நந்திக்கடல் / பத்தாண்டுகள்.மீள் பதிவு 04.

தமிழர்களின் 'நண்டுப் பண்பாட்டை' நீக்கி 'புலிப் பண்பாட்டை' உருவகித்த தலைவர் பிரபாகரன்.
உலகின் தலைசிறந்த இராணுவ தத்துவமேதைகள் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் உண்மை என்னவென்றால், இராணுவ உத்திகளைவிட இராணுவ வீரர்களின் உளவியல்தான் போரில் அதிமுக்கியமானது. எவ்வளவு நல்ல திட்டமாக இருந்தாலும் கோழைகளை வைத்துக் கொண்டு ஒரு இராணுவம் இம்மியளவும் நகரமுடியாது.
“Clausewitz’s greatest contribution to the theory of war was in emphasizing psychological factors…he showed that the human spirit is infinitely more important than operational lines and angles.” [1]
ஈழப்போரில் ஒரு பெரிய புதிர் என்னவென்றால் புலிகளால் எவ்வாறு மனபலத்தில் உலகிலேயே நிகரற்ற இதற்குமுன் வரலாற்றில் எங்கும் காணாத படையை உருவாக்க முடிந்தது என்பதுதான். இதைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்துள்ளனவா எனத் தேடினேன். பெரும்பாலான ஆராய்ச்சிகள் புலிகள் “பயங்கரவாதிகள்” என்ற முடிவுக்கு வந்துவிட்டு அதற்கேற்ற உளவியலைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் [2,3]. அதிலிருந்து நாம் கற்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. 

ஆனாலும் பெரும்பாலோனோர் புலிகள்தான் உலகிலேயே மனபலத்திலும் தாக்குதலிலும் நிகரற்றவர்கள் என்று ஒப்புக்கொள்கிறார்கள். புலிகள் ஒரு பலமான விடுதலை இயக்கமாக வளர்வதற்கு என்ன உளவியல் காரணங்கள் என்பது தான் நமது பார்வையில் முக்கியம். நான் தேடிய அளவில் அதுபோன்ற ஆராய்ச்சிகளைக் காணமுடியவில்லை. இக்கட்டுரையின் நோக்கம் அந்தத் தேவையை ஓரளவு பூர்த்தி செய்வதே. இது நான் அறிந்த வரலாற்றுத் தகவல்களையும் உளவியல் தத்துவங்களையும் அடிப்படையாகக் கொண்டே இருக்கும் என்பதால், இது ஒரு முழுமையான ஆய்வு அல்ல. இதை ஒரு ஆரம்பமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதில் தமிழர்களின் பண்பாடு என்ன என்றால், அனைவருக்கும் நினைவுக்கு வருவது நண்டு கதைதான். நண்டுகள் எவ்வாறு ஒன்றை ஒன்று பின்னுக்கு இழுக்கிறதோ, அதுபோல ஓர் ஒற்றுமையற்ற சமூகம்தான் தமிழ்ச்சமூகம். இதை “நண்டுப்பண்பாடு” என்று எடுத்துக் கொள்வோம்.


இவ்வாறு செயல்படும் நண்டுகளை வைத்து ஒரு பெரிய இயக்கத்தைக் கட்டி எழுப்புவதென்றால், அது முடியாத காரியம். இதிலிருந்து தப்பிக்க ஒரேவழி மாற்றுப் பண்பாடுதான். அதை உணர்ந்து பிரபாகரன் அவர்கள் உருவாக்கியதுதான் “புலிப் பண்பாடு”. எதற்கும் உதவாத நண்டுகளை எடுத்து உலகில் அனைவரையும் விஞ்சிய புலிகளாக எப்படி உருவாக்க முடிந்தது?


ஒரு பெரிய கட்டிடம் கட்டுவதற்கு பலமான அடித்தளம் வேண்டும், அதுபோல ஒரு பெரிய இயக்கத்தை கட்டி எழுப்ப, அதற்குத் தேவையான அடித்தளம் என்பது பண்பாடு தான். ஆயுதப் போராட்ட ஆரம்பகாலத்தில் பலவேறு குழுக்கள் இருந்தாலும், முதன் முதலில் பண்பாட்டுத் தேவையை உணர்ந்து, ஓர் அதியுச்ச ஒழுக்கமான பண்பாட்டை பிரபாகரன் அவர்கள் உருவாக்கினார்கள்.


ஒரு புதிய பண்பாட்டை உருவாக்குவதற்கு ஒரு “தனிப்பட்ட சமூகம்” முக்கியமானது. அச்சமூகத்திற்கு யார் உறுப்பினர், யார் இல்லை என்பதை தெளிவாக வரையறுக்கும் எல்லை இருக்கவேண்டும். சமூகத்தில் ஒரு மனிதனின் செயல்பாட்டை பெரும்பங்கு தீர்மானிப்பது, அச்சமூகத்தில் தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதுதான். தன்னை சுற்றி இருப்பவர்கள் நண்டுகளாக இருந்தால், ஒருவர் நண்டாக மாறுவார். சுற்றி இருப்பவர்கள் புலிகளாக இருந்தால், புலியாக மாறுவார். இதுதான் அடிப்படை உளவியல். ஒரு தனிச் சமூகத்தை உருவாக்கும்பொழுது எளிதாக புதிய விதிகளையும் நடைமுறைகளையும் உருவாக்கி அதிக ஒத்துழைப்பான சமூகத்தை உருவாக்கிவிடலாம். 


புலிகள் ஒரு போர் புரியும் கொரில்லா இயக்கம் என்பதால், காடுகளில் ஒரு சமூகமாக தனித்து இயங்குவது அவர்களுக்கு இயற்கையிலே அமைந்தது. பிரபாகரன் அவர்கள் அதீத ஒத்துழைப்பான இயக்கம் தேவை என்பதை முதலில் உணர்ந்து, அதற்கேற்ற விதிகளை உருவாக்கினார். இதுதான் தான் அவர்களின் வெற்றிக்கு அடிப்படை காரணம் என்கிறார் ஆய்வாளர் பரணி கிருஷ்ணரஜனி[5]. மற்ற போராட்ட இயக்கங்கள் இதில் கவனம் செலுத்தாதனால் அவர்களால் பெரிதாக வளர முடியவில்லை.


பிரபாகரன் அவர்கள் மாபெரும் படைத் தலைவர், இராணுவ உத்திகளில் சிகரம் தொட்டவர், இரண்டு நாட்டு இராணுவங்களை பலமுறை தன்னந்தனியாக எதிர்த்து தோற்கடித்தவர் என்பது உலகறிந்தது. ஆனால் அவரின் இன்னொரு மாபெரும் சாதனை கண்டு கொள்ளப்படவில்லை. அதுதான் அவரின் அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படையாக இருந்த புலிப் பண்பாடு. .


பண்பாடு என்பது இராணுவ அமைப்புகளுக்கும் மட்டுமல்ல, மனிதர்களை உள்ளடக்கிய எந்த ஒரு சமூக அமைப்பிற்கும் முக்கியமானது. ஒரு அமைப்பின் பண்பாடுதான் அந்த அமைப்பின் வெற்றிக்கு அடித்தளமிடுவது. எந்த ஓர் அமைப்பிலும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர நினைப்பவர்கள் முதலில் மாற்றுவது பண்பாட்டைத்தான். அவ்வாறான பண்பாடு மாற்றம் மூலமே மக்களிடமுள்ள முழு ஆற்றலை வெளிக்கொணர முடியும்.

இறுதிப் போருக்குப்பின் நடந்த ஈழம் சார்ந்த போராட்டங்கள் விரல்விட்டு என்னும் அளவிலேயே இருக்கிறது. “ஒரு அடியிலேயே எதிரியை மட்டுமல்ல உலகத்தையே கிடுகிடுக்க வைத்த ஒரு இனத்தின் போராட்டம் எவ்வளவு வேகமாக தன்னை உள்ளிழுத்துக் கொண்டுள்ளது” என்று ஆய்வாளர் பரணி கிருஷ்ணராஜனி குறிப்பிட்டிருந்தார் [6]. 

புலிகளால் கிடுகிடுவென வளர்ந்து மாபெரும் சாதனைகளை நிகழ்த்த முடிந்தது, ஆனால் அதே தமிழினத்தால் புலிகள் சாதித்ததில் ஒரு சதம் கூட பத்தாண்டுகளில் செய்யமுடியவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்றால் புலிகளுடன் 2009-இல் புலிப்பண்பாடும் அழிந்தது. இன்று இருப்பது நண்டுப்பண்பாடு மட்டுமே. இதற்கு எந்த ஒரு தனிமனிதனும் காரணம் அல்ல. பிழை பண்பாட்டில்தான் உள்ளது.


இன்றைய தமிழ்ச்சமூகம் ஓர் ஒத்துழைப்பற்ற சுயநல நண்டுச் சமூகம். இதை வைத்துக்கொண்டு ஓர் உருப்படியான உள்ளூர் ஆட்சி செய்யும் அமைப்பைக்கூட உருவாக்கமுடியாது. இதிலிருந்து தப்பிப்பிழைக்க ஒரே வழிதான் இருக்கிறது. அதிலிருந்து விலகி ஓர் அதி ஒத்துழைப்பான புலிப்பண்பாட்டு சமூகத்தை உருவாக்கி, சிறிது சிறிதாக நண்டுகளைப் புலிகளாக மாற்றி முழுச் சமூகத்தையும் புலிப்பண்பாட்டில் கொண்டு வருவதே வழி. அவ்வாறுதான் புலிகள் சிறு குழுவாக இருந்து மாபெரும் இயக்கமாக வளர்ந்தார்கள். நபிகள் ஆரம்பித்த சிறிய குழு உலகலாவப் பரவி மாபெரும் நாகரீகமாக மாறியதும் இவ்வாறே [15]. கிறித்தவமும் அவ்வாறே முழு ரோமப் பேரரசை விழுங்கியது [16].

 அவை அதி ஒத்துழைப்பான சமூகங்களாக இருந்ததனால்தான் இது சாத்தியமானது. ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம் என்னவென்றால், புலிகள் உருவாக்கிய பண்பாடு மற்ற அனைத்தையும் விழுங்கும் மதசார்பற்ற அதியுயர் ஒத்துழைப்பு பண்பாடு, இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்குத் தேவையான பண்பாடு (மதசார்பற்ற என்றால் கடவுள் மறுப்பு அல்ல, அனைத்து நம்பிக்கைகளையும் உள்ளடக்கியது ). 


புலிகள் இராணுவ உத்திகளில் உலகில் முன்னோடிகளாக இருந்தார்கள். புலிப்பண்பாட்டை உள்வாங்கிய தமிழ்ச்சமூகம் உலகின் அனைத்து துறைகளிலும் முன்னோடியாக இருக்கும். மொத்தத்தில் அனைத்திலும் புலியாக இருப்பார்கள். நோபல் பரிசுகளில் யூதர்களை விஞ்சினாலும் ஆச்சரியமில்லை. அனைத்திற்கும் தேவையானது ஒழுக்கம், அதில் புலிப்பண்பாட்டை யாரும் விஞ்சமுடியாது.


புலிகள் புலிப்பண்பாட்டை ஒரு இராணுவ அமைப்பிற்கு உருவாக்கினார்கள். ஆனால் அதை பொதுச் சமூகத்திற்கு ஏற்ப மாற்றுவது என்பது கடினமான வேலை இல்லை. எதிரிகளை கிடுகிடுக்க வைத்த புலிப்பண்பாட்டால் ஒன்றுக்கும் உதவாத நண்டுபண்பாட்டை ஒழித்து மக்களை புலிப் பண்பாட்டிற்குள் இழுப்பது என்பது ஒரு கடினமான காரியமே இல்லை.

 அதுவும் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் தொகையினர் புலிகளை தெய்வங்களாக பார்க்கும்பொழுது, இது செய்து முடிக்கக்கூடிய காரியமே. மக்கள் நண்டுப்பண்பாட்டில் வேறு வழி இல்லாமல்தான் இருக்கிறார்கள். ஓர் அதி ஒத்துழைப்பான மாற்று பண்பாடு இருந்தால், அவர்கள் தாமாக முன்வந்து இணைவார்கள். 


அவ்வாறுதான் புலிப்பண்பாடு முழு சமூகத்தையும் விழுங்கவேண்டும். அவ்வாறுதான் ஒத்துழைப்பைப் பெருக்கும் மதங்களும் வளர்ந்தன. பரிணாமம் என்பது போட்டி மட்டுமல்ல, ஒத்துழைப்பும் சேர்ந்ததுதான் [19]. எந்த பண்பாடு நன்றாக ஒத்துழைப்பைப் பெருக்கி பலம் பெறுகிறதோ, அவை பரிணாமப் போட்டியில் வெல்கின்றன.

-தொடரும்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.