சஹ்ரான் அரசியல்வாதிகளுடன் கொண்டிருந்தது ஆழமான உறவு!!

காத்தான்குடியில் அரசியல்வாதிகளை அழைத்து தேர்தல் தொடர்பில் கலந்துரையாடும் அளவிற்கு சஹ்ரான் செயற்பட்டிருக்கின்றார் என்பது வியப்பான விடயம் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.


அத்துடன், குற்றம் சாட்டப்படுகின்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி எந்தளவு கவனம் செலுத்துகின்றார் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் அலுவலகத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் றமழான் மொகமட் இர்பான் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 27 அரச முத்திரைகளில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக முன்னாள் பிரதேச செயலாளர், தற்போதைய பிரதேச செயலாளரின் அரச முத்திரையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது ஏறாவூர் பற்று பிரதேச செயலக கிராம சேவகர்கள், வன இலாகா அதிகாரிகள், நில அளவையாளர் மட்டுமல்லாது மட்டக்களப்பு மாவட்டத்தையும் தாண்டி பதியத்தாலாவ பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்களின் முத்திரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இந்த மாவட்டத்தில் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், வன இலாகா அதிகாரிகள் என ஒரு பிரதேச செயலகத்திற்கு உரிய அதிகாரிகள் என அனைவரினதும் முத்திரைகள் அச்சடிக்கப்பட்டு ஒரு பிரதேச செயலகமொன்று ஏறாவூர் பிரதேசத்தில் ஒரு இடத்தில் இத்தனை காலமும் இயங்கிக் கொண்டிருந்திருக்கின்றது.

கைப்பற்றப்பட்ட முத்திரைகளின் உத்தியோகத்தர்கள் அனைவரும் தமிழ், சிங்கள உத்தியோகத்தர்களாகவே இருக்கின்றார்கள். இங்கு முத்திரைகள் மாத்திரம் அல்ல வன இலாகாவிற்கு உரித்தான மரங்களுக்கு முத்திரையிடப்படும் சுத்தியல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் 2009இல் யுத்தம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து வளம் நிறைந்த பகுதியான படுவான்கரை பகுதியில் உள்ள மரம், மண், நிலம் அனைத்தும் வேகமாக அபகரிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

இதனை நாங்கள் பல தடவைகள் தெரிவித்தும் வந்தோம். இவற்றை பேசுகையில் நாங்கள் இனவாதியாக முத்திரை குத்தப்பட்டோம்.

எங்களுக்குள் இருக்கும் சில நல்லிணக்கம் பேசுகின்றவர்களாலும் நாங்கள் இனவாதியாக முத்திரை குத்தப்படுகின்றோம். ஆனால் அவர்கள் சகல அரச முத்திரைகளையும் வைத்து நமக்கு நன்றாக குத்தியிருக்கின்றார்கள்.

இவ்வாறு எமது எல்லைப்புற பிரதேச காணிகளுக்கான சகல ஆவனங்களையும் அவர்கள் வைத்திருக்கின்றார்கள். சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் கொடுக்கப்பட்ட சுவர்ண பூமி காணி ஒப்பங்களை வாகரை பிரதேச எமது மக்கள் வைத்திருக்கின்றார்கள்.

எனினும் அவர்கள் இன்று வெளியேற்றப்பட்டு, சகல ஆவணங்களுடனும் அரசியல் பின்புலத்துடனும் வேறு நபர்கள் இருக்கின்றார்கள். எந்த அளவிற்கு எமது நிலங்கள் வளங்கள் சட்டரீதியான முறை என காட்டப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளன.

இவற்றை பேசுபவர்கள் இனவாதிகள், இதனை வெளிப்படுத்தும் ஊடகங்கள் இனவாத ஊடகங்கள் என இனவாதத்தை பரப்பும், இனவாதத்தை கக்கும் அரசியல்வாதிகளும் அவர்களின் அருவருடிகளும் கூறுகின்றார்கள். அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது ஒருபோதும் குற்றம் சுமத்தவில்லை.

83 களுக்கு முன்னர் அரச ஊடகங்களில் அதிகளவான தமிழர்கள் இருந்தார்கள். ஆனால் கடந்தகால யுத்தம் மற்றும் அதன் பிறகு தமிழ் ஊடகவியலாளர்கள் ஓரங்கட்டப்பட்டு அரச ஊடகத்துறையில் மற்றைய சமூகத்தை சேர்ந்தவர்கள் சந்தர்ப்பவாதத்தை பயன்படுத்தி தற்போது நிறைந்துள்ளார்கள்.

கடந்த காலங்களில் 35 வீதத்திற்கு அதிகமாக இருந்த தமிழ் ஊடகவியலாளர்கள் தற்போது 7 வீதமும் இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அரச ஊடகங்களில் தமிழ் மக்கள் மத்தியிலும் இருக்கின்ற திறமையான ஊடகவியலாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் பல்வேறுபட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றது. அவ்வாறான பொருட்களுக்கு சில முஸ்லிம் அமைச்சர்கள் சொல்லும் வியாக்கியானம் மிகவும் நகைச்சுவையாக இருக்கின்றது.

அண்மையில் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் பற்றி அவர் கூறிய விடயம் நகைப்புக்குரியதே. முன்னாள் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் விட்டு செல்வதற்கு துப்பாக்கி ரவைகள் என்ன பிய்ந்த செருப்பா அல்லது தலை சீவும் சீப்பா எனக் கேட்கத் தோன்றுகிறது.

காத்தான்குடியில் அரசியல்வாதிகளை அழைத்து தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுகின்ற அளவிற்கு சஹ்ரான் செயற்பட்டிருக்கின்றார் என்பது வியப்பான விடயமே. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பழைய படம் ஒன்று இருந்ததாக சொல்லி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அது சேர்ந்து எடுத்துக் கொண்ட படமும் அல்ல அவர்கள் அறையில் இருந்தது. ஆனால் இஸ்லாமியப் பயங்கரவாதியான சஹ்ரானுடன் இணைந்து படம் எடுத்துக் கொண்டவர்கள் மீது எந்தக் கைதும் இடம்பெறவில்லை. கைது செய்யப்படுபவர்களும் விரைவாக வெளியில் வந்து விடுகின்றார்கள்.

அரசியல் அதிகாரம் பதவி ஆளுங்கட்சியின் ஆதரவு என்பவற்றை வைத்துக் கொண்டு அனைத்தும் இடம்பெறுகின்றது. இவ்வாறு இருக்கின்ற போது எவ்வாறு ஒரு நியாயமான நீதியான விசாரணை மேற்கொள்ள முடியும். பதவி அதிகாரம் கொடுத்து அரசின் பக்கபலமாக வைத்துக் கொண்டு எவ்வாறு குற்றவாளிகளை இனங்காண முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்த அரசாங்கத்தை நடத்த வேண்டும். ஜனாதிபதி கூட பாதுகாப்பு விடயத்தில் இன்று குற்றம் சாட்டப்படுகின்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்தளவு கவனம் செலுத்துகின்றார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.