கண்ணன் என் காதலன்.!

காற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..
நூல் - கண்ணன் என் காதலன்
நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா
அணிந்துரை - வித்யாசாகர்

உயிர்போகும் நிலையில் ஒரு படி இரத்தத்தை கொடுத்து விபத்தில் இருந்து ஒருவரைக் காப்பாற்றுவது உயிர் தந்து காப்பாற்றுவதற்கு சமம்தான். அவ்வாறே, பல எண்ண பரிமாற்றங்களால், இயல்பின் மாற்றங்களால், பல வாழ்வியல் படிநிலை கோளாறுகளால், உழைத்தலின்' இயங்குதலின் சரிவுகளால் மெல்ல மெல்ல மாறி மாறி உயர்ந்து தாழ்ந்து ஒரு கட்டத்தில் சாய்ந்துக்கொண்டிருக்கும் இவ்வுலகை, இச்சமுதாயத்தை, எழுத்து தனது நற்சிந்தனைகளைக் கொண்டு நிமிர்த்தி கனப் பேரழகோடு வைத்துக்கொள்கிறது.


ஒரு சின்ன சாவி கொண்டு ஒரு பெரிய மாளிகையை திறப்பதற்கு ஈடாக, ஒரு சின்ன கவிதையைக் கொண்டு ஒரு பலத்த சிந்தனையை திறந்துக்கொள்ளலாம். அவ்வாறு நமது அறிவை திறக்கும் பல படைப்புகள் நமது வாழ்வியலை பெருவாரியாக மாற்றிதான்விடுகிறது.
காக்கையும் குருவியுமென் சாதி என்று பாடிய மகாக்கவி பாரதி இன்று நம்மிடையில்லை, எனினும் அவர் சொன்ன எண்ணற்ற வரிகள் இன்றும் நமக்குள் புது ரத்தம் பாய்ச்சிக்கொண்டிருப்பது என்பது யாரும் மறுத்துவிடாத உண்மை.

அவ்வாறு பாரதிக்கு முன்னும் பின்னுமெனத் தோன்றிய ஆயிரமாயிரம் படைப்பாளிகள் முதல், ஆரிராரோ பாடி நமை வளர்த்த தாய்ப்பாடல்கள், தன்னானே பாடி நம் உயிர்வளர்த்த விவசாயி வரை எல்லோருமே அவரவரிடத்தில் ஒரு நல்ல படைப்பாளிகளாய்த் தான் திகழ்கிறோம்.

எனினும், ஒரு சவாலை எதிர்கொண்டு வென்றுவிடும் நாம், ஒரு மலரின் அழகையோ மலையின் பிரம்மாண்டத்தையோ நதியின் நளினம் குறித்தோ பெரிய அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. வருந்துபவன் நகர்ந்து விடுகிறான், சிரிப்பவன் சிரிப்போடு அதன் அழகை மறந்துவிடுகிறான்.

ஒரு கவிஞன் அந்தச் சிரிப்பிலிருந்து சிந்திக்க துவங்குகிறான். ஒரு கலைஞன் அந்த வருத்தத்தை உழுது அதிலிருந்து ஒரு வாழ்வியலை நல்லதொரு படைப்பாக இவ்வுலகிற்கு கொண்டளிக்கிறான். அங்ஙனம் தான் காதல் கொண்ட தனது கண்ணனைப் பற்றி அன்று பாடிய ராதையாய் மாறி இன்றந்த மாதவன் குறித்து உருகி உருகி இப்படைப்பெங்கும் காதால் காதலாய் கரைந்துப் போயிருக்கிறார் கவிஞர் திருமதி கோவை மு. சரளா அவர்கள்.

"விண்ணைத் தொடுவதுபோல்
என்னைத் தொடுகின்றாய்,
மண்ணை அளப்பதுபோல்
என்னை அளக்கின்றாய்,
விரல்களின் விசைகொண்டு
நரம்புகளை மீட்டுகிறாய்,
வானில் பறக்கின்றேன்
பரவசமாகின்றேன்,
உனது குழலில் சுழலும்
காற்றின் நாதத்தில் -
மயங்கிச் சரிகின்றேன்"

என கண்ணனைப் பற்றிப் பாடும் பாடல்கள் ஒவ்வொன்றும் நம்மைப் பற்றிப் பாடுவதாகவே படிக்கும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் தோன்றும். ஒரு கணவன் மனைவியின் நெருக்கம், அன்பு, அவர்களுக்குள் காற்று சிலிர்க்கும் காதல் மிகப் புனிதம் மிக்கது. காரணம், அந்தக் காதலிலிருந்து தான் இச்சமுதாயம் மலர்ந்திருக்கிறது, அந்தக் காதலை கொண்டுதான் நான் பிறந்திருக்கிறேன், அந்தக் காதல் தான் நமை முடிவற்றவர்களாக மீண்டும் மீண்டும் பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது.

எனில், நமை உய்ரிப்பித்துக் கொண்டிருக்கும் காதல் புனிதமானது தானே? அத்தகைய புனிதமான காதலால் அன்பால் ஒரு பெண்ணொருத்தி ஒரு ஆணிடம் உருகுவதை களமாகக் கொண்டுதான் கவிஞர் கவிதையெங்கும் பயணித்திருக்கிறார்.
"விழித்திரை மூடினாலும்
மனத்திரை மூடுவதில்லை,
கனவுகளின் எச்சங்கள்
நினைவுகளின் மிச்சங்கள்,
அது ஓயாது அசைபோட்டு போட்டு எனை
பொழுதிற்கும் மீட்டுவதாய்" சொல்கிறார்.

இதிலே முதலிரண்டு வரிகள் எனை உடைத்துப்போடுகிறது. மனத்திரை மூடாததன் சூழ்ச்சுமம் அறியாததால் தானே யோகிகளும் ஞானிகளும் பிறக்கிறனனர். எண்ணக் கதவுகளை மூடி அசந்திடமுடியாதவர்கள் தானே வனமெங்கும் அலைந்து மனதிற்குப் பிடித்த அமைதியை நாடி அலைகின்றனர்.

மனத்திரை மூடும் மருந்தொன்று உண்டா? உண்டெனில் ஒன்று அது பக்தி; கடவுள்மீது கொள்வது. இவ்வியற்கைச் சக்தியின் மீது கொள்ளும் அன்பு. அல்லது காதல்; பிறப்பின் போக்கில், இறப்பின் கட்டளையை ஏற்று நாம் கொள்ளும் தீரா அன்பு. ஆக, இரண்டிற்கும் சான்றாக, காதலின் வழியே கண்ணனையும், கடவுளின் வழியே காதலையும் கண்ட ஆண்டாளைத்தான் இங்கே நினைவுபடுத்துகிறார் கவிஞர் கோவை மு. சரளாதேவி.

ஆண்டாளை உண்மையில் நேரெதிரே காணாதவர்கள் நாம். எனினும் அவரது காதலைப் பற்றி பலரது பாடல்களின் வழியே அறிந்துள்ளோம். இன்றும் ஆண்டாள் பாடலைக் கண்டால் நாமெல்லாம் அத்தனை நன்கு எல்லோருமே அப்பாடல்களின் விளக்கத்தை படித்தறிவோமா தெரியாது. ஆயினும் இவரின் பாடல்கள் நம் உணர்வுகளை அசைக்கிறது. நேரடியாக பேசும் நம் காதலியை காதலனை கண்முன் கொண்டுவந்து நிற்கவைக்கிறது.

அறத்தைப்பாடிய வள்ளுவன், பொருளையும், காமத்தையும் பாடியதன் சூழ்ச்சுமத்தை எல்லோரும் அறிவதில்லை. கவிஞர் முழுதாய் ஏற்றிருக்கிறார் போல்.

காதலும் வீரமும் செறிந்தவர் தானே தமிழர், அந்தக் காதல் எங்கு பிசகிப் போகிறதோ அங்கு திருத்தம் வேண்டுமே யொழிய முற்றிலும் காதலை தவிர்ப்பது இயற்கையை எதிர்ப்பதற்கு சமம்' என்பதன் ஆற்றாமையைத் தான் இப்படைப்பின் பாடல்களும் காற்றின் ஊடாக உரக்க பாடிவைத்துச் செல்கிறது.

"உன் ஆளுயர வாலிபங் கண்டு
அங்கம் முழுதும்
வெட்கம் பூச மின்னுகிறேன் நான்,
உன் வேங்குழலின் நாதமெனை
வெப்பத்தால் தகிக்கவைத்த பொழுதில்
ஒரு வெண்புறாவைப்போல் பறக்கிறேன் நான்,
உன் மலர் மார்பைக் காணும்போது
அதில் சந்தனம் குழைத்துப்பூசி

எனது பெயரெழுதும் தாபம் தோன்றுதடா கண்ணா" என்கிறார் ஒரு கவிதையில்.

வாசிக்கையில் உள்ளே வெப்பமெழுகிறது. நெருப்பென்றால் சுட்டு விடுமா என்பவருக்கு ஊறுகாய் என்றால் நாக்கில் எச்சில் ஊறுவதன் பட்டவர்த்தனம் புரிவதில்லை. சொல்லுக்கு' செயல்படும் பலம் உண்டு. எனினும் அதை சொல்லும் நோக்கில் சொல்வார்க்கென்று நாம் புரிந்துக்கொள்ள இக்கவிதைகள் சான்றாகின்றன. காதலின் விரக பசி எத்தனை கொடுமையானது என்பதை அறிய ஒரு வயதும், காமம் குறையாத ஒரு பொழுதும் வாய்ப்பாக கிடைக்க வேண்டியுள்ளது.

சிறு வயதில் மனம் முடித்து கணவன் இறக்கையில் மறுமணம் கூடாது என்போரை முதலில் சிறையில் அடைக்கவேண்டும். காரணம், "வயிற்றிற்கு உணவின்றி வரும் பசி எத்தனைக் கொடியதோ, அதே அளவு உடம்பிற்கு உடம்பின்றி வரும் பசியும் அந்தந்த வயதில் கொடியதே" என்பது இயற்கையின் இயல்பூரிய சத்தியம். அதற்கும் மேலாக, வாழ்ந்தோர், அல்லது மனதால் தன்னை அன்பிற்கு இழந்தோர், அல்லது உலக நடப்புகளை வெறுத்தோரின் கூறுகள் வேறு விடயம். அது அவர்களின் சுயம் சார்ந்தது.

அதையும் முடிவு செய்வோர் அவராக இருப்பதே இயற்க்கைக்கு நேர்.
பொதுவில், உடல் சார்ந்த, மனம் சார்ந்த, உணவு சார்ந்த, நம்பிக்கை சார்ந்த முடிவுகள் எதுவுமே அவரவருக்குள் ஊரும் உணர்வாக அமையத்தக்கது. அவரவர் உணர்வும், விருப்பமும், ஏற்பும் மறுப்பும் அவரவர் மனதை புரிதலைச் சார்ந்தது. அது முற்றும் புரிந்தும், சுடும் ரத்தம் கொல்லும் இரவுதனில் வெள்ளை வெள்ளையாய் பல பிஞ்சு மனங்கள் செத்துப்போவதை எப்படி அறம் என்று ஏற்பது ?
எனவே, இங்கே காமம் என்பது எத்தனை சுகமோ அத்தனை ரணமும் கூட என்பதை உணர்வீர் நண்பர்களே, அதை எவர் பொருட்டும் மறுப்பதற்கோ, இளம்பெண்கள் மறுமணம் முடிக்க வேண்டாமென தடுப்பதற்கோ நம் எவருக்கும் எத்துளியும் உரிமையில்லை.
"பொய்மையும் கயமையும்
கைகொட்டிச் சிரிக்கிது..
வன்மமும் குரோதமும்
கொடிகட்டிப் பறக்குது..
மனிதத்தோல் மூடி கொக்கரிக்கும்
மிருகங்களின் சபையில், நித்தமும்
துகில் உரியப்படுகிறார்கள்
பல பாஞ்சாலிகள்" என்று முடிகிறது ஒரு கவிதை. அப்பப்பா, எத்தகைய ஒரு தாய்மையின் வலியது? அக்கவிதையின் வலி.
பெண் எத்தனை வலிமையானவள் என்பதை, தன் மனைவி பிரசவிக்கையில் ஒரு ஆண் அறிகிறான். பெண் எத்தனைத் தியாகமானவள் என்பதை தனது தாயிடமிருந்து ஒரு ஆண் அறிகிறான். பெண் எத்தனை தாய்மையானவள் என்பதை தன் மகளின் வழியே ஒரு ஆண் அறிகிறான். பெண் எத்தனை புனிதமானவள் என்பதை ஒரு ஆண் தனது தங்கை, தமக்கைகளிடமிருந்தும், முக்கியமாக தோழியிடமிருந்தே முழுதாய் கற்கிறான். அந்த தோழமையை எப்படி நாம் தொலைத்தோமென நெஞ்சில் ஈட்டியை குத்தி பல கேள்விகளை எழுப்புகிறது இக்கவிதை.
ஆண் பெண் சமம், என்பதையெல்லாம் கடந்து, ஆணிற்கும் பெண்ணிற்கும் இருப்பது அன்பான மனதொன்றே என்றறிந்தால்; அந்த மனம் எங்கு வலித்தாலும் இருவருக்கும் வலிக்கும் என்றறிந்தால்; பிளவு நம்மில் எப்படி வரும்? பெண்ணை அறிவாக அழகாக வர்ணனையோடு பார்க்கும் மனதிற்குள் அன்புமூரியிருப்பின் அங்கே ஆசை எப்படி பெரிதாகத் தோன்றும்? கருணை கொஞ்சம் மிச்சமிருந்தாலும் கண்முன் தெரியும் பெண்ணிற்குள் அழகோடு சேர்ந்த அவளின் மனதையும் பார்க்க முடியும் தானே?
"மறைவில் நின்று
வெளிச்சம் தருகிறாய்..
அருகில் வந்தால்
மாயமாய் மறைகிறாய்
நீயற்ற கணங்களில்
இருளே எனைச் சூழ்கிறது,
எங்கே என்னை வைத்திருக்கிறாய் என்றே
தெரியவில்லை கண்ணா" என்று அடியாழ மனோதோடும், இலக்கிய அழகோடும் சொல்கிறார் கவிஞர். இப்படி பல கவிதைகள் இப்படைப்பெங்கும் காதலையும் காமத்து அழகுச் சொற்களையும் குவித்து இனியதோரு படைப்பாகி நிற்கிறது இந்த "கண்ணன் என் காதலன்" கவிதைத்தொகுப்பு.
ஒரு பெண்ணே எழுதினால் மட்டுமே அவளுடைய இயல்பை இயல்பாக எழுதிட இயலும் என்பதற்குச் சான்றாக, ஒரு பெறுவதற்கரிய படைப்பாக இப்படைப்பு விளங்குகிறது. தமிழ்கூறும் நல்லுலகின் அறியத்தக்க நல்லதொரு கவிஞராக இருந்து இன்னும் பல நற்படைப்புக்களை வழங்கவேண்டி கவிஞர் கோவை மு. சரளா அவர்களை மனதார வாழ்த்தி அகமகிழ்கிறேன்.
நெஞ்சுநிமிர்த்தி தனது ஆசைகளை, எண்ணங்களைப் பற்றி பேசும் ஒரு நேர்மையான பெண்ணை, தனது மனைவி போல, காதலியைப் போல, நம்மொரு தோழியைப் போல, நம் தங்கை தமக்கைகளைப் போல ஒரு யதார்த்தமானப் பெண்ணை மிக அழகாக நம் கண்முன் காட்டுகிறது இப்படைப்பு. இப்படைப்பின் வழியே நான் கண்ட அந்தப் பெண்ணிற்கு எனது நன்றி. அந்த பெண்மைக்கு எனது தாய்மைகொண்ட வணக்கம்!!
வித்யாசாகர்
(கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர், பாடலாசிரியர்)
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.