யாழில் ஊடகவியலாளர் மாநாட்டில் முதல்வர் ஆனல்ட் என்ன தெளிவுபடுத்தல்!!

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தை சுற்றியும் – அண்மித்தும் இருக்கக்கூடிய அங்காடி வர்த்தக கடை தொடர்பில் பல்வேறு திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன.  குறித்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்ற  யாழ் மாநகர முதல்வரின் ஊடகவியலாளர் சந்திப்பில் செய்தாளர்கள் கேள்வி எழுப்பினர். ஊடகவியளாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்.யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தை சுற்றியும் – அண்மித்தும் சுமார் 64 அங்காடி வர்த்தக கடைகள் காணப்படுகின்றன. இந்தக் கடைகள் தொடர்பாக மாநகரசபையின் மாதாந்தக் கூட்டம் ஒன்றிலே பிரஸ்தாபித்தபோது ‘சட்ட விரோதமான கடைகளை அகற்றுவதற்கு மாநகர கட்டளைச் சட்டத்தின் 42 – யு குறிப்பிடுகின்றது மாநகரப்பகுதியிலே மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை அகற்ற மாநகரசபைக்கு உரித்து உண்டு. அதனடிப்படையில் நாங்கள் முதற்கட்டமாக சபையினுடைய அங்கீகாரத்தை பெற்றபிறகு அவ்வாறான கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டோம்’. ஏன் என்று சொன்னால் ஒரு பேரூந்து நிலையம் மக்களுக்கு மிகவும் சௌக்கியத்தை ஏற்படுத்தக்கூடியதாக காணப்பட வேண்டும். தற்பொழுது உள்ள கடைப்பகுதிகளில் இரவு வேலைகளில் குறித்த கடைகளுக்கு சம்மந்தப்படாதோர்களினால் அசாதாரண நிலைமைகள் ஏற்படுத்தப்படுவதாகவும் சபையிலே பிரஸ்தாபித்தபோது அந்தக் கடைகள் சட்டவிரோதமான கடைகளாக இருந்தால் அதனை அகற்ற வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் அவர்களுடைய குடும்ப நலன் கருதியும், அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும் – அவர்களின் கல்வி நலன் கருதியும் அவர்களுக்கு கால அவகாசம் வழங்கியிருந்Nhதம். அவர்கள் ஆரம்பத்திலே மிகவும் துணிச்சலோடு எங்களுக்கு பதில் கூறியிருந்தார்கள் என்னவென்று சொன்னால் ‘அது எங்களுடைய ஆளுகைக்கு உற்படாமல் இலங்கைப் போக்குவரத்து சபையினுடைய ஆளுமைக்கு உட்பட்டிருந்த காரணத்தால், அவர்களுக்கு கடை உரிமையாளர்கள் மாதாந்த வரியை செலுத்தி வந்த காரணத்தால், அவர்கள் தங்களை பாதுகாப்பார்கள்’ என்ற துணிச்சலின் பிரகாரம் எங்களுடைய கட்டளைகளை ஏற்கவில்லை.

ஆண்மையிலே எமது போக்குவரத்து அமைச்சர் கௌரவ அர்ஜுன ரணதுங்க அவர்கள் யாழ் வருகை தந்திருந்தபோது என்னோடு புகையிரத நிலையத்தில் வைத்து யாழ்ப்பாணம் மாநகரத்தின் முதல்வராக போக்குவரத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தார். அப்பொழுது அமைச்சரிடம் மிகத்தெளிவாக குறிப்பிட்டிருந்தேன் ‘யாழ் பேரூந்து நிலையம் அமையப்பெற்றிருப்பது மாநகரசபையின் காணி. ஒரு காலத்திலே அரச பேரூந்து சேவைக்காக வழங்கியிருப்பதாகவும், ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எம்மிடமில்லை. இருப்பினும் போக்குவரத்து சபையிடம் குறித்த காணி இருப்பதில் முரண்பாடுகள் ஏதுமில்லை. பேரூந்து நிலையத்தை சுற்றவர உள்ள கடைகள் சட்டவிரோதமானவை. இலங்கையிலே எந்த போக்குவரத்து சபைக்கும் அதனை சுற்றிவர உள்ள கடைகள் வரிசெலுத்துவதில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் மட்டும் இது விதிவிலக்கானது. ஆவர்கள் அதனைப்பெற்று நடாத்துகின்றார்கள். இது சட்டவிரோதமானவை. ஆதனை அகற்ற தங்களின் அனுமதியை வழங்க வேண்டுமென்று கேட்டிருந்தேன்.

அமைச்சர் வினவியிருந்தார் யார் அவர்களுடைய கடைகளுக்கு அங்கீகாரம் வழங்கியிருந்தார்கள் என்று. நிச்சயமாக மாநகரம் வழங்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினே;. ஆரம்ப காலத்தில் 10 – 14 வரையான கச்சான் மற்றும் சிற்றூண்டி விற்பனை கடைகள் நடாத்தப்பட்டு வந்ததாகவும். 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே 64 கடைகள் நடாத்துவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருக்கின்றது என்றும் அனுமதி வழங்கப்பட்ட விதம் தொடர்பில் கருத்துறைக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இலங்கை போக்குவரத்து சபை அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கி தமது நாளாந்த செயற்பாட்டை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார். சந்திப்பின் பின்னர் அமைச்சரை குறித்த பேரூந்து நிலையத்திற்கு அழைத்து வந்து காண்பித்திருந்தோம்.

நேரில் பார்வையிட்ட அமைச்சருக்கு பாரிய அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பேரூந்து நிலைய அபிவிருத்தி திட்டம் தொடர்பில் முதல்வர் விளக்கினார். அதற்கு அமைச்சர் அவர்கள் தற்போதைய பேரூந்து நிலையத்தை தற்காலிகமாக புகையிரத நிலையத்தின் வடக்குப்பக்கமாகவுள்ள இடத்தில் செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக குறிப்பிட்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்த வியாபாரிகளின் நிலையை கருத்திற்கொண்டு நான் தான் இவ் வியாபாரிகளினதும் கடைகளை தற்காலிகமாக புகையிரத நிலையத்தின் வடக்குப்பக்கத்தில் செயற்படுத்த அனுமதி வழங்க முடியுமா? என்ற விண்ணப்பத்தை முன்மொழிந்தேன். அதற்கு அமைச்சர் உடனடியாக பேரூந்து சேவைக்கான அனுமதியை மாத்திரமே வழங்க முடியும் என்றும் அடுத்த தனது யாழ் விஜயத்தில் அது தொடர்பில் பதில் தருவதாக குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் பிரதமருடன் யாழ் விஜயம் மேற்கொண்ட அமைச்சரிடம் நான் இவ் வியாபாரிகளின் தற்காலிக கடைகளுக்கான மேற்படி அனுமதி தொடர்பில் வினவிய போது அமைச்சர் கூறினார். ‘ குறித்த அனுமதி தொடர்பில் போக்குவரத்து சபையினால் அதன் விழுமியங்களுக்குற்பட்டு அனுமதி வழங்க முடியாது’ என்று குறிப்பிட்டார்.

எனவே இந்த வியாபாரிகளுக்கு நாங்கள் கடை கொடுக்கவும் இல்லை, அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கவும் முடியாது. ஆனால் மாநகரின் மத்தியில் அவர்கள் இயங்குகின்றபடியால் அவர்கள் என்னிடம் வந்து அவர்களின் குடும்ப நிலை, வங்கிகள் போன்ற இடங்களில் கடன்களைப் பெற்று இவ் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதனால் அதற்கு தாங்கள்தான் பாதுகாப்பு தர வேண்டும் என்று.

அதற்கு நான் ‘இது நீங்கள் முறையற்ற ரீதியில் சட்டவிரோதமாக கடைகளை அமைத்திருக்கின்றீர்கள். இதனை நீங்கள் முதலில் அப்புறப்படுத்த வேண்டும். உங்களுக்கேற்ற இடத்தில் நீங்கள் சென்று தொழில் முயற்சிகளை ஆரம்பியுங்கள் ஆனால் எதிர்காலத்தில் இதில் ஒரு வர்த்தகஸ்தானம் ஒன்று உருவாகின்ற போது அதற்குள்ளே உங்களுக்கும் ஒரு வியாபார நிலையத்தை அமைப்பதற்குரிய பாதுகாப்பை வழங்குவதற்குரிய முயற்சியை நான் சபை மூலமாக உறுதிப்படுத்தித்தர முடியும். ஏன் என்றால் தற்பொழுது சட்டவிரோதமாக இருந்தாலும் இதுவரை வியாபாரம் செய்து வந்த உங்கள் குடும்பம் நிலை,  உங்கள் எதிர்காலத்திற்காக அப் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க முடியுமே தவிர இப்பொழுது நான் ஒன்றுமே வாக்குறுதி வழங்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தேன்.

எனவே தற்பொழுது போக்குவரத்து சபையும் அவர்களை மாநகர கட்டளைச் சட்டத்தை குறிப்பிட்டு உடனடியாக அப்புறப்படுத்துவமாறும், இனி தாங்களும் வரி அறவிடமாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதன் பின்னர் நான் குறித்த வியாபாரிகளை கடந்த வாரம் சந்தித்து குறித்த விடயங்களை தெளிவாக விளக்கியிருந்தேன். எனவே ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் இக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டிய விடயம் தொடர்பிலும் குறிப்பிட்டிருந்தேன். இத்தாமதமே எமது திட்டத்தை அமுழ்படுத்துவதில் காலதாமதத்தை ஏற்படுத்துகின்றது என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன்.

இத்தனை நடவடிக்கைகளுக்கும் பிறகே இது தொடர்பில் பல்வேறு செய்திகள் திரிவுபடுத்தப்பட்டு வெளிவந்திருந்தது. எனவேதான் இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.