1990 களுக்கு முன்பு யாழ்ப்பாணத்துத் திரைப்பட மாளிகைகள்..!!

1990 களுக்கு முன்பு யாழ்ப்பாண நகரத்தில் இருந்த சினிமா திரைப்பட மாளிகைகள்


1. ராஜா 2. ராணி 3. வெலிங்டன் 4. லிடோ 5. றியோ 6. ஹரன் 7. சாந்தி 8. றீகல் 9. மனோகரா 10. ஸ்ரீதர் 11. மஹேந்திரா 12. வின்சர்

நான் எனது சிறு பராயத்தில் மிகச் சிறந்த திரைப்பட ரசிகன், அதற்குக் காரணம் எனது தந்தையார், அவரும் சிறு வயது முதல் பார்க்காத திரைப்படமில்லை, அவர் பல வருடங்கள் இந்தியாவில் இருந்து படித்தவர். அதனால் திரைப் படங்களை பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது, நான் பிறந்தது முதல் தரம் 5 வரை எனது தந்தையாரின் கொடிகாமத்தில் உள்ள வீட்டில் தான் வாழ்ந்தேன், அப்பொழுது கூட எனது தந்தையார் மாதம் ஒரு முறை எங்களை யாழ்ப்பாணத்திற்கு கூட்டிச் சென்று திரைப்படங்களை காண்பிப்பார், சில சமயம் ஒரே நாளில் இரு திரைப்படங்களை பார்த்த அனுபவமும் உண்டு, ( இரு படங்களிலும் ஒரே கதாநாயகன் என்றால் திரைப்படம் பார்த்த அடுத்த நாள் கதை குழம்பிவிடும் ) ஆறாம் தரம் படிக்க யாழ் பரியோவான் கல்லூரியில் அனுமதி கிடைத்ததால் அதன் பின் யாழ்ப்பாணதில் இருந்த ஏன் தாயாரின் வீட்டிற்கு மாறினோம். அங்கு சென்ற பின் திரைப்படம் பார்ப்பதில் எந்தத் தடங்கலும் எனக்கு இருக்கவில்லை,

அனைத்து யாழ்ப்பாண திரை அரங்குகளிலும் நான் திரைப்படங்களிப் பார்த்துள்ளேன். அந்த நினைவலைகளை இங்கு உங்களுடன் பகிர்கின்றேன்.

1. ராஜா ( கஸ்தூரியார் வீதியில் தற்பொழுதும் உள்ளது, வின்சர் தியேட்டருக்கு முன்பாக ) யுத்த காலத்தில் இந்த இடத்தில் ஒரு மினி தியேட்டரும் இருந்ததாக ஞாபகம், தற்பொழுது மறு சீரமைக்கப்பட்டு இயங்குகிறது, எம், ஜி . ஆர் சரோசாதேவியுடன் இந்த திரைப்பட மாளிகைக்கு முன்பு வந்து சென்ற வரலாறும் உண்டு, நான் எட்டாம் வகுப்பில் படிக்கும் பொழுதில் என்று நினைக்கிறேன் இந்தப் பட மாளிகையில் மன்மத லீலை என்ற கமலஹாசனின் திரைப்படம் ஓடியது , அப்படம் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற காரணத்தால் என்னால் பார்க்க முடியாமல் போனது. இதன் உரிமையாளர் எஸ்,டி .தியாகராஜா. எம்.ஜி.ஆரின் நீரும் நெருப்பும்,காவல்காரன்,ஒளி விளக்கு போன்ற திரைப் படங்களும் சிவாஜிகணேசனின் பாபு என்ற திரைப் படமும் நீண்ட நாட்கள் ஓடி சாதனைகள் செய்த திரையரங்கம் இதுவாகும். இந்த திரையரங்கின் உள்ளே மாடிப் படிகளுக்கருகில் எம்.ஜி.ஆர் சரோசாதேவியுடன் இந்த திரையரங்கிற்கு வருகை தந்து இருந்த புகைப் படங்கள் வைக்கப் பட்டு இருந்தன, திரை அரங்கினுள் குடும்ப அறைகள் இந்த திரை அரங்கில் இருந்தன,.

2. ராணி ( யாழ் பேருந்து நிலையத்துக்கு முன்பாக மின்சார சபை வீதியில் அமைந்து இருந்தது,) இந்த திரைப்பட மாளிகையில் பல்கணி (Balcony) இல்லை.எம்.ஜி.ஆரின் நாளை நமதே , எம்.ஜி.ஆரின் விவசாயி, கமலஹாசனின் சகலகலாவல்லவன், சிவாஜி கணேசனின் சொர்க்கம், நீயா என்ற ஸ்ரீபிரியாவின் படம் போன்ற படங்களை இங்கு பார்த்ததாக ஞாபகம். திரைப்பட மாளிகையின் பெரும் பகுதி தகரத்தால் ஆனது, வசதிகள் குறைந்த திரைப்பட மாளிகை,

3. வெலிங்டன் ( ஸ்டான்லி வீதி , ஆஸ்பத்திரி பின் வீதி சந்தியில் அமைந்து இருந்தது,) திரைப்பட மாளிகையின் பெரும் பகுதி தகரத்தால் ஆனது, வசதிகள் குறைந்த திரைப்பட மாளிகை, இங்குதான் ரஜனிகாந்த்தின் ஆயிரம் ஜென்மங்கள், ராஜீவின் ரயில் பயணங்கள்,போன்ற படங்களிப் பார்த்தேன்,

4. லிடோ ( பழைய வின்சர் ) ஸ்டான்லி வீதியில் அமைந்து இருந்தது, (ஸ்டான்லி வீதி கஸ்தூரியார் வீதி சந்தியில்அமைந்து இருந்தது)) இந்த திரைப்பட மாளிகையில் பல்கணி (Balcony) இல்லை. அகலம் குறைந்த சிறிய பட மாளிகை. ஆகவே கட்டணத்தில் சிறு சலுகை காணப்பட்டது. லிடோ மற்றும் வெலிங்டன் ஆகியவை ஒரே முகாமைத்துவத்தின் கீழ் இருந்ததால் சில சந்தர்ப்பங்களில் ஒரே படம் இரு பட மாளிகைகளிலும் 30 நிமிட இடைவெளி விட்டு ஓடும் .ஒரு திரைப் படம் 30 நிமிடங்கள் கொண்ட நான்கு அல்லது ஐந்து திரைப்படச் சுருள்களால் ஆனது. முதலில் வெலிங்டனில் திரைப் படம் ஓடத் தொடங்கும். முதலாவது சுருள் ஓடி முடிக்கப்பட்ட பின்பு அந்தச் சுருளை உடனடியாக காரில் எடுத்துக்கொண்டு லிடோ திரைப்பட மாளிகைக்கு கொண்டு சென்று படத்தை ஓடவிடுவார்கள். இப்படியாக திரைப்படச் சுருள்கள் மாறி மாறி பரிமாறப்பட்டு அரை மணித்தியால இடைவெளியில் இரு திரை அரங்குகளிலும் ஓடவிடப்படும், இதனால் திரைப்பட உரிமையாளருக்கு கொள்ளை இலாபம் கிட்டும், ஒரு திரைப்பட சுருளை இந்தியாவிலிருந்து காசு கொடுத்து வாங்கி இரு மடங்காக இலாபம் காண்பார்கள். எனினும் எம்.ஜி.ஆர். சிவாஜிகணேசன் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் தான் இவ்வாறாக ஓடக்கூடியவை என்பதும் குறிப்பிடத்தக்கது, இங்குதான் ஞானக் குழந்தை, பாட்டி சொல்லைத்த தட்டாதே, சிகப்பு ரோஜாக்கள், பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் போன்ற படங்கள் திரையிடப் பட்டன. சிகப்பு ரோஜாக்கள், பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் போன்ற படங்கள் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற காரணத்தால் என்னால் பார்க்க முடியாமல் போனது

5. றியோ ( யாழ் பழைய மாநகரசபை கட்டடத்தின் பின் பகுதியில் ( சுப்பிரமணியம் பூங்காவுக்கு முன்பாக கண்டி வீதியில் அமைந்து இருந்தது,) முத்துராமன், ஜெயலலிதாவின் "திக்குத் தெரியாத காட்டில்" என்ற திரைப்படத்தை இங்கு கண்டு களித்தேன்

6. ஹரன் ( யாழ் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள ஒழுங்கையில் யாழ் கோட்டைக்கு அருகில் அமைந்திருந்தது,) திரைப்பட மாளிகையின் பெரும் பகுதி தகரத்தால் ஆனது, வசதிகள் குறைந்த திரைப்பட மாளிகை, நீல மலர்கள் என்ற கமலஹாசனின் திரைப் படத்தை இங்கு பார்த்த ஞாபகம் உண்டு.

7. சாந்தி ( யாழ் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள ஒழுங்கையில் யாழ் கோட்டைக்கு அருகில் அமைந்திருந்தது, இதனருகில் முன்பு சம்பந்தன் கிளினிக் இருந்தது, ) இந்த திரைப்பட மாளிகையின் விசேடம் யாதெனில் சூப்பர் பல்கணி இங்கு இருந்தது, அதாவது பல்கணிக்கு மேல் இன்னுமொரு பல்கணி,) சாந்தித்தியேட்டர் இப்ப நாதன்ஸ் தியேட்டரா மாறியிருக்குது

8. றீகல் (யாழ் கோட்டைக்கு முன்பாக வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் அமைந்து இருந்தது, அநேகமாக ஆங்கிலப் படங்கள் தான் அதிகமாக இங்கு ஓடும், நான் பரியோவான் கல்லூரியில் ஆறாம் வகுப்பில் கற்கும் பொழுது இந்த திரைப்பட மாளிகைக்கு மாணவர்கள் எல்லோரையும் ஆசிரியர்கள் அழைத்துச் சென்று "Jungle Book " என்னும் ஆங்கில கார்ட்டூன் திரைப்படத்தை காணவைத்தார்கள்.) ) ரீகல் திரையரங்கிலும் வின்சர் திரையரங்கிலும் சில சந்தர்ப்பங்களில் ஒரே படம் இரு பட மாளிகைகளிலும் 30 நிமிட இடைவெளி விட்டு ஓடும். ஜேம்ஸ் பாண்ட் 007, புரூஸ்லி போன்றோரின் திரைப் படங்களுக்கு இந்த திரையரங்குகளில் இளைஞர்கள் அலை மோதினர்,

9. மனோகரா ( கே.கே எஸ் வீதியில் நாவலர் வீதி சந்தியில் அமைந்திருந்தது, யாழ்ப்பாணத்தில் இருந்த "A" சான்றிதழ் பெற்ற மிகச் சிறந்த , வசதிகள் கொண்ட திரைப்பட மாளிகை இதுவாகும், இங்கு மிகப் பெரிய கார் தரிப்பிடம் உண்டு.திரை அரங்கினுள் குடும்ப அறைகள் இந்த திரை அரங்கில் இருந்தன,

10. ஸ்ரீதர் ( ஸ்டான்லி வீதியில் ஆரியகுளம் சந்திக்கு மிக அருகில் உள்ள புகையிரத்தைக் கடவைக்கு அருகில் அமைந்து இருந்தது,) யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் திரைப்படங்கள் சில திரையிடப்பட்ட வரலாறு இந்த திரை அரங்கிற்கு உண்டு, அதன் பின் பல ஆண்டுகளாக ஈ.பி.டி.பி யின் கட்டுப் பாட்டில் கட்சி அலுவலகமாக இருந்தது, இந்த திரைப்பட மாளிகையில் சிவாஜி கணேசனின் கௌரவம், எம்.ஜி .ஆரின் மீனவ நண்பன், போன்ற படங்கைப் பார்த்தேன், ஜெய் சங்கரின் ரத்தத்தின் இரத்தங்கள் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற காரணத்தால் என்னால் பார்க்க முடியாமல் போனது.திரை அரங்கினுள் குடும்ப அறைகள் இந்த திரை அரங்கில் இருந்தன, ஜேம்ஸ் பாண்ட் 007, புரூஸ்லி போன்றோரின் திரைப் படங்களுக்கு இந்த திரையரங்குகளில் இளைஞர்கள் அலை மோதினர்,

11. வின்சர் - கே.கே. எஸ் வீதியில் ஸ்டான்லி வீதி சந்திக்கு அருகில் அமைந்து இருந்தது, யாழ்ப்பாணத்தில் இருந்த மிகப் பிரம்மாண்டமான , கூடிய இருக்கைகள் கொண்ட பெரிய திரைப் பட மாளிகை இதுவாகும், இந்த திரைப் பட மாளிகையின் ஒரே ஒரு பெரிய குறைபாடு கார் தரிப்பிடம் இன்மையாகும், இதனால் தான் " A " சான்றிதழ் பெறத் தவறியது, 90 களின் பின் பல ஆண்டுகளாக யாழ் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பாவனையில் களங்சியமாக இருந்தது, இந்த திரைப்பட மாளிகையில் சிவாஜி கணேசனின் பைலட் பிரேம் நாத் , சுதாகரின் நிறம் மாறாத பூக்கள், கமலஹாசனின் மூன்று முடிச்சு, சிவாசிகணேசனின் வசந்த மாளிகை, வாடைக் காற்று என்ற ஈழத்து தமிழ் திரைப் படம் போன்ற படங்களைப் பார்த்தேன்,திரை அரங்கினுள் குடும்ப அறைகள் இந்த திரை அரங்கில் இருந்தன,

12. மஹேந்திரா - யாழ் சுண்டிக்குளி வீதியில் யாழ் பரியோவான் கல்லூரிக்கு முன்பாக அமைந்து இருந்தது, பின்பு இந்த திரைப்பட மாளிகை கட்டடத்தை யாழ் பரியோவான் கல்லூரியே வாங்கி கல்லூரி உடைமையாக்கிக் கொண்டது, இந்த திரைப் பட மாளிகையில் நான் இந்தத் திரைப்படத்தையும் பார்க்கவில்லை என்றாலும் இங்கு நான் கல்வி கற்றுள்ளேன்.

எண்பதுகளின் பிற் பகுதியில் யாழ்பாணத்து நகர திரையரங்குகள் இயங்காத நிலையை அடைந்த நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட மினி திரையரங்குகள் முளைத்தன. இவை வெறுமனே ஒரு தொலைக்காட்சிப் பெட்டித் திரையரங்குகளே. சிலவற்றில் தொலைக்க காட்சிப் பெட்டிகளின் முன்பு உருப் பெருக்கிக் கண்ணாடி வைக்கப் பட்டிருக்கும். அவ்வளவும்தான், இளைஞர்கள் இங்கு அலை மோதினார்கள். காரணம் நீலப் படங்கள்தான் அதிகமானவற்றில் ஓடின, விடுதலை இயக்கங்கள் பலவும் இவற்றைக் கண்டித்தன. பார்த்தவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் தண்டணையும் வழங்கின, யாழ் இந்துக் கல்லூரிக்கு அருகில் இயங்கிய பவித்ரா மினி பிரபல்யமானது.

தற்பொழுது யாழ்ப்பாண நகரில் ஒருசில புதிய நவீன வசதிகள் கொண்ட திரைப்பட மாளிகைகள் இயங்குவதாக அறிகிறேன். (செல்லா திரையரங்கு, கார்கீல்ஸ் திரையரங்கு, மஜெஸ்டிக் சினிப்லெக்ஸ் திரையரங்கு)

தாயகத்தை விட்டு கனடாவிற்கு வந்து எட்டு ஆண்டுகளாகி விட்டன தற்போதைய சரியான விபரங்கள் தெரியவில்லை, அறிந்தவர்கள் இவ் முக நூலில் அறியத் தாருங்கள்,

யாழ் நகரத்துக்கு வெளியே யாழ்ப்பாணத்தில் இருந்த ஏனைய திரை அரங்குகள் சில

1.இணுவில் - காளிங்கன் திரைப் பட மாளிகை (நியூ காளிங்கன் )
2.நெல்லியடி லக்சுமி திரையரங்கு , மஹாகாத்மா திரையரங்கு.
3. சாவகச்சேரியில் தேவேந்திரா திரையரங்கு , வேல்ஸ் திரையரங்கு.
4. சுன்னாகத்தில் நாகம்ஸ் திரையரங்கு
5. காங்கேசன்துறையில் யாழ் திரையரங்கு , ராஜநாயகி திரையரங்கு.
6.வல்வெட்டித் துறையில் யோகநாயகி திரையரங்கு , ரஞ்சனா திரையரங்கு.
7.தெல்லிப்பளையில் துர்க்கா திரையரங்கு
8.அச்சுவேலியில் லிபேர்ட்டி திரையரங்கு
9.பருத்தித்துறையில் சென்றல் திரையரங்கு
10. புலோலியில் காசில் திரையரங்கு( புலோலி சினிமா)
11.மானிப்பாயில் ஒரு திரையரங்கு (பெயர் மறந்துவிட்டது )

எழுபது - எண்பதுகளில் யாழ் திரை அரங்குகள் பற்றிய மறக்க முடியாத சில விடயங்கள்.

1. இலங்கை வானொலியில் வாரா வாரம் ஒளிபரப்பப்படும் கே.எஸ். ராஜாவின் வீட்டுக்கு வீடு வானொலிப்
பெட்டிக்கருகில் ... என கம்பீரக் குரலில் வரும் திரையரங்கம் என்னும் விளம்பர நிகழ்ச்சி.

2.திரைப்படப் பாடல் புத்தகங்கள்.

3.வீதிகளில் புதிய திரைப்பட சுவரொட்டிகள்

4.திரைப் பட மாளிகைக்குள் திரைப்படம் தொடங்க முன்பும் இடைவேளை நேரத்திலும் சிறிய பெட்டிகளில் இனிப்பு, கச்சான் பக்கற் , பீடா என பலவற்றையும் வைத்துக் கொண்டு அதை தோளில் வைத்து தூக்கிக் கொண்டு விற்று வருவோர்,

5. திரை அரங்கின் முன் வானுயர அமைக்கப் படும் நடிகர்களின் கட்டவுட்டுகள்,

6.அன்றைய ஈழநாடு தினப் பத்திரிகையின் கடைசிப் பக்கத்துக்கு முன் உள்ள பக்கத்தில் வரும் யாழ்ப்பாண திரையரங்குகளில் ஓடும் திரைப்பட விளம்பரங்கள்

7. திரைப் படம் ஆரம்பமாகும் போதும் இடைவேளை முடியும் போதும் கணீர் என ஒலிக்கும் மணிச சத்தம்,

8.போயா பௌர்ணமி விடுமுறை நாளில் திரை அரங்குகளுக்கு விடுமுறை , திரைப் படம் அன்றைய நாளில் ஓடாது, சிலர் மறந்து போய் அன்று திரை அரங்குகளுக்குப் போய் ஏமார்ந்து திரும்புவினம் ( நானும் அனுபவப்பட்டுள்ளேன்)

9.மே 1 தொழிலாளர் தினம், அன்று தொழிலாளர் தின கூட்டங்களுக்கு மக்களை செல்லவிடாது தடுப்பதற்காக, அரசு சகல திரை அரங்குகளின் கட்டணங்களையும் 1ரூபாவாக குறைக்கும் சட்டம் போடும், அன்றைய தினம் சகல திரை அரங்குகளிலும் மக்கள் அலை மோதுவார்கள். ( சில திரை அரங்க முதலாளிகள் அன்றைய தினம் மிகப் பழைய படங்களை போடும் நரித்தனமும் உண்டு)

10.தமது பிள்ளைகளுக்கு அரை டிக்கெட் எடுப்பதற்காக தமது பிள்ளைகளின் வயதை குறைத்துக் கூறி சங்கடப்படும் பெற்றோர்களும், பிள்ளைகளும்,

11.படம் முடியும் தறுவாயில் துவிச்சக்கர வண்டிபார்க்கில் இருந்து வண்டியை எடுக்க பரபரத்து ஓடுபவர்களும், இரவுக்காட்ச்சியில் இறுதி பஸ்ஸை பிடிக்க ஓடுபவர்களும்,

12. ஒடிசி பகுதியில் உள்ள சில குழந்தைகள் சிறுநீர் கழிக்க அது பள்ளம் நோக்கி ஓடி கலரி இருக்கைப் பகுதிக்கு வழிய , பலரின் காலை நனைக்கும் சங்கடம்,

13.முன் வரிசையில் உள்ளவர் உயரமானவர் எனில் படத்தைப் பார்க்க பின்னே உள்ளவர் படும் வேதனை,

14, வீட்டில் ஒவ்வொருவருக்குத் தெரியாமல் படம் பார்க்க வந்து விட்டு. படம் முடியும் நேரம் விளக்குகள் போடப்படும் பொழுது அகப்படும் தருணங்கள்,

15 திரைப் பட மாளிகையின் முகப்பு வாயிலில் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும் திரையிடப்படும் படத்தின் புகைப்படங்களை காண முண்டியடித்தல்.

16. திரைப்பட டிக்கெட் எடுக்க மணித்தியாலாக் கணக்கில், நாட் கணக்கில் கியுவில் நிற்கும் கொடூரம்.( பிளாக்கில் டிக்கெட் எடுக்கும் நிலையும் உண்டு )

17. படம் தொடங்கிய பின் பிந்தி படம் பார்க்க வரும் வேளையில் டோச் லைட் உதவியுடன் வழிகாட்டும் தியேட்டர் ஊழியர்

(கானா பிரபாவின் கட்டுரையில் இருந்து ஒரு பகுதியை இக் கட்டுரையின் சுவை கருதி எனது இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக இனித் தருகின்றேன், )

இனி வருவது கானா பிரபாவின் அனுபவ பகிர்வு :-

என்னைப் பொறுத்தவரையில் சினிமா என்பது என்னுடைய வாழ்க்கையோடு ஊறிவிட்ட ஒரு அம்சம். அதற்காக ரம்பா எத்தனை நாய் வளர்க்கின்றார், கமலஹாசன் யாரோடு புதிதாக dating போகிறார் போன்ற அதிதீவிர சினிமாப் பக்கம் நான் போவதேயில்லை.
என் வாழ்க்கையில் சந்தித்துப் போன சில தியேட்டர் சம்பந்தமான அனுபவங்களும் நினைவுக்கு வருகுது. இப்பவும் நினைவிருக்கு, கோபாலபிள்ளை மாமாவின்ர சைக்கிள் வெள்ளிக்கிழமை பின்னேரம் சித்தப்பா வீட்டிலை நிண்டா அதின்ர அர்த்தம் எங்கட சித்தப்பாவும், கோபாலபிள்ளை மாமாவும் ரீகல் தியேட்டருக்கு இங்கிலீஷ் படம் பார்க்கப்போட்டார்கள் எண்டு. பெரும்பாலான வெள்ளிக்கிழமைகளில இதை அவர்கள் ஒரு வாடிக்கையா வச்சிருந்தினம். எண்பதுகளின்ர இறுதியிலயே போரால அந்தத் ரீகல் தியேட்டர் அழிஞ்சு போச்சுது. யாழ்ப்பாணம் கோட்டை ராணுவமுகாமுக்குப் பக்கத்தில அது இருந்தது தான் காரணம்.
படம் பார்க்கிறதில விண்ணர் விஷ்ணு அண்ணா தான். அப்போது அவருக்கு பதினேழு பதினெட்டுவயசு அப்பிடித்தான் இருக்கும், கமல் ரஜனி காலத்து மனுஷனுக்கு மாறாக எம்.ஜி.ஆர் படங்கள் எண்டால் தான் உயிர். டீவி, வீடியோ பெரிசா வராத காலம் அது. அவர் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் படங்களைப் பார்த்துவிட்டு வரும் வரைக்கும் அவையின்ர முற்றத்தில நான் நிற்பன். அவரின்ர ஏஷியாச்சைக்கிளைக் கண்டதும் தான் தாமதம் துள்ளிக்குதித்து சைக்கிள் முன் பாறிலை ஏறி "படக் கதை சொல்லுங்கோ விஷ்ணு அண்ணா" எண்டு ஆவலா நான் அவரின்ர வாயைப் பார்ப்பேன். ரவுணில இருந்து சைக்கிளில வந்த களைப்பைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விட்டு படக்கதை சொல்ல ஆரம்பிப்பார்.
தேவர் பிலிம்ஸ் படங்கள் என்றால் எழுத்தோட்டத்திற்கு (titles) முதல் வரும் தேவர் பிலிம்ஸ் யானையின் பிளிறலையும் செய்து விட்டு " டண்டான் டாங், டண்டான் டாங்" என்று சங்கர் கணேஷின்ர இசையமைப்பையும் செய்துகொண்டே கதை சொல்ல ஆரம்பிப்பார். நான் ஆவெண்டு வாயைப் பிளந்த வண்ணம் அவர் சொல்லும் கதையக்கேட்டுக்கொண்டே இருப்பன்.
அவர் இன்னொரு விளையாட்டையும் செய்வார், இணுவில் காலிங்கன் தியேட்டர் பக்கம் போய் அறுந்து போய் எறிப்பட்டிருக்கும் படச்சுருள்களை எடுதுது வந்து கையால இயக்கக்கூடிய ஒரு மரப்பலகை மெஷினைச் செய்து பூதக்கண்ணாடி பொருத்தி அந்தப் படச்சுருளை இணைத்து விடுவார். எங்கள மாதிரிச் சின்னப் பெடியளைக் கொண்டு போய் ஒரு அறைக்குள் கொண்டுபோய் இருத்திவிட்டு அறைச்சுவரில வெள்ளை வேட்டியைக் கட்டிவிட்டு அறையை இருட்டாக்கி விடுவார். பிறகு அந்த மெஷினுக்கு ஒராள் டோச்லைற் அடிக்க இவர் லாவகமா அந்தப் படச்சுருள் வளையத்தைச் சுற்றுவார். சுவரில இருக்கிற வெள்ளை வேட்டியில படச்சுருள் ஓடும். சப்பாணி கட்டிக்கொண்டு திரையைப் பார்க்கும் நாங்கள் " உங்க பாரடா சிவாஜி கதைக்கிறான், ஆனா வடிவாக் கேட்குதில்லை" என்போம். அந்தச் சத்தம் எமது யாழ்ப்பாணத்துத் தோமஸ் அல்வா எடிசன் விஷ்ணு அண்ணரின் அந்தச் சினிமா மெஷின் எழுப்பும் ஈனஒலி எண்டது இப்பதான் விளங்குது.
ரமணா அண்ணாவும் சளைத்தவரில்லை. சினிமாப் போட்டி வைக்கிறேன் பேர்வழி எண்டு, ஒரு கொப்பியில சினிமாப் படம் ஒண்டின்ர முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் எழுதிவிட்டு இடையில இருக்கிற எழுத்துக்களின்ர எண்ணிக்கைக்கு ஏற்பப் புள்ளட்டி போடுவார். நாங்கள் என்ன படம் அது எண்டு கண்டுபிடிக்கவேணும். ( உதாரணம்: அன்பே சிவம் எண்டால் அXX XXம்). கனகாலமாக் அவர் எழுதி நாங்கள் கண்டுபிடிக்காத படம் " புதுச்செருப்புக் கடிக்கும்".
நீயா படம் வின்ஸர் தியேட்டரில முந்தி ஓடேக்க நான், சித்தியாக்களோட போனனான். இந்தப்படம் " வயது வந்தவர்களுக்கு மட்டும்" (பாம்புக் காட்சி உள்ளதால்) நான் சின்னப் பெடியன் எண்டு உள்ள போகவிடயில்ல. பிறகு ஒரு மாதிரி படம் பார்த்தோம், இல்லாவிட்டால் நான் தனியே வெளியே நிண்டிருக்க வேணும்.
தொண்ணூறாம் ஆண்டு நான் ஓ எல் படிக்கேக்க கூட்டளிமார் குமரேந்திரனும், ராஜசேகரும் களவா பள்ளிக்கூடக் கிறவுண்ட் மதில் பாய்ஞ்சு போய் மனோகராத்தியேட்டரில "அக்னி நட்சத்திரம்" படம் பார்த்துவிட்டு வந்து கிறவுண்டுக்குள்ள நிண்டு அந்தப் படத்தில நீச்சல் உடையில வந்த நிரோஷாவைப் பற்றிக் கதைச்சது ஞாபகம் இருக்கு.
பிறகு ஓ எல் எக்ஸாம் எடுத்துவிட்டு ராஜாத் தியேட்டரில " ராஜாதி ராஜா"வும், லிடோவில " பூப்ப்பூவாப் பூத்திருக்கு" படமும், வெலிங்டனில "வருஷம் 16 " படமும் பார்த்து எங்கட ஆசையை நிறைவேற்றிக்கொண்டோம், பரமகதி அடைந்தோம்.
வருஷம் 16 படம் இறுதிக்காட்சியில நாயகி குஷ்பு சாவதைக் கண்டு, கூடவே வந்த நண்பன் காந்தன் மூட்டைப் பூச்சியையும் பொருட்படுத்தாது அதிர்ச்சியில் கதிரையை விட்டு எழும்பவேயில்லை. பின்னால இருந்த தாய்க்குலங்கள் விசும்பி அழுவதும் கேட்டது.
ராஜாதி ராஜா படம் பார்த்து விட்டு வரேக்க மீண்டும் யுத்தம் ஆரம்பமாகி கோட்டைப்பக்கம் பங்கர் வெட்ட இளைஞர்கள் அப்படியே அழைத்துபோனார்கள்.
வருஷம் 16 படத்தைத் திரும்பவும் பார்ப்பமெண்டால் அடுத்த படமாக சம்சாரம் அது மின்சாரம் போடுவதற்கு வெலிங்டன் தியேட்டரில் நோட்டீஸ் ஒட்டிகொண்டிருந்தினம். ஆனால் போர் தொடங்கி மின்சாரம் போய், வெலிங்டன் தியேட்டரில "சம்சாரம் அது மின்சாரம்" ஒரு காட்சி கூட ஓடவில்லை.
யுத்தகாலங்களில மின்சாரமும் இல்லை. யாழ்ப்பாணம் சிறீதர் தியேட்டரைத் திருத்தி விடுதலைப் புலிகள் ஜெனறேற்றர் மூலம் போர் சம்பந்தப்பட்ட ஆங்கிலப்படங்களைத் தமிழில் டப்பிங் செய்து போட்டார்கள். எம்.ஜி ஆரின் படங்களும் வருவதுண்டு. அப்பிடி " மதுரை வீரன்" என்ற படத்தைப் போய்ப் பார்த்தேன்.
யாழ்ப்பாணத்தின் அழகான பெரிய தியேட்டர் வின்ஸர் தியேட்டர் 87 இல இந்தியன் ஆமி வந்த போதே இயக்கத்தை நிறுத்தியிருந்தது. கடைசியாக " இது நம்ம ஆளு" படம் அதில வந்தது.
போனவருஷம் ஊருக்குப் போனபோது பார்த்தேன்.

சிறீதர் தியேட்டர் ஈபிடீபி கட்சியின் அலுவலகமாக மண்மூட்டை அரணுடன் இருக்குது. முந்தி அகதி முகாமா இருந்த காலிங்கன் தியேட்டரும், களஞ்சியமாக இருந்த மனோகராத் தியேட்டரும் வெள்ளையடிக்கப்பட்டுப் படம் போடுகினம்(புகைப்படம் பக்கத்தில்). ராஜாத்தியேட்டரும் மீண்டும் உயிர்த்திருக்கிறது. வின்ஸர் தியேட்டர் இப்ப கூட்டுறவுப் பண்டகசாலைக் களஞ்சியமாக இருக்குது. சாந்தித்தியேட்டர் இப்ப நாதன்ஸ் தியேட்டரா மாறியிருக்குது. வெலிங்டன் தியேட்டர் வெல்டிங் பட்டறை போல உருக்குலைந்து அதியுயர் இராணுவக் கட்டுப்பாட்டு முள்வேலிக்குள் சிறைப்பட்டிருக்கின்றது. லிடோ சினிமா தான் தியேட்டராகவே இருந்ததில்லை என்பதுபோல அமைதியாக நிற்கின்றது.ராணித்தியேட்டர் இப்ப சைக்கிள் பார்க்.
ரீகல் தியேட்டர் இருபது வருஷத்துக்கு முந்திப் போட்ட இங்கிலீஸ் படத்தின்ர சாயம் போன போஸ்டரோட, புதர் மண்டிய காட்டுக்குள்ள இருக்குது.


No comments

Powered by Blogger.