பம்பாய்' பட பாணியில் சென்னையில் ஒரு சம்பவம்!!

சென்னை பாலவாக்கம் பகுதியில் உள்ள ஜவுளிக்கடைக்குள் சென்ற பெண், கடையிலிருந்து வழக்கறிஞர் சாலமன் என்பவரை நைசாகப் பேசி வெளியில் அழைத்துவந்தார். கண் இமைக்கும் நேரத்தில் காருக்குள் இருந்த இரண்டு பேர் சாலமனைக் கடத்திச் சென்றனர். இந்தக் கடத்தல் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டது ஒரு குடும்பம் என்பது விசாரணையில் தெரியவந்தது. `பம்பாய்' படத்தைப்போல் இந்தக் காதலுக்கு மதமே காரணமாக உள்ளது.

சென்னையை அடுத்த பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் ஜவுளிக்கடை உள்ளது. இந்தக்கடையின் முன், சிவப்பு நிற சொகுசு கார் நின்றது. காரிலிருந்து இறங்கிய 45 வயது மதிக்கத்தக்க பெண், கடைக்குள் சென்றார். அவரை வாடிக்கையாளர் எனக் கருதிய கடை ஊழியர்கள் அன்போடு வரவேற்றனர். அந்தப் பெண் இங்கு சாலமன் எங்கே என்று விசாரித்தார். சாலமனின் அருகே சென்ற பெண், என் மகள் பாத்திமா எங்கு இருக்கிறாள், அவளை என்ன செய்தாய், நீ அவளுடன் இனிமேல் பழகாதே' என்று சரமாரியாகக் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சாலமன், `அதைச் சொல்ல நீங்கள் யார்' என்று கேள்விகேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் பேசியபடியே கடையின் வெளியே வந்தனர். அப்போது கடையின் முன் தயாராக இருந்த இரண்டு பேர் சாலமனை வலுகட்டாயமாக காருக்குள் ஏற்றினர். இதைப்பார்த்த கடையின் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கடையின் உரிமையாளர் முத்துகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். முத்துகிருஷ்ணன், சாலமனின் உறவினர். இதனால் அவர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து நீலாங்கரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டர் ரெஜிஸ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் தமிழன்பன், தலைமைக் காவலர் பிரதீப் மற்றும் காவலர் இளவரசன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரித்தனர். அப்போது அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது காரின் பதிவு எண் கேமராவில் தெளிவாகத் தெரிந்தது. அதை வைத்து காரின் உரிமையாளரை போலீஸார் முதலில் கண்டறிந்தனர். அதன்பிறகு கார் எங்கு செல்கிறது என்ற விவரத்தை சாலமனின் செல்போன் மூலம் போலீஸார் கண்டறிந்தனர். அண்ணாநகர் பகுதியில் கார் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அண்ணாநகர் போலீஸார் உதவியுடன் அந்தக் காரை மடக்கினர். காருக்குள் ஒரு பெண் உட்பட 5 பேர் இருந்தனர். அவர்களிடமிருந்து சாலமனை மீட்டு நீலாங்கரை காவல் நிலையத்துக்கு 5 பேரை போலீஸார் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.  

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சாலமன், சட்டம் படித்துவிட்டு உறவினர் ஜவுளிக்கடையில் வேலை பார்த்துவருகிறார். சின்ன நீலாங்கரை குப்பத்தைச் சேர்ந்த மஞ்சுளாவின் மகள் பாத்திமாவை சாலமன் காதலித்துள்ளார். இதற்கு மஞ்சுளா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காதலை கைவிடும்படி சாலமனிடம் பலதடவை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பாத்திமா மாயமாகிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இதையடுத்து பாத்திமாவை சாலமன் அழைத்துச் சென்ற தகவல் தெரிந்ததும் மஞ்சுளாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.  

இதனால் சாலமன் வேலை பார்க்கும் கடைக்கு மஞ்சுளா வந்து அவரிடம் மகள் குறித்து விசாரித்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சாலமனையும் பாத்திமாவையும் கொலை செய்யும் நோக்கத்தில் காரில் கடத்தியுள்ளனர். சாலமனின் போன் மூலம் பாத்திமா எங்கு இருக்கிறாள் என்பதை அறிய காரில் சென்றபோது முயன்றுள்ளனர். அப்போது பேசிய பாத்திமா, தான் குடியிருக்கும் இருப்பிடத்தைக் கூறியுள்ளார். அவரைத் தேடிச் சென்ற சமயத்தில் கடத்தல் கும்பலை மடக்கிப்பிடித்துவிட்டோம். அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து சாலமனைக் கடத்திய குற்றத்துக்காக முகமது ஆரிப் (29), விக்னேஷ் (22), கதிர்வேல் (19), பரத் (20), மஞ்சுளா (45) ஆகிய 5 பேரை கைது செய்துள்ளோம்'' என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``வழக்கறிஞர் சாலமன், மதியம் 12.15 மணியளவில் காரில் கடத்தப்பட்டுள்ளார். எங்களுக்கு தகவல் கிடைத்ததும் செல்போன் சிக்னல் மூலம் கார் இருக்கும் இடத்தைக் கண்டறிந்தோம். மூன்று மணி நேரத்துக்குள் சாலமனை மீட்டுள்ளோம். 

முகமது ஆரிப், கறிக்கடை வைத்துள்ளார். மஞ்சுளாவும் முகமது ஆரிப்பும் கணவன்- மனைவி போல வாழ்ந்துவருகின்றனர். மஞ்சுளாவின் முதல் கணவரின் மகளான பாத்திமாவை சாலமன் காதலித்துள்ளார். அவர்  ஏற்கெனவே திருமணமானவர். இதனால் ஏற்பட்ட தகராறில்தான் சாலமனையும் பாத்திமாவையும் கொலை செய்ய முகமது ஆரிப், மஞ்சுளா மற்றும் அவரின் மகன் விக்னேஷ், உறவினர் பரத், நண்பர் கதிர்வேல் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். அவர்களின் கொலை செய்யும் சதித்திட்டத்தை முறியடித்து இரண்டு உயிர்களை காப்பாற்றியுள்ளோம். பாத்திமாவிடம் விசாரணை நடத்திவருகிறோம்'' என்றார்.

``பாத்திமா, வீட்டிலிருந்து வெளியில் வந்ததும் அவரை அழகு நிலையத்தில் வேலைக்குச் சேர்த்துள்ளார் சாலமன். அங்கேயே அவர் தங்கியிருக்கிறார். `பம்பாய்' படத்தில் காதலுக்கு மதம் பிரச்னையாக இருக்கும். அதைப்போலதான் நீலாங்கரையில் காதல் விவகாரத்தில் நடந்த கடத்தல் சம்பவத்துக்கும் மதம்தான் பிரச்னையாக இருந்துள்ளது'' என்கின்றனர் போலீஸார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.