சினிமா பாணியில் ரவுடியைப் பிடித்த பெண் இன்ஸ்பெக்டர்!
சினிமா பாணியில் ரவுடியைப் பிடித்த பெண் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள தானா பகுதியில் நேற்று மதியம் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வந்த கார் ஒன்றை கான்ஸ்டபிள் ஒருவர் சோதனையிடச் சென்றுள்ளார். ஆனால், காரின் உள்ளே இருந்த நபர் ஒருவர் கான்ஸ்டபிள் மீது தாக்குதல் நடத்துகிறார். பெண் இன்ஸ்பெக்டர் அருணா ராய் தலைமையில் அங்கிருந்த மொத்த போலீஸ் டீமும் உஷாராகிறது. தாக்குதல் நடத்திய நபர் பல நாள்களாகத் தேடப்பட்டு வரும் ரவுடி பாலியா எனத் தெரியவருகிறது. கான்ஸ்டபிளை தாக்கிவிட்டு ரவுடி பாலியா காரில் இருந்து தப்பித்து ஓடுகிறார். இதைக் கண்ட இன்ஸ்பெக்டர் அருணா ராய் டீம் களத்தில் இறங்குகிறது.

கொலை, கொள்ளை வழக்குகளில் அலிகாரில் அறியப்படும் ரவுடியான பாலியா பல நாள்களாக போலீஸில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தவன். இந்த முறை கண்ணில் பட்டுள்ளதால் அவனை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் எனக் காவலர்களுடன் இன்ஸ்பெக்டர் அருணா ராய் மும்முரம் காட்டுகிறார். அலிகாரின் கடைத்தெருக்களில் குறுக்குமறுக்கமாக ஓடி போலீஸுக்கு தண்ணி காட்டுகிறான் ரவுடி பாலியா. ரவுடி இப்படி போக்குக்காட்ட தனது ரிவால்வர் துப்பாக்கியைக் கையில் எடுத்துக்கொண்டு காவலர்கள் துணையுடன் துரத்துகிறார். ஒட்டுமொத்த அலிகார் நகரமும் பதற்றம் கொள்கிறது.

மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் என தெருத் தெருவாக ஓடிய ரவுடிக்கு அருணா ராய் எச்சரிக்கை கொடுக்கிறார். முதலில் ஜீப்பில் தான் ரவுடியைத் துரத்தியுள்ளனர். இடையில் குறுக்கு தெருக்களில் ஜீப் சிக்கிக் கொள்ள அதன்பின்புதான் அருணா ராய் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு ரவுடியைத் துரத்தியுள்ளார். ரவுடி தான் வைத்திருந்த துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டிய பின்பே அருணா ராயும் துப்பாக்கியை எடுத்து விரட்டியுள்ளார். இருந்தும் அவன் கேட்காமல் ஓட ஒருவழியாக 40 நிமிட போராட்டத்துக்குப் பின் ரவுடியை அருணா ராய் பிடிக்கிறார். இடையில் சினிமா பாணியில் ஆங்காங்கே விபத்து, மிரட்டல், துப்பாக்கி என சேஸிங் நடைபெற்றுள்ளது.
மதிய நேரத்தில் பொதுமக்கள் சூழ்ந்திருந்த பகுதியில் ரவுடியை துணிச்சலாக எதிர்கொண்டதுடன், பொதுமக்கள், பொதுச் சொத்துகளுக்கு எந்தவித சேதமும் இல்லாமல், எந்தவித பயமும் இல்லாமல் பெண் இன்ஸ்பெக்டர் அருணா ராய் துணிச்சலாக செயல்பட்டுள்ளார். இதனால் இந்த சேஸிங் காட்சிகளை நேரில் பார்த்த அலிகார் மக்கள் இன்ஸ்பெக்டர் அருணா ராயை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

`லேடி சிங்கம்'
இப்படி தைரியமாக ரவுடியை கையும் களவுமாகப் பிடித்த இன்ஸ்பெக்டர் அருணாவை அப்பகுதி மக்கள் `லேடி சிங்கம்' என அழைக்கத் தொடங்கியுள்ளனர். வலைதளங்களில் இப்படியே அவரை தற்போது அழைத்துப் பாராட்டி வருகின்றனர். அருணா இந்த சம்பவத்துக்குப் பிறகு பிரபலம் அல்ல. இதற்கு முன்னரே தான் செல்லும் இடங்களில் துணிச்சலான நடவடிக்கையின் மூலம் உத்தரப்பிரதேசம் முழுவதும் பிரபலம்தான்.

தான் பணிபுரிந்த இடத்தில் உயர் அதிகாரிகளால் தனக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்பட்டபோது அதை வெளிப்படையாகச் சொல்லி நீதிமன்றம் வரை சென்றவர்தான் அருணா. அதேபோல் பெண் குழந்தைகளுக்கான தற்காப்பு பயிற்சி அளிப்பது, குற்றவாளிகளை விரைந்து பிடிப்பது போன்ற அதிரடி நடவடிக்கைள் மூலமாகவும் உத்தரப்பிரதேசத்தில் பலரது பாராட்டையும் பெற்ற போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார் இந்த `லேடி சிங்கம்'.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை