தமிழ் ஈழத்திற்குச் சென்று பிரபாகரனைச் சந்தித்த பெருமை இயக்குநர் மகேந்திரனுக்கு உண்டு-வைகோ !!

தமிழ் ஈழத்திற்குச் சென்று பிரபாகரனைச் சந்தித்த பெருமை இயக்குநர் மகேந்திரனுக்கு உண்டு என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.


'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 79. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட இரங்கல் செய்தியில், "தமிழ்த்திரை உலகில் யதார்த்த இயக்குநர் என வர்ணிக்கப்படும் இயக்குநர் மகேந்திரன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கல்லூரிக் காலத்திலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவர். 1978 ஆம் ஆண்டு வெளிவந்த 'முள்ளும் மலரும்' படம் மூலம் அறிமுகம் ஆனவர்.

தொடர்ந்து 'உதிரிப்பூக்கள்', 'ஜானி', 'கை கொடுக்கும் கை' உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கியவர். ரஜினிகாந்துக்கும், இயக்குநர் பாலு மகேந்திராவுக்கும் மிகவும் பிடித்த இயக்குநர் என பெயர் பெற்றவர் மகேந்திரன்.
தமிழ்த் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். திரை உலகில் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்கியவர்.

அண்மையில் வெளிவந்த 'தெறி', 'பேட்ட', 'நிமிர்', 'பூமராங்' படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். வாழ்நாள் முழுவதும் எளிமையாகவே வாழ்ந்தவர். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அழைப்பின் பேரில் தமிழ் ஈழத்திற்குச் சென்று அவரைச் சந்தித்த பெருமை இயக்குநர் மகேந்திரனுக்கு உண்டு.

சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன், சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என வைகோ தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.