கூடங்குளம் அணுஉலையில் புதிய எரிபொருளை மாற்றப்போகிறோம்!!ரஷ்ய நிறுவனம்!

கூடங்குளம் குறித்த பேச்சு எழும்போதெல்லாம், ஏதோ ஒரு சர்ச்சையுடனே எழுகிறது. கூடங்குளம் அணுஉலை ஆரம்பித்த காலம் முதல் இப்போது வரை 47 முறைக்கு மேல் பழுதாகியிருக்கிறது.
இந்நிலையில்,  புதிதாக ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது. சமீபத்தில், இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவரும், அணுசக்தித் துறையின் செயலாளருமான கமலேஷ் நில்கந்த் வியாஸ் கொடுத்த பேட்டி, புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இது ஒரு பக்கமிருக்க, ரஷ்யாவின் சோச்சி நகரில், கடந்த ஏப்ரல் 15 மற்றும் 16 -ம் தேதிகளில் நடந்த        11-வது உலக அணுசக்தி மாநாட்டில், 'கூடங்குளம் அணுஉலையில் புதிய எரிபொருளை மாற்றப்போகிறோம்' என ரஷ்ய நிறுவனம் தெரிவித்துள்ளதும், மற்றொரு பக்கம் புது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.



கூடங்குளம் அணுஉலை அமைக்கப்படும் முன்பே, அறிவியல் ரீதியாக இந்தத் திட்டத்தில் குறைபாடுகள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டை சூழலியலாளர்கள் முன்வைத்தனர். அதற்காக, இடிந்தகரை கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அம்மக்கள்மீது இன்றும்கூட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஒவ்வொருமுறையும் பராமரிப்புப் பணிக்காக கூடங்குளம் அணு உலை நிறுத்தப்படுகிறது என அறிவிக்கும்போதெல்லாம், அதன் நம்பகத் தன்மைகுறித்த கேள்வி எழும். இதுகுறித்த வழக்கு ஒன்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், கமலேஷ் நிகந்த் கொடுத்த பேட்டியில், `கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தொடக்க நிலையில் பிரச்னை இருக்கிறது' என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இதே குற்றச்சாட்டை முதலில் இருந்து முன்வைத்து, வழக்கு நடத்தும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம்.

``அணுஉலை செயல்பட ஆரம்பிப்பதற்கு முன்பாக இருந்தே நாங்கள் வைத்துவரும் குற்றச்சாட்டை அரசியல்வாதிகளும், இந்திய அணுசக்தி கழகத்தினரும், அணுசக்தித் துறை வல்லுநர்களும் மறுத்துவந்தனர். ஆனால், ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவலின்படி கூடங்குளம் அணுஉலை அலகு 1-ல் 2013-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 47 முறை பழுதாகி, உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அணு சுந்தர்ராஜன்உலை அலகு 2 -ல், 2017- ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 19 முறை பழுதாகி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் எங்களுக்குக் கிடைத்தது. சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்பட்டுவரும்  ஓர் உலை, 2 ஆண்டிற்கு ஒருமுறை பராமரிப்பிற்காக மட்டும் நிறுத்தப்படும். இதன் மூலமாகவே கூடங்குளம் அணுஉலையில் பிரச்னை இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

சமீபத்தில் பேட்டியளித்த இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவர் கமலேஷ் நில்கந்த் வியாஸ் பேசும்போது, `கூடங்குளம் அணுஉலை அடிக்கடி நிறுத்தப்படும் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறானது. அந்த உலையில் தொடக்க நிலை பிரச்னைகள் உள்ளன. அதைச் சரிசெய்ய, இந்திய அணுமின்சக்தி கழகத்தினர் தீவிரமாகப் பணியாற்றிவருகின்றனர்' என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் நாங்களும் இடிந்தகரை மக்களும் நீண்டகாலமாக முன்வைத்துவரும் குற்றச்சாட்டு உண்மையாகியுள்ளது. இனியாவது அணுசக்தி கழகத்தின் செயலாளர் கூறியதை கருத்தில்கொண்டு, கூடங்குளம் அணுஉலை அலகு 1 மற்றும் 2 ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒரு சுதந்திரமான வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை கூடங்குளத்தில் மேற்கொண்டு புதிய உலைகள் அமைக்கும் பணியை நிறுத்திவைக்க வேண்டும் என்றும், மத்திய அரசை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்துகிறது.

மேலும், அணுஉலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், பேரிடர் மேலாண்மை மேற்கொள்ளவேண்டிய பொறுப்பு, மாநில அரசின் கைகளில் உள்ள காரணத்தால், இந்தப் பிரச்னைக்கு முழுக்கவனம் அளித்து, உடனடியாக கூடங்குளத்தில் அணுஉலை செயல்பாடுகள் அனைத்தையும் மாநில அரசு நிறுத்திவைப்பதற்கான அழுத்தத்தை அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் தமிழக அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

கூடங்குளம் அணு உலைத் திட்டத்தில் உருவாகியிருக்கும் இரண்டு அலகுகளும், இறந்து பிறந்த குழந்தைகள் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பிலும் கடுமையான வாதம் முன்வைக்கப்பட்டது. இப்படி மக்கள் அன்றைக்கு வைத்த குற்றச்சாட்டுகளை இப்போது ஆம் என ஒப்புக்கொண்டுள்ளார், அணுசக்தி தலைவர் கமலேஷ் நில்கந்த்.



இதுதவிர, கூடங்குளத்தில் 2021-ம் ஆண்டிலிருந்து MTVS எரிபொருளுக்குப் பதிலாக TVS - 2M என்கிற புதிய எரிபொருளைப் பயன்படுத்தப்போகிறோம் என ரொசட்டோம் ரஷ்ய நிறுவன துணைத் தலைவரான ஒலெக் க்ரிகோரிவ் தெரிவித்துள்ளார். அதில், 'இந்தப் புதிய எரிபொருளைப் பயன்படுத்துவதால், அணு உலையின் திறன் மற்றும் செயல்பாடு உயரும், அணு உலையின் செயல்பாட்டிற்குச் செலவாகும் மின்சக்தியின் தேவை மிகவும் குறையும். அணு உலையில் தற்போது 12 மாதங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எரிபொருளை எடுத்துவிட்டு, புதிய எரிபொருள் நிரப்பப்பட்டுவருகிறது. இந்தப் புதிய எரிபொருளை 18 மாதங்களுக்கு ஒருமுறை நிரப்பினால் போதும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றிப் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச் செல்வன், ``அணுசக்தித் துறை அதிகாரிகள் இதுவரை அணுஉலை சிறப்பாகச் செயல்பட்டுவருவதாகவே சொல்லியிருக்கிறார்கள். சிறப்பாகச் செயல்படும் அணுஉலைக்கு ஏன் புதிய எரிபொருள்? இதனால் உண்டாகும் அணுக்கழிவுகளை எப்படிக் கையாளப்போகிறார்கள்? இதற்கான திட்டம், இந்திய அணுசக்திக் கழகத்திடம் உள்ளதா? என்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு, புதிய எரிபொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும், EIA NOTIFICATION-ல் உள்ள விதிப்படி, ஏற்கெனவே செயல்பட்டுவரும் அணுஉலையில் மாற்றம், விரிவாக்கம் போன்றவை செய்ய விரும்பினால், புதிதாக  சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது கட்டாயம். அப்படி முறையாக சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், அணுஉலையில் மாற்றம் செய்யக் கூடாது. அது சட்ட சட்டவிரோதமானதும்கூட” என்றார்.

அப்படி சுற்றுச்சூழல் அனுமதி பெறும்போது, இந்தத் திட்டத்திற்கு மீண்டும் ஒருமுறை பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். இதுதவிர, சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கையும் புதிதாக வாங்க வேண்டும். ``முதல் இரண்டு உலைகளே முடங்கிக்கிடக்கும் நிலையில், விரிவாக்கத் திட்டத்தை உடனடியாக நிறுத்துங்கள்" என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில், எரிபொருள் மாற்றுவதற்கு மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தினால், மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் வலுவாக இருக்கும் என்பது நிச்சயம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.