கிளிநொச்சி கரந்தாய் பகுதியிலிருந்து மக்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்!!

கிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

கரந்தாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றத்திற்கு கிளிநொச்சி நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து (வியாழக்கிழமை) மக்களை அங்கிருந்து பொலிஸார் வெளியேற்றியுள்ளனர்.
கிளிநொச்சி – கரந்தாய் பிரதேசத்தில் தலா ஒரு ஏக்கர் வீதம் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் 101 பேருக்கு வழங்கப்பட்ட காணியை தெங்கு அபிவிருத்தி சபை தமது காணி என இதுவரை உரிமைக்கோரி வந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் தலைமையில் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இதன்போது காணி விடயம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மற்றும் சிபாரிசுகள் தொடர்பாக காணியை உரிமை கோருவதற்கு தெங்கு அபிவிருத்தி சபைக்கு அதிகாரம் இல்லை என்றும் அது மக்களிற்கே வழங்கப்பட வேண்டும் என்பதையும் மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த காணி விடயம் குறித்து கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் பலமுறை பேசப்பட்டபோதிலும் எதுவித முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை.
அத்தோடு யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னரும் இந்த விடயம் இழுபறி நிலையில் இருந்து வந்தமையினால், மக்கள் தமக்கு சொந்தமானதென உரிமைகோரும் காணியில் கடந்த செவ்வாய்க்கிழமை அத்துமீறி குடியேறியிருந்தனர்.
இதனையடுத்து பளை, கரந்தாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றத்திற்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
அத்துடன், காணி உரிமம் உள்ளோரை ஆவணங்களுடன் எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.