ரசிகர்கள் முன் நெகிழ்ந்த தோனி!

ஒட்டுமொத்த தமிழ்நாடும் அந்தப் பெயரை சொல்லும்போது ஸ்பெஷலாக இருக்கிறது' என ரசிகர்கள் முன் சென்னை கேப்டன் தோனி நெகிழ்ந்து பேசியுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சி.எஸ்.கே அணிகளுக்கிடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி, பௌலிங் தேர்வு செய்தது. அதன்படி சி.எஸ்.கே பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் டெல்லி அணியின் பந்துவீச்சால் சி.எஸ்.கே சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டது. வாட்சன் டக் அவுட் ஆனாலும் ரெய்னா, டூபிளசிஸ் மற்றும் தோனி உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. இதன்பின்னர் சென்னை அணியின் ஸ்பின்னர்கள் ஆட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டனர். இம்ரான் தாஹீர் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்த ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். இதனால் 100 ரன்கள் எடுக்க முடியாமல் டெல்லி அணி பரிதாப தோல்வி அடைந்தது. 

நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி தோனியை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருந்தது. பேட்டிங்கில் 22 பந்துகளைச் சந்தித்து 3 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் குவித்தார். இதில் கடைசிப் பந்தில் தனது ஸ்டைலில் சிக்ஸர் அடித்தார். அதேபோல் டெல்லி அணியில் விக்கெட்டுகள் ஒருபுறம் விரைவாக விழுந்துகொண்டிருந்தாலும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் நிலைத்து நின்று விளையாடிக்கொண்டிருந்தார். 12வது ஓவரை ஜடேஜா வீசியபோது நொடிப்பொழுதில் ஸ்டெம்பிங் செய்து ஸ்ரேயாஸை வெளியேற்றினார். இதனால் ஒட்டுமொத்த ஆட்டம் மாறிப்போனது.

வெற்றிக்குப் பின் தோனி பேச வந்ததும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இதனால் ஹர்ஷா போக்லே தோனி... தோனி... என்ற சத்தம் நின்றவுடன் உங்களிடம் கேள்வி கேட்கலாமா? எனக் கேட்க, ``நீங்கள் கேளுங்கள்... நான் பேசத்துவங்கியவுடன் அவர்கள் கேட்கத் துவங்கிவிடுவார்கள்..." எனக் கூறினார். இதன்பின் தோனியிடம் கீப்பிங் பணி குறித்தும் விரைவாக ஸ்டெம்பிங் செய்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``இது டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் இருந்து வந்துள்ளது என்று நான் நினைக்கிறேன். கீப்பிங் பணிக்கு அடிப்படையான விஷயங்களைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அடுத்த லெவலுக்குச் செல்லலாம். கீப்பிங் செய்யும்போது நிறைய தவறுகள் நடக்கும். ஆனால், அடிப்படையான விஷயங்களைச் செய்வது முக்கியம். ஆனால், நான் கீப்பிங்கில் எப்படி வேகமாகச் செயல்படுகிறேன் எனத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இந்தச் செயல்களை (அதிவேக ஸ்டெம்பிங்) பேசுவது அடுத்த லீக் ஆட்டத்தின்போது எனக்கு உதவும் என நினைக்கிறேன். இது என்னுடைய மதிப்பை அதிகரிக்கும். சென்னை அணி நிர்வாகம் அடுத்த வருடம் என்னை ரீடெயின் செய்வார்கள் என நினைக்கிறேன். நான் நேராக அணி ஓனர்களிடம் சென்று என்னை ரீடெயின் செய்வார்களா இல்லையா எனக் கேட்பேன். ஆனால், ஒருபோதும் எனது ரகசியத்தைச் சொல்லமாட்டேன்" என ஜாலியாக பேசிய அவர், சென்னை ரசிகர்கள் குறித்துப் பேசினார். 

``நான் எப்போதும் இதைக் கூறிக்கொண்டேதான் இருக்கிறேன். இது மாதிரியான செல்லப்பெயர் எடுப்பது எப்போதும் ஸ்பெஷல்தான். இது எனக்கு அவர்கள் கொடுத்த மிகப்பெரிய செல்லப்பெயர். இது உண்மையாகவே சிறப்பாக இருக்கிறது. அந்தப் பெயர் சி.எஸ்.கே அணியின் பாடலில் இருக்கும் எனக் கூட நினைத்துப் பார்க்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாடும் என் பெயரைச் சொல்லி அழைக்காமல், `தல' என்றே அழைக்கிறார்கள். சென்னை ரசிகர்கள் எப்போதும் என்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த அணியையும் ஆதரிக்கிறார்கள்" என நெகிழ்ச்சியுடன் பேச ஒட்டுமொத்த மைதானமும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியது.

இதற்கிடையே நேற்றுடன் சென்னை மைதானத்தில் கடைசி லீக் போட்டி முடிந்துவிட்டதால் தோனி உட்பட வீரர்கள் முழுவதும் மைதானத்தில் வலம் வந்தனர். முன்னதாக ஊழியர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.