வெசாக் தின கொண்டாட்டங்கள் !!

நாடளாவிய ரீதியில் பௌத்த மக்களால் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.


வெசாக் தினத்தை முன்னிட்டு விகாரைகளில் இன்று (சனிக்கிழமை) காலை சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.

நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதம் காரணமாக பலத்த பாதுகாப்பிற்கு மத்தியிலேயே இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பௌத்தர்களின் முக்கிய வணக்கஸ்தலமான கண்டி தளதா மாளிகையில் சிறப்பாக பூஜைகள் இடம்பெற்றிருந்தன.

இந்த பூஜை நிகழ்வுகளில் இலங்கையர்கள் வெளிநாட்டவர்களென பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மக்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டமையினால் கண்டி நகர் முழுவதும் முப்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

விஷேடமாக தளதா மாளிகைக்குள் பொருட்கள் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை. தொலைபேசி, பணப்பை, இடுப்பு பட்டி என அனைத்தும் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டதன் பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். தளதா மாளிகையின் உள்ளேயும் அதிகமான படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு கண்டி நகர் முழுவதும் பௌத்த கொடிகள் தொங்கவிடப்பட்டிருந்ததுடன், வெசாக்கூடுகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை எமது ஆதவன் கமராவில் பதிவாகியது.

அதேபோன்று சிங்களவர்கள் செறிந்து வாழும் பொலனறுவை, மாத்தறை பகுதிகளிலும் சமய அனுஷ்டானங்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.

மாத்தறை தெனியாய பிரதேசத்தில் வெசாக் தினத்திற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றன.

அத்தோடு வெசாக் கூடுகளும் என்றும் இல்லாதவாறு தொங்கவிடப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். பாடசாலைகளிலும் வெசாக்கூடுகள் தொங்கவிடப்பட்டிருந்ததோடு மாணவர்களும் அலங்கரிப்பதில் ஆர்வமாக ஈடுபட்டனர்.

அதேபோன்று பொலனறுவையிலும் வெசாக் தினத்தை சிங்கள மக்கள் ஆர்வமாக வரவேற்றனர். கள்விஹாரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்த வழிபாடுகளிலும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதேவேளை மலையகத்தின் பல பாகங்களிலும் வெசாக் தின கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன.

அந்த வகையில் ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, மஸ்கெலியா, பொகவந்தலாவ, அக்கரப்பத்தனை, நுவரெலியா ஆகிய பகுதிகளிலும் வெசாக் தின கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வின்போது இன மத பேதமின்றி கிராம மக்கள் தோட்டப்புர மக்கள், பொலிஸ் அதிகாரிகள், முஸ்லிம், இந்து மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அத்தோடு, ஹட்டன் நீக்ரோதாரம விகாரையிலும் வெசாக் தின விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, கொண்டாட்டங்களும் இடம்பெற்றன. இந்நிகழ்வின்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் விகாரையின் விகாரதிபதியிடம் ஆசிப்பெற்றதோடு, பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.