இனவாதம் ஒழியாமல் ஒருநாளும் விடியாது!!

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சந்தை, சத்தத்தில் களைகட்டியது. அலுவலக வேலைக்குச் செல்பவர்கள் எல்லாம் அன்றுதானே சந்தைக்கு வரும் நாள்.
சத்தம் அல்லோலகல்லோலமாய் இருக்க விற்பனை அமளிப்பட்டது. நேரம், ஒரு மணி கடந்துவிட, அமைதியான சந்தையில் அவரவர் ஏதேதோ விவகாரங்கள் பேசிக்கொண்டிருந்தனர். 
மீன் விற்கும் பகுதியில் அருகருகே அமர்ந்திருந்த, பூமணியும் பார்வதியும் தங்களுக்குள் பேசிக்கொண்டது இங்கே பிரசுரமாகிறது. 

பூமணி :  பார்வதி, இண்டைக்கு காலமை பேப்பரும் படிக்கேல்ல, நேரம் இல்லாமல் போட்டுது, நாட்டு நடப்பு என்ன எண்டும் தெரியேல்ல.

பார்வதி: ஓ.....நீதான் நாட்டு நடப்பை பேப்பரில பாக்கிறாய், இப்ப எல்லாம் போனிலதானே பாக்குதுகள்.

பூமணி : அது சரி, எதிலையெண்டாலும் பாத்துக்கொண்டு இருக்கவேணும், ஒரே இரவில் எங்கட நாட்டில என்ன எண்டாலும் நடக்கும்.

பார்வதி : அதுசரி, இரவோட இரவா பிரதமரை மாத்தின நாடு எங்கட நாடுதானே, அந்தப் பெருமை வேற யாருக்கும் கிடையாது.

பூமணி : அது மட்டுமே, சம காலத்திலயே ரெண்டு பிரதமர் ஆட்சிசெய்த நாடும் எல்லே....

பார்வதி : ஓமோம், அதை இல்லையெண்டு சொல்ல ஏலாது. எப்ப பாத்தாலும் அவதியிலயே காலம் கழிக்கிற நாடும் எங்கட நாடுதான்.

பூமணி : இப்ப நிலவரம் என்ன எண்டு பாப்பம், உந்த இஸ்லாமிய பயங்கரவாதம் ஒழிச்சுது எண்டுறாங்கள், அப்ப இனி குண்டுவெடிப்பு பிரச்சினை இருக்காது போல.

பார்வதி : யாரை நம்புறது. என்னத்தை சொல்லுறது, பாம்புக்கு பாலை வாத்து, இப்ப அது கொத்துது எண்டால் என்னத்தை செய்யமுடியும்.  எப்ப செய்தியில பாத்தாலும் அங்க அது எடுத்தது, இஞ்ச இது எடுத்தது எண்டுதானே போடுறாங்கள், அப்பிடி வாளும், துவக்கும் என்ன விதைச்சே கிடக்கிது.

பூமணி : உதெல்லாம் உவங்கட  திட்டமிட்ட வேலையாத்தான் இருக்கும்.  உதுக்குப் பின்னால ஆர், எவர் எண்டு தெரியேல்ல. ஆனா, ஏதோ கள்ளத்திட்டத்தில செய்யிறாங்கள் எண்டது மட்டும் தெரியுது.

பார்வதி : அது சரி, நல்லாட்சி, நல்லாட்சி எண்டு சொல்லிக்கொண்டு தமிழரை ஆக அதிகமா துன்புறுத்தமுடியேல்ல, எண்ட குறையை இப்ப தீர்த்துப் போட்டாங்கள்,

பூமணி : இனியும் தீர்க்கப்போறாங்கள்.

பார்வதி : ஓமோம், உதுகூட, மகிந்தவின்ர மாஸ்ர்ர் பிளானில ஒண்டு எண்டும் சனம் கதைக்கிது.

பூமணி :
இருக்கலாம், இருக்கலாம், கோத்தாவை ஜனாதிபதியாக அவங்களே செய்த கூட்டுச்சதியாகவும் இருக்கலாம். நாட்டைப் பதற்றத்தில வைச்சிருந்தா முடிவு தங்களுக்கு சாதகமா இருக்கும் எண்டு மகிந்தாஸ் கணக்குப் போட்டிருப்பினம்.

பார்வதி : உதுக்குப் பின்னுக்கு அமெரிக்காவும் இருக்கிது எண்டெல்லே கதைக்கினம்,

பூமணி : இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்கிறம் எண்டு சொல்லி, கொஞ்சம் நஞ்சம் இருந்த எங்கட நிம்மதியை பலி எடுத்துப்போட்டுது அரசாங்கம்.

பார்வதி : சும்மா இல்ல, திட்டம் போட்டு.....

பூமணி அதுசரி, கொஞ்ச நாளா, எங்கட உறவுகளை நினைக்கவும் விளக்கு கொழுத்தவும், துக்க தினத்தை அனுஷ்டிக்கவும் எண்டு அனுமதி தந்தவையள், திடீரெண்டு, வீடு வீடாக சோதனை எண்டும், படங்கள் வைச்சிருந்தா கைது எண்டும் செய்யிற ஆர்ப்பாட்டம் கொஞ்சமே.

பார்வதி : அதொண்டும் இல்லை, எங்கட பகுதியளுக்க இராணுவத்தை நிலைப்படுத்தவும் தெருவுக்குத் தெரு சோதனைச் சாவடி வைக்கவும் இது சாட்டாப்போச்சு.

பூமணி : எத்தனையோ  வழியில எங்கட பிள்ளையள நாசம் செய்துபோட்டு இப்ப நேரடியாகவே கைது செய்ய ஆரம்பிச்சிட்டினம்.

பார்வதி : மகிந்தவின்ர திட்டமோ, மைத்திரியின்ர திட்டமோ, அமெரிக்காவோட சேந்து கோத்தாபோட்ட திட்டமோ, பலியாகினதும் பலியாகப் போறதும்  எங்கட தமிழ்ச்சனம்தானே,

பூமணி : இனி இந்த நாட்டில வாழுறது எண்டறது சரியான கஸ்ரம்தான், அதுவும் இளம் பெடிபெட்டையை வைச்சிருக்கிற நாங்கள் நெஞ்சில நெருப்பைக் கட்டினபடிதான் வாழவேணும்.

பார்வதி : அதுசரி, உடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம்
கட்டைதான்.

பூமணி : சரி சரி....வெளிக்கிடு........எல்லாரும் போனாச்சு, நீயும் நானும்தான் இருக்கிறம்.

பார்வதி : கதைச்சுக்கொண்டு இருந்ததில நேரம்போனது தெரியேல்ல, கொஞ்சம் மிச்ச மீன் கிடக்கிது, அதில போறவழியில செண்பகா வீட்டில குடுத்திட்டுப் போவம், பாவம், மனுசனுக்கு கால் இல்லை, அவளுக்கு ஒரு கை இல்லை, எங்களுக்காக போராடிப்போட்டு இப்ப வாழுறதுக்கு கஸ்ரப்படுகுதுகள்.

பூமணி : எல்லைச்சாமியா நிண்டதுகள், இப்ப வாழுறதுக்கு ஆதாரம் இல்லாமல் தவிக்கிதுகள். இதுக்கெல்லாம் எப்பதான் விடிவு வரப்போகுதோ?

பார்வதி : வரும் வரும்,   ஏதோ ஒரு விடிவு வரவேணும், சரி வா .....போவம்.

பூமணி . இனவாதம் ஒழியாமல் ஒருநாளும் எங்களுக்கு விடியப்போறதில்லை.

கண்கள் கலங்கியபடி இருவரும் நடக்கின்றனர்.

தமிழரசி .
ஆசிரியர்பீடம்
தமிழருள் இணையத்தளம்

No comments

Powered by Blogger.