விவசாயக் கடன்கள் தள்ளுபடிக்கு வலியுறுத்தப்படும்-பிரேமலதா!!

அதிமுக கூட்டணி வென்று, மத்தியில் பாஜக ஆட்சி அமையும்போது, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தப்படும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.

நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை ம. சரவணனுக்கு ஆதரவுக் கோரி, புதன்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்ட அவர் மேலும் பேசியது :

மத நல்லிணக்கம் போற்றும் நாகை மாவட்டம், அண்மையில் கஜா புயலால் கடும் பாதிப்புக்குள்ளானது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவின்பேரில், ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான உதவிப் பொருள்களுடன் கஜா புயல் பாதித்த நாகை மாவட்ட பகுதிகளுக்கு வந்தபோது, புயலின் பாதிப்புகளை நேரடியாக அறியமுடிந்தது. ஆங்காங்கே முறிந்து விழுந்து கிடந்த மின் கம்பங்கள், சாலையோரங்களில் சமையல் செய்து சாப்பிட்ட மக்கள், மின் விநியோகத் தடை, குடிநீர்த் தட்டுப்பாடு என அனைத்துப் பகுதிகளிலும், புயலின் பாதிப்பை உணர முடிந்தது.

தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து விரைவான நிவாரணப் பணிகளை மேற்கொண்டதன் விளைவாக, கஜா புயல் பாதித்த சுவடு கூட இல்லாத வகையில், மக்கள் அனைவரையும் மீட்டெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வீடுகள் இழப்பு, தென்னை மரங்கள் இழப்பு, படகுகள் இழப்பு என அனைத்து இழப்புகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது.

அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும். இந்தியாவின் பிரதமர் மீண்டும் மோடிதான் என்பது உறுதி. மோடி தலைமையில் மீண்டும் மத்திய அரசு அமையும்போது, தமிழகத்தின் தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படும். அதற்கான முயற்சிகளை அதிமுக கூட்டணியின் மக்களவை உறுப்பினர்கள் நிச்சயம் மேற்கொள்வர்.

அந்த வகையில், நதிநீர் இணைப்பு, வேலைவாய்ப்பு, பொலிவுறு நகரம், சாலை வசதி என தமிழகத்துக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய உறுதியாக வலியுறுத்தப்படும். மேலும், ஜி.எஸ்.டி வரியால் வணிகர்கள் பாதிக்கப்படாத வகையில், வரிவிதிப்பு முறையை மறுபரிசீலினை செய்யவும் வலியுறுத்தப்படும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.