நயன்தாரா கோரிக்கை ஏற்பு, நடிகைகளை பாதுகாக்க சிறப்பு குழு !!

பெண்கள் தங்கள் துறைகளில் தங்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்களை வெளிப்படுத்த சர்வதேச அளவில் உருவான இயக்கம் மீடூ. இந்த இயக்கம் சார்பில் தமிழ் சினிமாவில் நடிகைகள், பாடகிகள் என சில பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அத்துமீறல்களை வெளிக்கொண்டு வந்தனர். அப்போதே நடிகர் சங்கம் சார்பில் இந்த பிரச்சினைகளை கையாள ஒரு குழு அமைக்கப்படும் என்று நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் அறிவித்தார். கடந்த மாதம் நயன்தாராவை ராதாரவி மேடையில் விமர்சித்த சம்பவம் பரபரப்பானது. அப்போது நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் நடிகர் சங்கம் சார்பில் விஷாகா கமிட்டி அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் நடிகர் சங்கம் சார்பில் இது போல பாதிக்கப்படும் பெண்களுக்கு நியாயம் வழங்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்னிந்திய நடிகர் நடிகைகளின் சுயமரியாதை, பொது வாழ்வு மதிப்பீடு மற்றும் சுயகவுரவம் இவற்றின் பாதுகாப்பு கருதி தென்னிந்திய நடிகர் சங்கம் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், குழு அமைப்பாளர்கள் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன், லலிதாகுமாரி, நடிகைகள் சுகாசினி, ரோகிணி, நடிகர் கிட்டி, பொருளாளர் கார்த்தி மற்றும் வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்புக் குழு மூலம் நடிகர், நடிகைகளின் சுயமரியாதைக்கு மதிப்பளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.