நடுநிலைவாதிகளே நடுவில் நின்று போராடுங்கள்.!!

சிறீலங்கா அரச பயங்கரவாத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக வளர்க்கப்பட்ட இஸ்லாமிய அடிப்டைவாதம் என்ற பயங்கரவாதம் தனது கோரப்பற்களை மீண்டும் தமிழ் மக்கள் மீதும் வெளிநாட்டவர்கள் மீதும் பதித்துள்ளது.

சிறீலங்காவில் புனித ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 369 பேர் கொல்லப்பட்டதுடன், 600 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


 தமக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களை சிறீலங்கா அரசு உதாசீனப்படுத்திய அதேசமயம், சிறீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட உள்நாட்டு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். ஐ.எஸ் என்ற அமைப்புடன் இணைந்தே இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளன.




இந்த தாக்குதலில் பங்குபற்றிய தற்கொலையாளிகளும், அதனை திட்டமிட்டவர்களும் சிறீலங்காவைச் சேர்ந்தவர்களே அது மட்டுமல்லாது அவர்கள் ஒன்றைக் கவனமாக கையாண்டுள்ளார்கள் அதாவது தமிழர்களையும் வெளிநாட்டவர்களையுமே தமது பிரதான இலக்காக தெரிவுசெய்துள்ளனர். கண்டியில் உள்ள தேவாலயத்தையோ அல்லது இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் பௌத்த தீவிரவாதிகளின் ஆலயத்தையோ அவர்கள் தமது இலக்காக தெரிவுசெய்யவில்லை.



அதற்கான காரணம் சிங்களவர்கள் அதிகம் கொல்லப்பட்டால் அது ஒரு இனக்கலவரமாக மாற்றம் பெற்று பெருமளவில் இஸ்லாம் மக்கள் கொல்லப்படுவார்கள் என்ற உள்ளுர் அரசியல் பாடம் தாக்குதலாளிகளுக்கு நன்கு தெரிந்துள்ளது. எனவே தாக்குதலுக்கான திட்டம் முழுக்க முழுக்க சிறீலங்கா அரசியலில் உள்ள முக்கிய நபர்களினதும், அவர்களால் உருவக்கப்பட்ட அமைப்புக்களினதும் மூளையில் இருந்து உதித்தவை.

 

வெறும் உரிமை கோரலுக்கு மட்டுமே ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அழிந்து போன அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தமிழ் மக்கள் அதிக இழப்புக்களை சந்தித்த அதேவேளை சிறீலங்கா அரசு மிகப்பெரும் அரசியல் அனுகூலங்களைப் பெற்றுள்ளது. அனைத்துலகத்தின் அனுதாபம் சிறீலங்காவை நோக்கி திரும்பியுள்ளது. ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் கூட அணைக்கப்பட்டுள்ளது.

 

சிறீலங்காவை பலப்படுத்தி சிறீலங்கா அரசுடன் நாம் கைகோர்ப்பதற்கு சுற்றுலாப்பயணிகள் தொடர்ந்து சிறீலங்காவுக்கு செல்ல வேண்டும் அது தான் பயங்கரவாதிகளுக்கு நாம் கொடுக்கும் தோல்வி என பிரித்தானியா நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற பிரதிநிதி ஒருவர் முழங்குகின்றார்.



அதாவது சிறீலங்கா தான் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் என்ற பாவங்களை புனித ஞாயிறு அன்று மீண்டும் தமிழ் மக்களை பலிகொடுத்து கழுவத்துணிந்துள்ளது. அதில் வெற்றியும் கண்டுள்ளது.



இந்த நிலையில் சிறீலங்காவில் இறந்தவர்களுக்கு அஞ்சலிகளை செலுத்துகின்றோம் என ஏராளமான புலம்பெயர் அமைப்புக்கள் கிளம்பியுள்ளன, அவர்களுக்கு ஆதரவாக புலம்பெயர் தேசங்களில் உள்ள ஆலயங்களும் தமது வியாபாரத்தை ஆரம்பித்துள்ளன.



ஆனால் நாம் ஒன்றை மட்டும் மறந்துவிடுகின்றோம், இந்த அஞ்சலிகளை எதிர்காலத்தில் இடம்பெறும் அனர்த்தங்களை தடுப்பதற்கான கருவியாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை. வழமைபோல அஞ்சலிகளை செலுத்திவிட்டு அடுத்த படுகொலைகள் நடக்கும்வரை மீண்டும் காத்திருக்கும் வழக்கத்தை கைவிடுங்கள்.



அதாவது நாம் செலுத்தும் அஞ்சலிகள் மூலம் சிறீலங்கா அரசு பயனடைந்து விடாது பார்த்துக்கொள்வதே தற்போதைய எமது நுண்அரசியலாகும்.



இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் தவறில்லை, ஆனால் எந்த ஒரு அரசியல் நோக்கத்திற்காக தனக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்களைக்கூட கருத்தில் எடுக்காது 369 உயிர்களை சிறீலங்கா அரசு படுகொலை செய்ததோ அதனை நாம் எமது அஞ்சலியின் போது தெளிவுபடுத்த வேண்டும்.


ஆம் புனித ஞாயிறு அன்று படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களை ஒருபுறமும், சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் நவாலி சென் பீற்றேஸ் தேவாலயம் உட்பட பல ஆலயங்களில் படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களை மறுபுறமும், சிறீலங்கா அரசின் கிழக்கு மாகாண ஆளுநர் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட அமைப்புடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்னொருபுறமும் வைத்துவிட்டு நடுவில் நின்று கதறியழுங்கள் நடுநிலைவாதிகளே.

 

சிறீலங்காவில் காணப்படும் இனமுரன்பாடுகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை, பௌத்த சிங்கள தீவிரவாதம் நாட்டில் முற்றாக அழிக்கப்படும்வரை சுற்றுலாப்பயணிகள் அங்கு செல்வதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்று கூறி உங்கள் தேசங்களில் உள்ள வேற்று இனத்தவர்களுக்கு சிறீலங்கா அரசியலை தெளிவுபடுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். அவர்களினதும் அவர்களின் குழந்தைகளினதும் உயிர்களை காப்பாற்றுங்கள்.

 

சிறீலங்கா அமைதிப் பூங்கா ஆகிவிட்டது என்ற சிறீலங்கா அரசின் பிரச்சாரத்திற்கு சாவு மணியடிப்பதற்குரிய ஆரம்பப்புள்ளியாக இந்த அஞ்சலிக் கூட்டங்களை ஆரம்பியுங்கள் ஆனால் தொடர்ந்து கனவயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு சிறீலங்கா அரசின் இனவிரோத அரசியலை ஒரு கொதிநிலையில் வைத்திருங்கள்.

 

அது தான் புனித ஞாயிறு அன்று சிறீலங்கா அரசின் அரசியல் நன்மைக்காக ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பெயரில் கொல்லப்பட்ட ஆத்மாக்களுக்கு நீங்கள் செய்யும் அஞ்சலியாகும்.

ஈழம் ஈ நியூஸ்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.