‘பேரழகி’ ஷில்பா எடுத்த ரிஸ்க்!

முன்னணி கதாநாயகிகள் பலரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துவரும் நிலையில் திரையுலகில் அறிமுகமாகி வெகுவிரைவாக அந்த வாய்ப்பை பெற்றுள்ளார் ஷில்பா மஞ்சுநாத். விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான ஷில்பா மஞ்சுநாத் அதைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் நடித்து கவனம் பெற்றார். அதைத் தொடர்ந்து சி.விஜயன் இயக்கத்தில் பேரழகி ஐஎஸ்ஓ திரைப்படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். கதாநாயகிகளுக்கு இரட்டை வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு அரிதாகவே கிடைக்கும் போது ஷில்பாவுக்கு அந்த வாய்ப்பு இந்தப் படத்தின் மூலம் அமைந்துள்ளது. திரையுலகிற்குள் நுழையும் முன் 2003ஆம் ஆண்டு ‘மிஸ்.கர்நாடகா’ பட்டம் வென்ற ஷில்பா இந்தப் படத்தில் பேரழகியாகவும், வயது முதிர்ந்த பெண்மணியாகவும் நடித்துள்ளார். சவாலான இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளது அவரது திரைப்பயணத்தில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. சயின்ஸ் பிக்சன், தொண்மக் கதை என பல தளங்களில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நீ என்ன மாயம் செய்தாய், மித்ரா ஆகிய படங்களில் நடித்த விவேக், சச்சு, சரவண சுப்பையா, லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார். மே 10ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.