக்கத்தின் சுயரூபம் அன்று மீண்டுமொருமுறை வெளிப்பட்டது. அதேவேளை, தமிழீழம் ஒரு உன்னதப் பெண்மணியை இழந்து கண்ணீர் வடித்தது.
அன்னை பூபதி உண்ணா நோன்பிருந்த காலகட்டத்தில் அவரின் மனவுறுதியைக் குலைக்கவும், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் இந்தியப் படைகளும் அவர்களின் கைக்கூலிகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இச் செயன்முறையில் அவர்கள் சாம, தான, பேத, தண்ட முறைகளைப் பாவித்தனர். ஆயினும், இவை எவற்றுக்கும் அன்னை பூபதி மசியவில்லை. மாறாக, அவரின் மனவுறுதி மேலும் அதிகரிக்கவே செய்தது.
தங்கள் முயற்சியில் தோற்றுப்போன எதிரிகள் ஈற்றில் அன்னை பூபதி மீது சேறு பூசும் முயற்சியில் ஈடுபட்டனர் அவரின் உன்னத தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் கட்டுக் கதைகளைப் பரப்பினர். இன்றும் கூட அவர்கள் ஓய்ந்துவிட வில்லை.
* தேச விடுதலைப் போராட்டத்திலே ஒரு பொதுமகன் எத்துணை உட்சபட்ச தியாகத்தைப் புரிய முடியும் என்பதற்கு அன்னை பூபதி ஒரு சிறந்த உதாரணம். அவரின் தியாகம் ஈடிணையற்றது. அது அன்னையர் குலத்துக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கே பெருமை சேர்க்கின்றது.
* ஆனால், முள்ளிவாய்க்காலின் பின்னான இன்றைய காலகட்டத்தில் எமது உறவுகள் தமது கடமையை மறந்தவர்களாக, சுயநலமிகளாக, மனம்போன போக்கில் வாழ முனைவதைப் பார்க்கிறோம். சாதாரண மனிதர்கள் முதற்கொண்டு அரசியல்வாதிகள் வரை ‘இப்படித்தான் வாழவேண்டும்” என்ற கோட்பாட்டை விடுத்து ‘எப்படியும் வாழலாம்” என்ற கோட்பாட்டுடன் வாழ நினைப்பதைப் போன்று தென்படுகின்றது.
பைபிளில் கூறப்படுவதைப் போன்று ‘அவர்கள் அறியாமற் செய்கிறார்கள்! அவர்களை மன்னியும்!” என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றுவிட முடியாத அளவிற்கு ஆபத்தான போக்கு இது. சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு வாழ்வது இயற்கையின் இயங்கியலே ஆயினும், கொண்ட கொள்கையையும், இலட்சியத்தையும் சமரசம் செய்வதென்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.
அன்னை பூபதியைப் போன்ற நாட்டுப் பற்றாளர்கள் எந்த இலட்சியத்தை எட்ட வேண்டும் என்பதற்காகத் தமது இன்னுயிர்களைத் துறந்தார்களோ, அந்த இலட்சியம் பற்றிய நினைவை மறந்தவர்களாகவே இன்று எம்மவர்கள் வாழ நினைக்கிறார்கள். கடந்த 3 தசாப்தங்களாக தமிழ் மக்களின் தலைமை அரசியற் சக்தியாக விளங்கி வந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பலம் நிர்மூலமாக்கப் பட்டமையின் விளைவாகவே இந்நிலை உருவாகியுள்ளது.
* தமிழ் மக்களின் அரசியல் பலமாக இதுவரை விடுதலைப் புலிகளே விளங்கி வந்தார்கள். அந்தப் பலத்தை தமிழ் மக்கள் மீளவும் தமது கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கூடாக அன்னை பூபதி போன்ற நாட்டுப் பற்றாளர்கள் கண்ட கனவை நனவாக்க முடியும். இதுவே, அவரைப் போன்று தேசத்துக்காக உயிர் துறந்த நாட்டுப் பற்றாளர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும்.
Powered by Blogger.