மெல்லப் பேசு ....மின்னல் மலரே....பாகம் 5


என் உலகமே 
நீயாகிப் போகிறாய்,  
எனக்காகவே 
வாழ்ந்து விடு!!மதிய உணவின் பின்னர் அந்த நாவல் மரத்தடியில் தான் கனிமொழி மகனுடன் அமர்ந்து விளையாடுவது வழமை. அன்று மதியம், மகனை,  வெற்றி துாக்கிச்சென்றுவிட்டதால் தனியே அமர்ந்திருந்தாள். நீண்ட நாட்களின் பின்னர் அம்மாவின் ஞாபகம் வந்து வாட்டியது. இந்த உலகத்தில் அவளுக்கிருந்த ஒரே உறவு அம்மா மட்டும்தான். ‘காலன் இவ்வளவு விரைவாய் அம்மாவை என்னிடம் இருந்து எடுக்காமல் விட்டிருக்கலாம்‘ என நினைத்தாள். வறுமையில் போராடி அம்மா மரணித்த அந்து மணித்துளிகளை அவளால், வாழ்க்கையில் ஒருநாளும் மறந்துவிடவே முடியாது. அம்மாவை காப்பாற்றமுடியாமல் அவள் கதறியதும், துடித்ததும்...கடவுளே...ஒரு கடவுள் கூட அவளுக்காக இரங்கவில்லையே.

அவளுக்கென்று ஒரு துணையை ஏற்படுத்தாமல் தான் போகப்போவதை எண்ணி அம்மா குமுறியது இப்போது போல, நெஞ்சம் பாறையாய் கனத்தது அவளுக்கு.“கனிம்மா...உனக்கு படிப்பையும் அறிவையும் இந்த உலகத்தில வாழுற தைரியத்தையும் தந்திட்டனே தவிர உனக்குத் துணையா ஒருத்தனை தர்றதுக்கு முதல்ல இந்த விதி என்னை கொண்டுபோயிடும் போல இருக்கேடா.....”கடைசியாக அம்மா அரற்றிய வரிகள் இவைதான். 

‘அம்மா, உங்கட வாழ்க்கையைப் பாத்தபிறகும் நான் கல்யாணம் பண்ணி வாழ ஆசைப்படுவேனா?‘ மனதில் தோன்றியதை மனதுக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.
“அப்பிடி எதுவும் இல்லம்மா , நீங்கள் யோசிக்காம இருங்கோ.... அவள் சொல்லி பத்து நிமிடங்கள் பேசாமல் இருந்த அம்மா அதன் பின்னர் பேசவே இல்லை.
அம்மா.....அம்மா.....அவளது கதறல் வைத்தியசாலையின் சுவா்களைக் கிழித்து தெறித்தது. அந்த சில நிமிடங்கள் மட்டும் தான், அதன் பின்னர் அவள் அழவேயில்லை.
அந்தக்கணம் மீண்டும் மனதில் தோன்ற, இதயத்தில் தொன் கணக்கில் கனத்தை உணர்ந்தாள். அம்மாவின் நினைவாக அவளிடம் இருப்பது ஒரு நாட்குறிப்பு மட்டுமே. எழுந்து உள்ளே சென்று அதனை எடுத்துப் பார்த்தாள். அதன் முகப்பும் ஓரங்களும் காய்ந்து கிடந்தது, அம்மாவின் கரங்களைப் போலவே. கையினால் தடவினாள், உடலில் ஒருவித சிலிர்ப்பு ஓடியது.
‘அம்மா.....‘ நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். முதல் பக்கத்தில் கண்களை ஓடவிட்டாள்.


இருளுக்குள் நின்று 
விடியலுக்காய் ஏங்கிய 
சிறு பறவை 
இவள். 


அம்மாவிற்கு கவிதைகள் மீது அளவற்ற பிரியம் இருந்ததென்பது அவளுக்கும் தெரியும், மரணிக்கும் நொடிவரை அம்மாவின் உலகில் முதலிடம் வகித்தது புத்தகங்கள் தான். ஓய்வுவேளைகளில் எப்போதும் ஏதோ ஒன்றை வாசித்தபடிதான் அவள் அம்மாவைக் கண்டிருக்கிறாள்.
கவிதைகளின் கீழே அம்மாவின் மனம் வார்த்தைகளாய் வடிவம் கண்டிருந்தது.

வண்ணமயமான  என் கனவுகள் கருமை புசிக்கொள்ளும் என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. ஆசைப்பட்டு எதையும் அடைந்திடாத எனக்கு ஆசைப்பட்டு கிடைத்த பொக்கிஷம் என் காதல் என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்த காதலையே நான் வெறுக்குமளவிற்கு என் உணர்வுகள் காயப்படும் என்று எனக்குத் தெரியாது. காதல் கணவனாக என் கரம் பற்றிக்கொண்டவர், தனது சுயரூபத்தைக் காட்ட எடுத்துக்கொண்ட காலம் இரண்டே மாதம் தான். ஆசை அறுபதுநாள், மோகம் முப்பது நாள் என்பர். என் வாழ்க்கையில் அறுபது நாளோடு அத்தனையும் முடிந்தேவிட்டது. 
காலம் அவரைக் காட்டிக்கொடுத்துவி்ட அந்த அதிர்ச்சியில் நான் பாதி செத்தேவிட்டேன் என்பதுதான் நிஜம். தேனீக்கூட்டுக்குத்தப்பி குளவிக்கூட்டில் விழுந்த கதையாய் போயிற்று என் கதை.

முதல் பக்கம் பார்த்ததும் வலி இதயத்தை அறுத்தெடுக்க, அடுத்த பக்கத்தைப் புரட்டவும் மகனின் மழலைக்குரல் கேட்கவும் சரியாக இருந்தது.

சட்டென்று அதனை உள்ளே வைத்துவிட்டு, நேரத்தைப் பார்த்தாள். அனந்துவுக்கு நித்திரைநேரம். அவசரமாய் வெளியே வந்தாள்.வெற்றியின் தோள் மீதிருந்து அவனது தலைமயிரை அளைந்தபடி வந்துகொண்டிருந்த மகனை ஆசையாய் பார்த்தாள். சிறிது நேரம் தான் அம்மாவும் பையனும் தள்ளியிருந்தனர், அதற்குள் இருவரும் தவித்த தவிப்பை ஆர்வமாய் பார்த்தவன், தாயிடம் செல்ல தாவிக்குதித்த குழந்தையை இரண்டு செல்லமுத்தங்களால் அர்ச்சித்துவிட்டு அவளிடம் நீட்டினான். 

அவனது கைவிரல் பட்டுவிடாதபடி கவனமாய் மகனை வாங்கிய அவளை ஆழமாகப் பார்த்துவைத்தான் வெற்றி. 

"கொழுப்புத்தான் ......."வாய்க்குள் முணுமுணுத்தவனை அவளும் ஆழமாய் பார்த்தாள். 


தொடரும்.....

கோபிகை


ஆசிரியர்பீடம்
தமிழருள் இணையத்தளம்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.