மெல்லப் பேசு ....மின்னல் மலரே....!! பாகம் 4!!

மொட்டுவிடும் 
உன் நேசங்களில்தான் 
நான் மெட்டமைக்கிறேன் 
பெண்ணே!



கிணற்றில் கட்டியிருந்த கப்பியில் வளுக்கிச் சென்றது கிணற்று வாளி. ஒவ்வொரு வாளியாக அள்ளி ஆசையாகக் குளித்தான் வெற்றி. முன்னெல்லாம், வசதிகளுக்காகவும், ஆடம்பரங்களுக்காகவும் ஏங்கிய மனம் இப்போது எளிமையில் ஆனந்தமும் ஆரோக்கியமும் காண்கிறது.  


இந்த வீட்டை இடித்துக்  கட்டவேண்டும் என்றும் வசதிகள் பலவற்றைச் செய்யவேண்டும் என்றும் அவன் அப்பாவுடன் தகராறு செய்த நாட்களும் உண்டு. இந்த இயற்கை வாழ்வில் இருந்து மாறமுடியாது என அவர் அடம்பிடித்ததும், அதனால், ரவுணில் படிக்கப்போகிறோம் எனக்கேட்டு  அவனும் தங்கையும் வசதிவாய்ப்புக்கள் அதிகம் இருந்த அத்தை வீட்டில் சென்று தங்கிப் படித்ததும், படிப்பு, வேலை என வளர்ந்த பின்னர் அங்கேயே பிளட் வாங்கி தங்கிவிட்டதும், என காலங்கள் பல துன்பங்களை அவர்கள் மூலமாக தந்தைக்குச் செய்துவிட்டிருந்தது.

இப்போது நினைத்ததும் மனம் வலித்தது அவனுக்கு. அத்தையும் மாமாவும் பிள்ளைச் செல்வம் இல்லாதவர்கள் என்பதால் அப்பாவும் அங்கேயே இருந்து படிக்கச் சம்மதித்துவிட்டார்.  பாவம் அப்பா, எங்களுக்காகவே வாழ்ந்தவர், அவரைப் புரிந்துகொள்ளாமல் அத்தை வீட்டில் இருவரும் தங்கிவிட்டோமே, ஒருவராவது அப்பாவுடன் இருந்திருக்கலாம் எனஅப்போது நினைத்தான்.  ‘அதனால் தான் அவரிடம் தஞ்சம் கேட்டு வந்த கனி மீது அவர் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாரோ?‘ எண்ணங்களோடே குளித்து முடித்தான்.

உண்மையில் ஷவர் குளியலுக்கும் கப்பியிலே வாளிகொண்டு கிணற்றில் அள்ளிக் குளிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.  ஒவ்வொரு வாளி அள்ளிக் குளிக்கும் போதும்  வித்தியாசமான ஒரு புத்துணர்வினை உணர்ந்துகொண்டான். உடம்பு மிக லேசான உணர்வுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.

அவன் உள்ளே வரவும் வீட்டிற்குள் இருந்து கனிமொழி வெளியே வரவும் சரியாக இருந்தது. முகத்திற்கு முன்னால் எதிர்ப்பட்டவனிடம் என்ன சொல்வதென தெரியாது, மருண்டு விழித்த அவளை கண்களால் அள்ளிப் பருகிக்கொண்டான் வெற்றிமாறன். அவளது மருண்ட விழிகளுக்குள் ஏதோ மாயம் இருப்பது போலவே அவனுக்குத் தோன்றியது. அது சொல்லாமல் சொன்ன சேதிகள் ஏராளம். குனிந்ததலையை நிமிராமலே நின்றுகொண்டிருந்தவள், ஆ......என்ற அவனது மெல்லிய சத்தத்தில் நிமிர்ந்தாள்.

குளித்துவிட்டு தலையைத் துவட்டியபடியே வந்தவன், வேண்டுமென்றே தலையைச் சிலுப்பி அவள்மீது நீரைத் தெளித்தான். அவள் எப்போதும் போல பேசாமலே நின்றாள்.

அவன் தன்னையே உற்றுப் பார்ப்பதைக்கண்ட கனிமொழி, சற்றுநேரம் நிலையாகி நின்றுவிட்டாள். அவனை விலத்திச் செல்வோம் என்றால் நடுவழியில் நின்றுகொண்டு அழிச்சாட்டியம் செய்துகொண்டிருந்தான். மென்றுவிழுங்கி அவள் நின்றுகொண்டிருக்க, அவனோ, உதட்டைச் சுழித்து நாக்கைப் புரட்டி விளையாடிக் கொண்டிருந்தான்.  அவன் விழிகள் ஏதோ கதை சொன்னது. 

 “அம்மா.....” என்ற மகனின் மழலை அழைப்பில் அவசரமாய் அவ்விடம்விட்டு நகர்ந்து விட்டாள் அவள். மகனின் சின்னச் சத்தம்
 போதும்,  அவளது அத்தனை சிந்தனைகளும் கலைவதற்கு என்பது அவனுக்குத் தெரியும்.

காலை உணவை அப்பாவின் படுக்கை அருகில் இருந்த மேசையில் வைத்திருந்தாள் கனிமொழி. எடுத்துப் பார்த்தான். பிட்டும் இறால் குழம்பும், வெங்காயத்தாள் வறையும் இருந்தது. அவனுக்கு மிகப்பிடித்தமான உணவு அது. அப்பாவுக்கு பச்சையரிசி, உழுந்து சேர்த்த பால்கஞ்சி. அவன் வந்துவிட்டால், அப்பாவையும் தனது மகனையும் கவனிப்பது போலவே அவனையும் பார்த்துப் பார்த்து கவனித்துக்கொள்வாள். ஆனால் ஒரு வார்த்தைகூட பேசமாட்டாள். அம்மா இறந்தபிறகு பாட்டி இருந்தவரை பாட்டியின் சமையலும் பின்னர் அத்தையின் சாப்பாடுமாய் காலம் ஓடிவிட்டிருந்தது.  அவன் யாரிடமும் தனக்குப் பிடித்தமானவைகளைக் கேட்டுச் சாப்பிட்டது கிடையாது. அம்மாவோடும் பாட்டியோடும்  அந்த ஆசையும் போய்விட்டிருந்தது. இப்போதுதான் அவனுக்குப் பிடித்தமானதை சாப்பிடுகின்றான். அதுவும் அவன் சொல்லாமலே. ‘அது சரி, அப்பாவுக்குத் தெரிந்தால் சரிதானே? தானாக அவளுக்கு போய்விடும்,

“அப்பா....” என்றான் மெல்ல.
“என்னப்பா...‘ சாப்பாடு நல்லா இல்லையா?”
“ஐயோ...அதில்லப்பா....சாப்பாடு செம ரேஸ்ற், நான் வர்றதை கனிக்கு சொன்னீங்களா?”
“ஓ...அதை அண்டைக்கே சொல்லிட்டனே...”
“சரி... சரி..  . ” உதட்டை மடித்துச் சிரித்தான் வெற்றிமாறன்.

"அதுதான் அம்மணி எனக்கு பிடித்ததாக சமைத்திருக்கிறா...இதில ஒரு குறைச்சலும் இல்லை," மனதிற்குள் செல்லமாய் திட்டிக்கொண்டான் அவளை. ஒரு பெருமூச்சும் கூடவே வெளிப்பட்டது அவனிடமிருந்து. 

அவனை நிமிர்ந்து பார்த்த தந்தை, தலையில் கைதொட்டு அன்பாகத் தடவிக்கொடுத்தார். அவன் மனைதைப் படித்தவராயிற்றே. மகனின் முகத்தை நேராய் பார்த்தபடி தலையை ஆட்டினார். ‘எல்லாம் சரியாகிவிடும்‘ என்பது போல இருந்தது அந்தச் செயல்.

ஏனோ, அப்பாவின் மடியில் சாய்ந்துகொள்ளவேண்டும் போல தோன்றியது வெற்றிக்கு. படிப்பில் கெட்டிக்காரனாகவும் குழப்படியில் மன்னாகவும் இருந்து இரண்டையும் சரிவரச்செய்து சாதனையாளனாக இருந்தவன் அவன். அவனது புத்திசாலித்தனத்தினால் அவனை அதிகம் யாரும் கண்டிப்பது கிடையாது. அவன் அடங்காதவனும் தான். எதைப்பற்றியும் யோசிக்காது சட்டென முடிவெடுத்து  செயற்படுத்திவிடுபவன். ஆனால் எப்போதுமே பெண்மையை அளவுகடந்து மதிப்பவன். கனிமொழி மீதான காதல் அவனை மற்ற குணங்களிலிருந்தும் தள்ளிவைத்து அவளுக்கேற்றவனாக மாற்றியிருந்தது.  அவள் மட்டும் ஏனோ அவனை எற்க மறுக்கிறாள்.

மறு கரத்தால் அப்பாவின் கரத்தினை இறுகப்பற்றிக் கொண்டான். அந்தப் பற்றுதலில் ஆறுதல் தேடும் குழந்தையின் ஏக்கம் இருந்தது. தானும் இறுகப்பற்றி நம்பிக்கையும் தைரியமும் கொடுத்தார் அவனது அப்பா. மனதிற்குள் தகித்த வேதனையை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டான் வெற்றிமாறன்.

தொடரும்.......

கோபிகை



ஆசிரியர்பீடம்
தமிழருள் இணையத்தளம்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.