கன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020!

விகாரி வருட ராசிபலன்கள்14.4.2019 முதல் 13.4.2020 வரை
(உத்ரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் வரை)
(பெயரின் முதல் எழுத்துக்கள் : ப,பி,பு,பூ,ஷ,ண,ட,பே,போ உள்ளவர்களுக்கும்)




கன்னி ராசி நேயர்களே,

விகாரி வருடம் தமிழ் புத்தாண்டு பிறக்கும் பொழுதே உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் சனி, கேது, வியாழன் ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரிக்கின்றார்கள். அர்த்தாஷ்டம குரு, அர்த்தாஷ்டம கேது, அர்த்தாஷ்டம சனி ஆகிய மூன்று கிரகங்களும் 4-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் ஆண்டு முழுவதும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

சனியின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால் எந்தக்காரியத்தையும் தொடங்கும் முன் ஒரு கணம் சிந்திப்பது நல்லது. விரயங்களை சுபவிரயங்களாக மாற்றிக்கொள்ளுங்கள். மருத்துவச்செலவுகள் மனக்கலக்கத்தைத் தரும். இடமாற்றம், வீடு மாற்றம், நாடு மாற்றம், உத்தியோக மாற்றம், ஊர் மாற்றம், வாகன மாற்றம் போன்றவற்றில் ஏதேனும் ஒரு மாற்றத்தை நீங்கள் சந்தித்தே ஆக வேண்டும். வரும் மாற்றங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தரும்.

தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிறுசிறு தொல்லைகள் அடிக்கடி வந்து கொண்டேயிருக்கும். உடல்நலச் சீர்கேடுகள் உருவாகலாம். அதுமட்டுமல்ல குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலக்குறைபாடுகள் வந்து கொண்டேயிருக்கும். குரு கல்வி ஸ்தானத்தில் பலம் பெற்றிருப்பதால் குழந்தைகளின் படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.


தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் தற்சமயம் ஈடுபடுவது அவ்வளவு நல்லதல்ல. அர்த்தாஷ்டமச் சனி விலகிய பிறகு எடுக்கும் புது முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பதவி ஓய்வுபெற்றுப் பின்பும் பதவி நீடிக்குமா? என்று நினைக்கலாம். ஆனால் 10-ம் இடத்தை சனி, கேது ஆகிய இரண்டு வலிமை பெற்ற கிரகங்கள் பார்ப்பதால் பதவி நீடிப்பு கிடைப்பது அரிது.

அதே நேரத்தில் பதவி ஓய்விற்குப் பிறகு வேறு பணியில் சேரும் வாய்ப்புக் கிடைக்கலாம். வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அதை மாற்றம் செய்ய முன்வருவது நல்லது.

தைரிய ஸ்தானாதிபதி செவ்வாய் வருடத்தொடக்கத்தில் 9-ம் இடத்தில் சஞ்சரித்தபடியே தன்னுடைய ஸ்தானத்தை பார்ப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் உங்கள் முன்னேற்றத்திற்கு மூலகாரணமாக அமையும்.

10-ல் ராகு இருப்பது ஒருவழிக்கு நன்மைதான். பழைய தொழிலில் இருந்து விடுபட்டு புதுத் தொழிலுக்கு மாறும் யோகம் ஒருசிலருக்கு உண்டு. உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். அதன் விளைவாக விருப்ப ஓய்வில் வெளிவந்து வேறுதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

விரயாதிபதி சூரியன் 8-ல் இருப்பதால் விரயத்திற்கேற்ற வரவு வந்து கொண்டே இருக்கும். கையில் காசு, பணம் இல்லையே என்று கவலைப்படாமல் காரியங்களைத் தொடங்கினால் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு கேட்ட பதவிகள் கிடைப்பது அரிது. அதே நேரத்தில் கிடைத்த பதவியைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிப்பீர்கள்.

தனுசு குருவின் சஞ்சாரம்(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)

இக்காலத்தில் குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எத்தனை கிரகங்கள் பார்த்தாலும், குருவின் பார்வைக்குத்தான் பலன் அதிகம். அங்ஙனம் குரு 8-ம் இடத்தைப் பார்ப்பதால் தொழிலில் இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.


வீண் விவகாரங்களால் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறத் தொடங்கும். இடங்கள் வாங்க பத்திரப் பதிவில் ஏற்பட்ட தடைகள் அகலும். சிறுநீரகக் கோளாறுகள் அகலும்.

குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவது யோகம் தான். பத்தாமிடத்தைக் குரு பார்ப்பதால் முத்தான தொழில் அமையும் என்பது முன்னோர் வாக்கு. அந்த அடிப்படையில் நீங்கள் தொழில் நடத்துபவர்களாக இருந்தால் இப்பொழுது தொழில் சூடுபிடிக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.


அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பொதுநலம் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் பின்னணியாக இருக்கும் பிரபலஸ்தர்களின் முயற்சியால் புதிய பதவி களைப் பெறுவர். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சுய ஜாதகம் பலம் பெற்றிருந்தால் இப்பொழுது அவர் களுக்கு அரசுப்பணி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.


குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். நேராநேரத்திற்கு சாப்பிட முடியவில்லையே என்றும், நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள பயணம் செய்து கொண்டேயிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றதே என்ற எண்ணம் தலைதூக்கும். அதற்குரிய விதத்தில் பலன்களும் உங்களுக்கு கிடைக்கும்.


வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு அங்கிருந்து அழைப்புகள் வரலாம். பொதுவாகவே சுபவிரயங்கள் அதிகரிக்கும் நேரமிது. புத்திரப்பேறுக்காகக் காத்திருப்பவர் களுக்கு அது கைகூடும். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு.

விருச்சிக குருவின் சஞ்சாரம்(18.5.2019 முதல் 28.10.2019 வரை)

இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும் பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்கு உள்ளேயே உலா வருகின்றார். இதன் பலனாக நிறைய மாற்றங்கள் உங்களுக்கு வந்து சேரப்போகின்றது.


விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றன. பல மாதங்களாக வரன்கள் வாயில்தேடி வந்தும், ஒன்று கூட பொருந்தவில்லையே வீட்டில் எப்பொழுதுதான் கெட்டிமேளம் கொட்டும் வாய்ப்பு கைகூடும் என்று நினைத்தவர்களுக்கு இப்பொழுது மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில், வரும் ஜாதகம் எல்லாம் பொருத்தமளிக்கும் விதத்தில் இருக்கப் போகின்றது. அதுமட்டுமல்ல இதுவரை பார்த்த வரன்களை விட இப்பொழுது வந்த வரன்கள் மிகச் சிறப்பானதாக இருக்கின்றதே என்று நீங்கள் நினைப்பீர்கள்.


ஒன்பதாம் இடத்தைக் குரு பார்ப்பதால் பொன், பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. தந்தை வழியில் ஏதேனும் உதவிகள் கேட்டு இதுவரை உங்களுக்கு அமையாமல் இருந்தால், அது உங்களுக்கு இப்பொழுது அமையும். மற்ற சகோதரர்களிடம் காட்டுகிற பாசத்தைக் காட்டிலும் பெற்றோர்கள் உங்களிடம் பாசம் அதிகம் காட்டுவர். அதுமட்டுமல்லாமல் தொழிலுக்காக நீங்கள் உதவி கேட்டால் கூட அதையும் செய்ய முன்வருவர். பூர்வீக சொத்துக்களை பிரிப்பதில் இருந்த தடை அகலும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும்.

குருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் தொழிலில் லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகவே கிடைக்கும். வசூலாகாத பாக்கிகள் வசூலாகும். வாங்கல் கொடுக்கல்களில் இருந்த மந்தநிலை மாறும். பணிபுரிபவர்களுக்கு பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். பணியிலிருந்து விடுபட்டவர்களுக்கு மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பும் கை கூடும்.

சனியின் சஞ்சார நிலை

ஆண்டு முழுவதும் சனிபகவான் 4-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். அர்த்தாஷ்டமச் சனியாக உலா வருகின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார். சனியின் பார்வை உங்கள் ராசியின் மீதும் பதிகின்றது. 6, 10 ஆகிய இடங்களிலும் பதிகின்றது.

எனவே மறைமுக எதிர்ப்புகள் விலகும். மனக்கசப்புகள் மாறும். முக்கியப்பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு பதவி மாற்றங்கள் உருவாகலாம். சனியின் வக்ர காலத்தில் பிள்ளைகள் வழி யில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். விரயங்கள் கூடுதலாகக் கிடைக்கும்

ராகு-கேதுக்களின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் ராகுவும், 4-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். 10-ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்பார்கள். அந்த அடிப்படையில் ராகு இருப்பதால் தொழில் முன்னேற்றம் உண்டு. வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும். பங்கு வர்த்தகமும், ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் இருப்பவர் களுக்கு சீரான லாபமும், சிறப்பான முன்னேற்றமும் கிடைக்கும். வேலைச்சுமை கூடினாலும் கூட பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சுக ஸ்தானத்தில் கேது இருப்பதால் எலும்பு, நரம்பு சம்மந்தப்பட் வகையில் வலி வந்து நீங்கும்.

சனி-செவ்வாய் பார்வைக்காலம்(14.4.2019 முதல் 23.6.2019 வரை)

இக்காலத்தில் அன்னையில் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். வாங்கிய கடனுக்காக ஒருசில சொத்துக்களை விற்றுக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகும். பிறருக்கு பொறுப்பு சொல் வதைத் தவிர்ப்பது நல்லது. இக்காலத்தில் அங்காரகனுக்கும், சனிக்கும் உரிய ஸ்தலங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்

கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டில் வரவும், செலவும் சமமாகவே இருக்கும். பண நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத விதத்தில் வரவு உண்டாகித் தேவைகளைப் பூர்த்தியாக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் அதிக அக்கறை செலுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறு பாடுகள் தோன்றி மறையும்.

 பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்பட குலதெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். புகுந்த வீட்டில் உள்ளவர்களிடம் குறிப்பாக வயதில் மூத்தவர்களிடம் ஆலோசனை களைக்கேட்டு செயல்படுவதன் மூலம் அமைதிகாண இயலும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். சகோதரர்களில் ஒருசிலர் மட்டும் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றங்கள் தானாக வந்து சேரும்.ஆனால் அது எதிர்பார்த்த இடமாக அமையாது.

 விருப்பப்பட்ட இடம் கிடைக்கவில்லையே என்று கவலைப்படாமல் கிடைத்த இடத்திலேயே விரும்பிப் பணிபுரிவது நல்லது. மேற்குப்பார்த்த துர்க்கை வழிபாடும், திசைமாறிய தெய்வ வழிபாடும் செயல்பாடுகளில் வெற்றியைக் கொடுக்கும்.

வருடம் முழுவதும் வசந்த காலமாக வழிபாடு

பிரதோஷ நேரத்தில் விரதமிருந்து நந்தியெம்பெருமானை வழிபட்டு வருவது நல்லது. நாககவசம் பாடி ராகு-கேதுக்களை வழிபடுவதன் மூலம் தேக நலனும் சீராகும், திடீர் திருப்பங்களும் ஏற்படும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.