கொழும்பில் குண்டு தாக்குதல் நடைபெறப் போவதாக தகவல்!

நாளைய தினம் கொழும்பின் வெள்ளவத்தை, நாவலை, பஞ்சிக்காவத்தை, கோட்டை ஆகிய இடங்களில் குண்டுத் தாக்குதல் நடைபெற போவதாக உளவுத் தகவல் கிடைத்துள்ளது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கொழும்பு மாவட்டம் பரபரப்பாகவும், பதற்றமாகவும் இருப்பதுடன், தமிழ், சிங்கள, முஸ்லிம் பெற்றோர்கள் கொதிநிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், அனைத்து தரப்பினரும், நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். அவிசாவளை தமிழ் பாடசாலையில் அபாயா அணிந்த ஆசிரியைகளை சேலை அணிந்து வருமாறு பெற்றோர் வலியுறுத்தும் காணொளியை வைத்து கொண்டு எவரும் வாத பிரதிவாதங்கள் செய்ய வேண்டாம் என பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும், முகத்தை மூடும் புர்கா தடை செய்யப்பட்டுள்ளதே தவிர, அபாயா தடை செய்யப்படவில்லை என்பதை நான் தெளிவாகக் கூறியுள்ளேன்.
அபாயாவை அணிய வேண்டாம் எனக்கூற இதுவரை எந்த சட்ட அடிப்படையும் இல்லை எனவும் நான் கூறியுள்ளேன். அதேவேளை, கொழும்பில் பல சிங்கள பாடசாலைகளில் அபாயா அணிந்து வரவும் தடை இருக்கின்றது. அது பற்றி எவரும் கதைப்பதில்லை.
அஸாத் ஸாலியும் இவை பற்றி வாயையும், கண்ணனையும் மூடிக்கொண்டு இருக்கின்றார். ஆக, அவிசாவளை தமிழ் பாடசாலையின் பெற்றோர் உணர்ச்சிவசப்பட்டு பேசியது தான் இங்கே ஒரே பிரச்சினையாக எல்லோருக்கும் இருக்கின்றது.
இந்த பாடசாலையின் அபாயா அணிந்த ஆசிரியைகளை சேலை அணிந்து வருமாறு பெற்றோர் வலியுறுத்தும் காணொளியை வைத்து கொண்டு வாதப் பிரதிவாதங்கள் செய்ய வேண்டாம். இத்தகைய வாதப் பிரதி வாதங்கள், சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் நாடு முழுக்க இந்த நிமிடத்தில் நடைபெறுகின்றன.
சிங்கள சமூக ஊடகங்களில் பிரமாண்டமான இஸ்லாம் - முஸ்லிம் விரோத சிந்தனை கொளுந்து விட்டு எரிகின்றது. அங்கே மிகவும் மோசமாக கழுவி ஊற்றி கொண்டு இருக்கிறார்கள். இவை நாடாளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் கூட எதிரொலிக்கின்றன.
இவற்றை எம்மை போன்றவர்கள்தான் எதிர்கொண்டு அவ்வப்போது அமைதிப்படுத்தி கொண்டு இருக்கிறோம். இன்று நாடு முழுக்க, தமது பிள்ளைகளின் உயிர் பாதுகாப்பு பற்றி பெற்றோர் பதற்றமும், கோபமும் அடைந்து இருப்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏப்ரல் 21ஆம் திகதி ஐ.எஸ்.ஐ.எஸ். குண்டு வெடிப்பு நடைபெற்று நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதையும், காயமடைந்ததையும் கணக்கில் எடுக்காமல் இப்படியான சம்பவங்கள் நடக்கவே இல்லை என்பது போன்று போலித்தனமான பாசாங்கு செய்யக்கூடாது.
ஏப்ரல் 21ஆம் திகதியன்று வெடித்த 8 குண்டுகளில், 6 குண்டுகள் வெடித்து அதிகம் பாதிக்கப்பட்டது எனது கொழும்பு மாவட்டம் ஆகும். இந்தப் பாடசாலை அமைந்துள்ள அவிசாவளை கொழும்பு மாவட்டம் ஆகும்.
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அவிசாவளையை சார்ந்த சிலரும் கொல்லபட்டுள்ளனர். நாளைய தினம் கொழும்பின் வெள்ளவத்தை, நாவலை, பஞ்சிக்காவத்தை, கோட்டை ஆகிய இடங்களில் குண்டுத் தாக்குதல் நடைபெறப் போவதாகவும் உளவுத் தகவல் கிடைத்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு மாவட்டம் பரபரப்பாகவும், பதற்றமாகவும் இருக்கின்றது. தமிழ், சிங்கள, முஸ்லிம் பெற்றோர்கள் கொதிநிலையில் இருக்கின்றார்கள். இந்தநிலையில், அனைத்துத் தரப்பினரும், நிதானமாக நடந்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக இந்த ஆசிரியைகள், இந்த நிலைமையை மேலும் மோசமாக்கக் கூடாது. என்னுடன் ஒத்துழைக்க வேண்டும். எங்கோ இருந்துகொண்டு எவரும் ஊடகங்களின் மூலம் தீயைப்பற்ற வைக்கக்கூடாது.
இதுவே ஒரு சிங்களப் பாடசாலையாக இருந்தால், நிலைமை பாரதூரமான கட்டத்தை அடைந்துஇருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவிசாவளை பாடசாலை பெற்றோர், அபாயா அணிந்த ஆசிரியைகளுடன் வாதப்பிரதிவாதங்களை செய்த போது அங்கு வந்த அவிசாவளை பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி விகும் வீரசேகர, பெண் பொலிஸ் அதிகாரியை அழைத்து வந்து, அபாயா அணிந்த ஆசிரியர்களை உடற்பரிசோதனைக்கு உட்படுத்தி, தீர்வு காண முயன்றுள்ளார்.
அதை அந்த ஆசிரியைகள் ஏற்றுக்கொள்ள மறுத்து, மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலியைப் பாரக்கப் போயுள்ளனர். இதுபற்றி விகும் வீரசேகரவும், வலயக் கல்விப் பணிப்பாளர் வீரசூரியவும் எனக்கு தெரிவித்துள்ளனர்.
இவை அனைத்தும் முழுமையாக காணொளியில் இடம்பெறுகின்றதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அந்தப் பிரதேசத்தின் சட்டம், ஒழுங்குக்கும், கல்விக்கும் பொறுப்பு கூறும் இரண்டு அரச அதிகாரிகள், ஒரு அமைச்சர் மற்றும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய எனக்கு இவற்றைத் தெரிவித்துள்ளனர்.
உடற்பரிசோதனைக்கு ஆசிரியைகள் இடமளிக்கவில்லை என்ற விடயம், இந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதையும் பொலிஸ் பொறுப்பதிகாரி விகும் வீரசேகர எனக்குக் கூறியுள்ளார். அதை ஒரு கௌரவப் பிரச்சினையாக ஆசிரியைகள் நினைத்துவிட்டதாக விகும் வீரசேகர என்னிடம் கூறுகின்றார்.
உண்மையில் நாட்டு நிலைமையை மனதில் கொண்டு நாம் செயற்பட வேண்டும். நாடாளுமன்ற நுழைவாயிலில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள்என்ற பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒவ்வொரு முறை உள்நுழையும் போதும் முழுமையான உடற்பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றோம்.
எமது வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொருதரம் உள்நுழையும்போதும் முழுமையாகப் பரிசோதிக்கப்படுகின்றன. எனவே, இது கௌரவப்பிரச்சினை அல்ல. தேசிய பாதுகாப்புப் பிரச்சினை.
நான் நாளை அந்தப் பாடசாலைக்குச் சென்று சகல தரப்பினருடனும் கலந்து பேசி இந்தப்பிரச்சினையை தீர்த்து வைப்பேன். இது எனது மாவட்டம். என் மீது இங்கே வாழும் அனைத்து இன மக்களுக்கும் நம்பிக்கை இருக்கின்றது.
எனவே, என் பணியை ஆற்ற எனக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். அரைகுறையாக விடயங்களை அறிந்துகொண்டு எனக்கு எவரும் இடையூறு விளைவிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.