தமிழரின் ஆயுதப்போராட்டம் மீண்டும் வெடிக்கலாம்!!

தமிழரின் ஆயுதப்போராட்டம் மீண்டும் வெடிக்கலாம் என சிங்கள பேரினவாதிகள் நம்புகின்றனர் என ரெலோ தெரிவித்துள்ளது. அத்துடன் அந்த அச்சம் கலந்த உணர்வோடே ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் தமிழர்களை கையாண்டு வருவதாக ரெலோவின் செயலாளர் நாயகம் ந.சிறிகாந்தா குறிப்பிட்டுள்ளார்.இராணுவக் குறைப்பு குறித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு பதலடி கொடுக்கும் வகையில் ரெலோ இன்று விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இராணுவத்தின் பிரசன்னத்தால் அச்சத்திற்கு ஆளாகும் நபர்களும், அவர்களின் குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவதே சாத்தியமான தீர்வாக அமைய முடியும் என்று இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்திருக்கின்றார்.

இது அவரின் கருத்து என்பதை விட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் நிலைப்பாடு என்றே கொள்ளவேண்டும்.

நாட்டின் பாதுகாப்பிற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவத்தின் உயர்மட்ட தலைமைக்கு பல தடவைகள் தெரிவித்துள்ள நிலையிலும் இப்பிரதேசத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தொடர்ந்து நிலைகொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன் கொழும்புக்கு வெளியே அமைந்திருக்கும் இராணுவத்தின் 7 தலைமையகங்களில் வடக்கில் நான்கும், கிழக்கில் ஒன்றுமாக மொத்தம் 5 தலைமையகங்கள் வட.கிழக்குப் பிரதேசத்தில் அமைந்திருக்கின்றன என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

இதற்கான ஒரேயொரு காரணம் எதுவெனில், வட.கிழக்கு மாகாணங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து தனது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால், கட்டாயமாக இத்தகைய இராணுவப்பிடிக்குள் இப்பிராந்தியம் இருந்தே ஆக வேண்டும் என அது நம்புவதே ஆகும்.

வேறு விதமாகச் சொல்வதானால் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை திருப்திப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படாத வரையில் தமிழர் தரப்பில் இருந்து ஆயுதப்போராட்டம் ஒன்று மீண்டும் வெடிக்கக் கூடும் என சிங்களப் பேரினவாதிகளின் தரப்பில் நிலவிக்கொண்டிருக்கும் ஏகமனதான கருத்தொற்றுமையின் பிரதிபலிப்பே அது என்று கூறித்தான் ஆகவேண்டும்.

இதில் ஆச்சரியத்திற்கு எதுவும் இல்லை. யுத்தம் முடிவடைத்து 10 வருடங்கள் முடிவடையும் நிலையிலும் கூட தமது நீண்ட கால அரசியல் அபிலாசைகளை துணிச்சலோடு இறுகப் பற்றி நிற்கும் தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையை, கடந்த கால அரசாங்கங்களைப் போலவே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கமும் அச்சம் கலந்த எச்சரிக்கை உணர்வோடு கையாண்டு கொண்டிருக்கின்றது என்பதே கசப்பான உண்மையாகும்.

இத்தனைக்கும் இந்த அரசாங்கம் வீழ்ந்து விடாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவுடன் கூடிய ஆதரவு தான் அதனைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது என்பது அதை விட, மிகக் கசப்பான உண்மையாகும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்ட விடயங்கள் குறித்து தனது மைத்துனரான பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, ஊடாக நாசுக்காகத் தெரிவிக்கும் யுக்தியைக் கைக்கொள்பவர் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவர்.

முன்பு “படைத்தளங்களை வானத்தில் அமைக்க முடியாது. நிலத்தில் தான் அவற்றை நிறுவ முடியும்” என்ற ஓர் அற்புதமான கருத்தை இதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன வெளியிட்டதை மறந்து விடுவதற்கில்லை.

பிரதமர் ரணிலைப் போலவே இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனவும் முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ஜே.ஆர். ஜயவர்த்தனவின் மருமகன் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட வேண்டும். அந்த அதி உத்தமரின் வழியில் அரசியலுக்கு வந்தவர்கள் அவரின் பாணியில் பேச முயற்சிப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்கு உரியதல்ல.

ஆனால், இதிலுள்ள புதுமை யாதெனில், போரில் புலிகள் இயக்கத்தினைத் தோற்கடித்ததாக இப்போதும் மார்தட்டிக்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவருடைய கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட தலைவர்களும் கூட பேசத் துணியாத அப்பட்டமான பேரினவாதக் கருத்துக்களை ருவான் விஜயவர்தன போன்ற இளைய அரசியல்வாதிகள் தயக்கம் இன்றிக் கக்குகின்றார்கள் என்பது தான்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாடு முழுவதும் பரந்துபட்ட அளவில் இராணுவத்தின் பிரசன்னத்தை சமநிலைப்படுத்தி, அதன் ஊடாக வட கிழக்கில் நிலவிக்கொண்டிருக்கும் இராணுவமயச் சூழ்நிலையின் இறுக்கத்தையும் நெருக்குதலையும் தளர்த்துவதற்குக் கூட இந்த அரசாங்கம் தயாரில்லை என்றால் அதைச் சாதிப்பதற்கு என்ன வழி என்பதை கட்டாயமாக தமிழ் மக்கள் சிந்தித்தே தீரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.