அரச அதிகாரிகளே நீங்கள் நல்லவர்களா? கெட்டவர்களா?

ஜனாதிபதி மைத்திரி அவர்களே மீண்டும் மீண்டும் வருக!

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்டத்துக்காக ஜனாதிபதி மைத்திரி அவர்கள் மட்டக்களப்புக்கு விஜயம் செய்கிறார்.

அதனை முன்னிட்டு பல நூற்றுக்கணக்கான அபிவிருத்தித் திட்டங்களை அரச நிறுவனங்கள் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் மேற்கொள்கின்றன. இந்தத் திட்டங்களால் மக்களுக்கு பெரும் நன்மைகள் கிடைத்துள்ளதாகவும் அரச நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இது மகிழ்ச்சிக்குரியது. அரச நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் எமது பாராட்டுக்கள்.

ஆனால், இந்தத்திட்டங்களுக்காக கிட்டத்தட்ட கடந்த ஒரு வாரமாக அரசாங்க பணியாளர்களும் அதிகாரிகளும் பம்பரம்போல மாவட்டம் முழுவதும் சுழன்று திரிவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

முழுநீளச் சட்டையை இழுத்து மடித்துக்கொண்டு அதிகாரிகள் சித்திரை வெயிலில் ஓடி ஓடி உழைத்தார்கள். வியர்த்து விறுவிறுத்து அவர்கள் நின்றதை பல இடங்களில் பார்த்தோம்.

ஆர்ப்பாட்டத்துக்கு பாதுகாப்புக் கொடுக்கும் அல்லது அதனைக் கட்டுப்படுத்த விளையும் பொலிஸார், ஊர்வலம் ஒன்றில் போதைப்பொருள் ஒழிப்பு பிரச்சார பிரசுரங்களை கொடுத்து வந்தது ஆச்சரியமாக இருந்தது.

எழுவான்கரை, படுவான்கரை என எல்லா இடங்களிலும் அரசாங்க அதிகாரிகள் நீக்கமற நிறைந்திருந்தார்கள். அவர்கள் வியர்க்க விறுவிறுக்க ஓடியாடி, மூச்சிரைக்க வேலை செய்ததைப் பார்க்க ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் அவர்களைப் பார்க்க மிகவும் பரிதாபமாகவும் இருந்தது.

இரட்டிப்பு வேகத்தில், இரட்டிப்பு மடங்கு வேலைகளை, இரட்டிப்புச் சக்தியைப் பயன்படுத்தி, ஓடி ஓடி உழைத்தார்கள்.

அரசாங்க அதிகாரிகள் இவ்வளவு நல்லவர்களா என்று நினைக்கத் தோன்றியது. அதேவேளை, இப்படி இவர்கள் ஒவ்வொரு நாளும் உழைத்திருந்தால் எங்கள் மட்டக்களப்பு ஒரு பொன்பூமியாக மாறியிருக்குமே என்றும் எண்ணத்தோன்றியது.

அரச அதிகாரிகளே உண்மையில் நீங்கள் யார் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா? இவ்வளவு அதிகமாக வேலை செய்து குறுகிய காலத்தில் இவ்வளவு (நீங்கள் அறிவித்ததன்படி) சாதிக்கும் திறமை உங்களிடம் இருந்திருக்கிறதே என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அதேவேளை, இப்படி உழைக்கக்கூடிய நீங்கள் இவ்வளவு நாளும் இப்படி உழைக்காமல் இருந்து நேரத்தை வீணடித்திருக்கிறீர்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இவ்வளவு நாளும் உழைக்காமல் இருந்ததால்தான் இப்போது இரட்டிப்பாக உழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டீர்களோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்ட திட்டங்களுக்காக ஒரு வாரத்தில் இவ்வளவு உழைக்க முடியும் என்றால் ஏன் இவ்வளவுநாளும் அதனைத் தினமும் செய்யவில்லை? ஏன் இந்த அழுத்தம் உங்கள்மீது? செயற்திறன் இல்லாமல் இருப்பது குறைதான். ஆனால், செயற்திறனுக்கான வல்லமை இருந்தும் அதனைப் பயன்படுத்தாமல் இருப்பது பெரும் தவறில்லையா?

பலர் இரட்டிப்பு வேலை செய்ததுடன், பல சந்தர்ப்பங்களில் ஒரே வேலையை இரு தரப்பு ஒரே நேரத்தில் இரட்டிப்பாகச் செய்ததாகவும் சிலர் குறைப்படுகிறீர்கள். என்றும் இல்லாமல்  திடீரெனச் செய்யப்போனதால் இந்த தடுமாற்றமா?

எல்லாரையும் நான் குறைகூறவில்லை. உண்மையாகவே கடமையை தலைமேல் கருதி உழைக்கும் அதிகாரிகளை நான் நேரடியாகவும் அறிவேன். இது எவரையும் தனிப்பட்ட வகையில் தாக்கும் ஒரு ஒரு பத்தி அல்ல. இது அனைவருக்குமானது.

எங்களை எங்கள் வேலைக்கு மேலாக செய்ய அழுத்தம் கொடுத்துவிட்டார்கள் என்றெல்லாம் நீங்கள் சாக்குப் போக்குச் சொல்ல முடியாது. ஏனெனில் நீங்கள் கொடுக்கப்பட்ட வேலைகளை குறுகிய காலத்தில் செய்து முடித்திருக்கிறீர்கள். ஜனாதிபதி வருகைக்காக மாத்திரம் ஏன் இப்படி உழைக்கிறீர்கள் என்பதுதான் எங்கள் கேள்வி. உங்களை, அளவுக்கு அதிகமாக வேலை வாங்கியிருந்தால், அதனால் உங்கள் உரிமை மீறப்பட்டிருந்தால், உங்களுக்கு தொழிற்சங்கங்கள் இருக்கின்றன, மேம்பாட்டுக்கான அமைப்புக்கள்(பொலிஸாருக்கு இல்லாமல் இருக்கலாம்) இருக்கின்றன. ஏன் நீங்கள் அவற்றைக் கொண்டு உங்கள் ஆட்சேபணையை இதுவரை தெரிவிக்கவில்லை.

நீங்கள் அப்படி எதுவும் செய்ததாகத் தெரியவில்லையே. ஆகவே நீங்கள் உரிய அளவுக்குத்தான் இந்தக் காலகட்டத்தில் வேலை செய்திருக்கிறீர்கள் என்று நாங்கள் எண்ணத் தோன்றுகிறது. ஆகவே ஏனைய காலங்களிலும் ஏன் நீங்கள் இப்படி உழைக்கவில்லை என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

நீங்கள் அப்பாவியா அல்லது உழைக்காமல் காலம் கடத்தீர்களா? அல்லது உங்கள் மேலிடத்துக்கு பயந்துபோய் இருக்கிறீர்களா என்று விடை தெரியாமல் மகா பொதுசனங்கள் மலைத்து விழி பிதுங்கி நிற்கிறார்கள். உண்மையில் நீங்கள் யார். ஜனாதிபதி வந்தால் மாத்திரந்தான் வேலை செய்வீர்களா?

அப்படியானால் ஜனாதிபதியை மாதம் ஒரு தடவை மட்டக்களப்பு வருமாறு நாங்கள் அழைக்க வேண்டுமோ?

எது எப்படி இருந்தாலும் அதிர்ஸ்டவசமாக புதுவருடம் கூடவே வருகின்றது. அந்தநாட்களில் விடுமுறை எடுத்து, உடற்களைப்பு நீங்கி, மக்கள் மணிக்கு புதிய உத்வேகத்துடன் திரும்பி வாருங்கள்.

எங்கள் மீது உங்களுக்கு கோபம் வருவது புரிகிறது. மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாக நீங்கள் உணர்வதும் புரிகிறது. என்ன செய்வது உங்களை நாம்தான் விமர்சிக்க வேண்டும். இது பாதகமான விமர்சனம் அல்ல. சாதகமான தட்டிக்கொடுப்புத்தான்.

உங்களுக்கு எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்

சீவகன் பூபாலரட்ணம்
அரங்கம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.