Dr. இரகுபதி ஞாபகார்த்த அவசர சிகிச்சைப் பிரிவு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் திறப்பு!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அளப்பெரும் நோயாளர் பிணி தீர்த்து அமரத்துவமடைந்த வைத்திய நிபுணர் Dr.இரகுபதி ஞாபகார்த்த அவசர சிகிச்சைப் பிரிவு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்குத் திறந்துவைக்கப்பட உள்ளது.


இந்த அவசர சிகிச்சைப் பிரிவை வைத்திய நிபுணர் Dr.இரகுபதி அவர்களின் பாரியார் திறந்துவைக்க உள்ளார்.

இலண்டனைத் தலைமையகமாகக் கொண்ட வைத்தியர்களின் ஒருங்கிணைந்த அமைப்பான 'அபயம்' சமூகசேவைக்கான அமைப்பு, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உண்மை மக்கள் தொண்டனாக சேவைநோக்குடன் அளப்பெரும் மருத்துவசேவையாற்றி, அமரத்துவமடைந்த வைத்திய நிபுணர் Dr.இரகுபதி ஞாபகார்த்தமாக  அவசர சிகிச்சைப் பிரிவைப் புனரமைத்து, மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்து 40 லட்சம் ரூபா செலவில் வைத்திய நிபுணர் Dr.இரகுபதி ஞாபகார்த்த அவசரசிகிச்சைப் பிரிவை அமைத்துத் தந்துள்ளனர்.

வைத்தியநிபுணர் அமரத்துவமடைவதற்கு முன்பாகவே, 'அபயம்' அமைப்பினரிடத்தில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு புனரமைப்பு செய்வது தொடர்பாகவும், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்குமான வேண்டுகையை முன்வைத்திருந்தார். அமரத்துவமடைவதற்கு முதல்நாள்கூட இந்த வேலைத்திட்டம் தொடர்பாக  'அபயம்' அமைப்பைச் சேர்ந்த வைத்தியநிபுணர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தார்.

வைத்திய நிபுணர் Dr.இரகுபதி அவர்களின் பேரவாவை நிறைவுசெய்யும் பொருட்டு, அவருக்கு - அவரது வேண்டுகைக்கு - கௌரவமளிக்கும் பொருட்டு 'அபயம்' அமைப்பினர் இந்த வேலைத்திட்டத்தை மேற்கொண்டு, அவரது ஞாபகார்த்தமாக இச்சிகிச்சைப் பிரிவை அமைத்து, அவரது பாரியார் ஊடாகத் திறந்து நோயாளர் பாவனைக்காகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr.யோ.திவாகர் தiலைமை தாங்குவார்.

இந்த நிகழ்வில் வைத்தியநிபுணர்கள், வைத்தியர்கள், தாதிமார்கள், வைத்தியசாலைச் சமூகத்தினர், சமூக நோக்குடையவர்கள், வைத்தியநிபுணர் அவர்களின் நோயாளர்கள், நண்பர்கள், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு 'அபயம்' அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.