சர்வதேச ஆசிய அரசியல் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு இராப்போசன விருந்து!!

சர்வதேச ஆசிய அரசியல் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு நேற்றிரவு (06) கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இராப்போசன விருந்தொன்றை வழங்கினார்.


ஆசிய அரசியல் கட்சிகளுக்கான சர்வதேச மாநாடு மார்ச் மாதம் 05ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமானதுடன், ஆசிய பிராந்திய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 90 உறுப்பினர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர். இன்றுடன் இம்மாநாடு நிறைவு பெற்றது.

2000ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச ஆசிய கட்சிகள் மாநாடு (ICAPP) ஆசிய பிராந்திய நாடுகளின் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிக்கொண்ட அமைப்பாகும்.

ஆசிய நாடுகளின் புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்காக பல்வேறு கருத்துக்களைக்கொண்ட அரசியல் கட்சிகள் தமது கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் வருடாந்தம் இடம்பெறும் இந்த மாநாடு இம்முறை இலங்கையில் இடம்பெற்றது.

மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள், தான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்ததாகவும் அதன் மூலமாக பல்வேறு அனுபவங்களை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
Powered by Blogger.