குண்டுத்தாக்குதல் விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும். ஜனாதிபதி!!

தீவிரவாத தாக்குதல் தொடர்பாக கண்டறிவதற்கு நியமிக்கப்பட்டுள்ள மூன்று பேரைக் கொண்ட விசேட விசாரணைக் குழுவின் அறிக்கை அனைவருக்கும் பகிரங்கப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.


புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெனரல் சாந்த கோட்டேகொட இன்று (30) முற்பகல் பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறையின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அதிகாரத்தைக் கொண்டதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை இரண்டு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு, அவ்வறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதற்கமைய எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் தேடுதல்கள், கைது நடவடிக்கைகள் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதுடன், இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டின் தேசிய பாதுகாப்பு விரைவில் உறுதி செய்யப்படும்.

இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு முகங்கொடுத்ததன் பின்னர் உலகில் வேறெந்த நாட்டிலும் இடம்பெறாத வகையிலான பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு தகவல்களை திரட்டவும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாட்டின் புலனாய்வு துறை உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினரால் முடிந்துள்ளது. அவர்களது திறமையை பாராட்டியதோடு அதற்கான பங்களிப்பினை வழங்கிய அனைவருக்கும் எனது நன்றியையும் தெரிவிக்கிறேன்.

இதேவேளை, பாடசாலைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அரச அலுவலகங்களின் செயற்பாடுகளை வழமைபோல் மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டில் எந்தவொரு செயற்பாட்டினையும் செயலிழப்பதற்கு இடமளிக்காது அவற்றை வழமைபோல் மேற்கொள்வதற்கு நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும் என்றார்.

பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு அமைதியான நாட்டினை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி தமது உயரிய பங்களிப்பினை வழங்கி வருவதாக புதிய பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.