சி.எஸ்.கேவுக்கு சென்னையில்தான் குவாலிஃபையர் மச் - உறுதி செய்த பஞ்சாப் மட்ச்!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெறவே எண்ணியதாகவும், ஆனால் சூழல் தங்களுக்கு சாதகமாக அமையவில்லை என்றும் சி.எஸ்.கே கேப்டன் தோனி கூறியிருக்கிறார். 

தோனி
Photo: IPLT20.com

மொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சி.எஸ்.கே. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டூப்ளசிஸ் 96 ரன்கள் குவித்தார். இதையடுத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் அந்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்குமே இது கடைசி லீக் போட்டியாகும்.
டூப்ளசிஸ்
Photo: IPLT20.com
இந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் டெல்லியை முந்தி சென்னை முதலிடத்திலேயே நீடிக்கிறது. ஒருவேளை கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இன்று வெற்றிபெற்றால், சி.எஸ்.கே இரண்டாவது  இடத்துக்கு வரும். இதன்மூலம், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் குவாலிஃபையர் போட்டியில் விளையாடுவதை சி.எஸ்.கே உறுதி செய்திருக்கிறது. இன்றைய போட்டியில் மும்பை வென்றால், அந்த அணியையும் மாறாக தோல்வியடைந்தால் டெல்லி அணியையும்  சி.எஸ்.கே முதல் குவாலிஃபையர் போட்டியில் எதிர்க்கொள்ளும். 
போட்டிக்குப் பின்னர் பேசிய சி.எஸ்.கே கேப்டன் தோனி, ``வெற்றிக்கான முழு கிரெடிட்டையும் அவர்களுக்குக் (கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி) கொடுக்க வேண்டும். கடினமான ஸ்கோரையே வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தோம். மொத்தமாக இது சிறப்பான பேட்டிங் என்றே சொல்லலாம். உங்களால் வெற்றிபெற முடியவில்லை என்றால், எதிரணி வெற்றி இலக்கை எட்ட முடிந்தவரை அதிக ஓவர்கள் எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார். 
தோனி
Photo: IPLT20.com
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் நீடித்திருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த தோனி, ``நிச்சயம் அதை மனதில் வைத்திருந்தோம். நாங்கள் இன்றைய போட்டியில் வெல்லவே நினைத்தோம். ஆனால், எதிரணி வெற்றிபெறும் சூழலில் உங்கள் முடிவை நீங்கள் உடனடியாக மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். முதல் 7 ஓவர்களில் எங்கள் கையில் போட்டி இல்லை. அதன்பின்னர், எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினர். எங்கள் பேட்டிங்கின்போது கடைசி 8 முதல் 9 ஓவர்கள் அவர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள்'' என்று தெரிவித்தார். 
 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.