தயாரிப்பாளராகணும்னு ஆசைப்பட்டேன். அதற்கான சூழல் இப்போதான் அமைஞ்சிருக்கு" நடிகை லலிதா குமாரி!!

புதுசா ஏதாவதொரு முயற்சிகளை செய்துகிட்டேதான் இருக்கணும். அப்போதான் அடுத்தடுத்தகட்டத்துக்கு நாம போக முடியும். எனக்குச் சினிமா தொழில் பத்திதான் அதிகம் தெரியும். இதில்தான் ஈடுபாடும்கூட.
நடிப்பில் ஆர்வமில்லாத சூழலில், தயாரிப்பாளராகணும்னு ஆசைப்பட்டேன். அதற்கான சூழல் இப்போதான் அமைஞ்சிருக்கு" என உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை லலிதா குமாரி. கலர்ஸ் தமிழ் சேனலில், `தறி' சீரியல் மூலம் தயாரிப்பாளராகியிருக்கிறார். அந்த அனுபவம் மற்றும் முன்னாள் கணவர்  நடிகர் பிரகாஷ்ராஜ்ஜின் தேர்தல் பணிகள் குறித்து, லலிதா குமாரியிடம் பேசினோம்.

தயாரிப்பாளரானது திடீர் முடிவா அல்லது முன்பே திட்டமிட்டிருந்தீங்களா?"

``என் அப்பா சி.எல்.ஆனந்தன் சினிமா தயாரிப்பாளர்தான். எங்க குடும்பத்தில் பலரும் சினிமாவில்தான் வேலை செய்றோம். கல்யாணத்துக்கு முன்பு வரை நடிச்சுகிட்டு இருந்தேன். பிறகு பல வருஷமா என் `நட்சத்திரா மீடியா வொர்க்ஸ்' கம்பெனி மூலமாக, பல நிகழ்ச்சிகளைத் தயாரிக்கிறேன். இந்நிலையில சினிமா தயாரிப்பாளராகணும்னு நினைச்சேன். அப்போதான் புதுசா தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ் சேனல்ல, புதுவிதமான சீரியல் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துட்டு இருந்தாங்க. அதனால, அந்த சேனலுடன் இணைந்து வேலை செய்யணும்னு முடிவு பண்ணினேன். சேனல் சி.இ.ஓ. அனூப் சார்கிட்ட பேசியபோது, அவர் ரொம்பவே ஊக்கம் கொடுத்தார். சீரியல், ரியாலிட்டி நிகழ்ச்சினு பல ஐடியாஸ் கொடுத்தேன். இறுதியா சீரியல் தயாரிப்பு முடிவாகி, நான் கொடுத்த மூணு கதைகளில், 'தறி' சீரியல் கதை தேர்வாச்சு."

நிஜ நெசவாளர்களின் கதையான 'தறி' சீரியல் கதைத் தேர்வுக்கு நிறைய முன்தயாரிப்புகள் தேவைப்பட்டிருக்குமே..."

ஆமாம்! நிறைய ஹோம்வொர்க் பண்ணித்தான், மூணு சீரியலுக்கான அவுட்லைன் கதையைத் தயார் பண்ணினேன். அதில், `தறி' கதையை சேனல் தரப்பினர் தேர்வு பண்ணினதும், மேற்கொண்டு முழுக் கதையை ரெடி பண்ண பல மாதங்கள் நானும், என் டீம் ஆட்களும் வேலை செய்தோம். எட்டு மாதங்களா, காஞ்சிபுரத்துக்குப் போய் நெசவாளர்களின் உண்மையான வாழ்க்கை நிலை, அந்தத் தொழில், நெசவாளர்களின் உணர்வுகள், பிரச்னைகளை நல்லா தெரிஞ்சுகிட்டோம். மேலும், ஆரணி, ஈரோடு உள்ளிட்ட நெசவுத்தொழில் அதிகம் நடக்கும் பகுதிகளுக்கும் போனோம். முடிவில் அந்த மக்களின் நிஜ வாழ்வியல் கதையுடன், கற்பனை மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை இணைந்து சீரியலின் முழுக் கதையையும் தயார் பண்ணினோம். இதற்கெல்லாம் ஓராண்டு தேவைப்பட்டுச்சு."

நடிகர், நடிகைகளை எப்படித் தேர்வு பண்ணீங்க?"

``அதுக்கு சேனல் தரப்புல நிறைய சப்போர்ட் பண்ணினாங்க. புது வரவாகவும் அதேசமயம் அவங்க கதைக்குப் பொருத்தமாகவும், ஓரளவுக்கு மக்களுக்குப் பரிச்சயமாகவும் இருக்கணும்னு நினைச்சோம். அதுக்காக பல மாதங்களா நேர்முகத்தேர்வு நடத்தினோம்."

``தயாரிப்பாளராக என்னென்ன சவால்கள் இருப்பதாக நினைக்கிறீங்க?"

``இப்போதான் தயாரிப்பாளரா முதல் அடியை எடுத்து வச்சிருக்கேன். இப்போவரை சேனல் தரப்பு உட்பட பல தரப்பிலும் பலரின் ஊக்கத்தால், எல்லா வேலைகளும் சிறப்பா போயிட்டு இருக்கு. என் அப்பாவின் பிறந்த நாளான ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்துதான், `தறி' சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பிச்சது. அந்தத் தேதி அறிவிப்பைக் கேட்டதுமே, எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்திடுச்சு. மறைந்த என் அப்பா, என் புது பயணத்துக்கு ஆசீர்வாதம் பண்ணின மாதிரி ஓர் உணர்வு. சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பிச்சு, ரெண்டு வாரங்கள்தான் முடிஞ்சிருக்கு. நல்ல ரிசல்ட் மற்றும் கருத்துகள் வருது. நெசவாளர்கள் பலரும் போன் பண்ணி, `எங்க உழைப்பு, வலி, வாழ்க்கைச் சூழலை சிறப்பா காட்சிப்படுத்துறீங்க'னு வாழ்த்து சொல்றாங்க. `காஞ்சிவரம்' திரைப்படத்துக்குப் பிறகு, இதுவரை நெசவாளர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் எந்தப் படைப்புகளும் வெளியாகலை. அதனால இந்தத் தொடரை தயாரிப்பதில் எனக்குக் கூடுதல் பெருமை."

உங்க நண்பர்களான நடிகர் சங்க நிர்வாகிகள் வாழ்த்து சொன்னார்களா?"

விஷால், நாசர் சார், கார்த்தி உட்பட ஏராளமான சினிமா நண்பர்கள் எனக்கு வாழ்த்துச் சொன்னாங்க. அவங்க வீட்டுப் பொண்ணு மாதிரி என் வளர்ச்சிக்கு ஆதரவு கொடுக்கிறாங்க."

நடிகர் பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுறார். அவருக்கு வாழ்த்துச் சொன்னீங்களா?"

``வேட்பாளரா போட்டியிடுற செய்தியைக் கேட்டதுமே, அவருக்கு வாழ்த்துச் சொன்னேன். சந்தோஷப்பட்டார். குடிமக்களில் யார் வேணாலும் தேர்தலில் போட்டியிடலாம். அவர் இதுவரை தேர்ந்தெடுத்த எல்லாத் துறைகளிலும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கார். அதுபோல, மக்களுக்கு நல்லது செய்யவே தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் வெற்றிபெற்று, நிச்சயம் மக்களுக்கு நல்லது பண்ணுவார். அதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. அப்பா மேல எங்க ரெண்டு மகள்களுக்கும் அளவுகடந்த பாசம் உண்டு. எங்க மூத்த பொண்ணு பூஜா பிரகாஷ்ராஜுக்கு இப்போதான் படிப்பு முடிஞ்சிருக்கு. `அப்பாவுக்காக நான் உதவி செய்யாம வேறு யார் செய்வா'னு என்கிட்ட சொன்ன பூஜா, உடனே பெங்களூரு போயிட்டா. அங்க அப்பா பிரகாஷ்ராஜுக்கு பி.ஆர். வேலை உட்பட தன்னாலான உதவியைச் செய்கிறாள். மேலும், காலை முதல் இரவு வரை அப்பாவை ஆதரிச்சு பிரசாரம் செய்கிறாள். குறிப்பா, அவருடைய பிரசாரத்தில், `பிரகாஷ்ராஜ் ஜிந்தாபாத்'னு குரல் எழுப்புகிற பொண்ணு, பூஜாதான். பொண்ணோட இந்தச் செயல்பாடுகளைப் பார்த்து எனக்கு ஆச்சர்யம் மற்றும் சந்தோஷமா இருக்கு."

சமீப காலங்களில் பிரகாஷ் ராஜுக்கு நிறைய அச்சுறுத்தல்கள் வருகிறது. இதுகுறித்து அவர்கிட்ட பேசினீங்களா?"

இதுபோன்ற எத்தகைய அச்சுறுத்தல்களையும் அவர் சமாளிப்பார். ஆனாலும், ஒருகட்டத்தில் எனக்குச் சின்ன பயம் வந்துச்சு. அவர்கிட்ட, `கொஞ்சம் கவனமாவும் ஜாக்கிரதையாவும் இருங்க'னு சொன்னேன். `பொது வாழ்க்கையில இதுபோன்ற நிறைய அச்சுறுத்தல்கள் வருவது இயல்பானது. அதை எதிர்கொண்டுதான் ஆகணும். இதுக்கெல்லாம பயந்தால், வாழ முடியாது. நடக்கிறது நடந்தே தீரும். என் பாதையில நான் போறேன். நீ கவலைப்படாம இரு'னு சொன்னார்" என்று புன்னகைக்கிறார் லலிதா குமாரி.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.