கட்டுநாயக்க தாக்குதலை நினைவுபடுத்திய முன்னாள் அதிகாரி!

விடுதலைப்புலிகள் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியதில்லை என அரச புலனாய்வு சேவையின் ஆராய்ச்சி பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரும், புலனாய்வு ஆலோசகருமான கலாநிதி அஜித் ரோஹன கொலோன்னே தெரிவித்துள்ளார்.


தனியார் சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணாலில் அவர் இதனை கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் எந்த எதிர்ப்புகளும் இருக்கவில்லை. அவர்கள் வெளிநாட்டவர்களை குறித்து தற்கொலை தாக்குதல்களை நடத்தியதில்லை. அந்த விடயத்தில் அவர்கள் கவனமாக இருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய போது, வெளிநாட்டு விமான சேவைகளின் விமானங்கள் புறப்பட்டுச் செல்லும் வரையில் ஓடுதளப் பகுதிகளில் பதுங்கி இருந்து ஸ்ரீலங்கன் விமானங்கள் மீது மாத்திரமே தாக்குதல் நடத்தினர். அத்துடன் விடுதலைப் புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர்.

ஆனால், தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளை அவர்கள் இலக்கு வைத்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மக்களுக்கு பெரிய உயிர் அழிவை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கலாம்.

வெளிநாட்டவர்களுக்கு கூடுதலான சேதத்தை ஏற்படுத்துவதும், சுற்றுலாத்துறையை மழுங்கடிக்கச் செய்வதும் இத்தாக்குதலின் பிரதான நோக்கமாக இருக்கலாம். இதேபோன்ற தாக்குதல்கள் வெளிநாடுகளிலும் நடந்திருக்கின்றன.

குறிப்பாக பிரான்ஸ் போன்ற நாடுகள் இதுபோன்ற தாக்கதல்களை எதிர்நோக்கியிருக்கின்றன. இலங்கையில் தற்போது இடம்பெற்ற தாக்குதல்களினால் இலங்கை ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டிருக்கின்றன.

இதனைத் தவிர கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது குறி வைக்கப்பட்டுள்ளதால், தாக்குதல் நடத்தியவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான தாக்குதல் நடத்தினார்களா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கலாநிதி அஜித் ரோஹன கொலோன்னே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விடுதலைப் புலிகள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.