ஈழத்து இயக்குநருடன் ஒரு பொழுது!!


ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை பற்றிப் பேசுகிறது, `சினம்கொள்’ திரைப்படம். இது இந்தியத் தயாரிப்பில், 100 சதவிகிதம் ஈழ நிலப்பரப்பில் எடுக்கப்பட்ட முதல் சினிமா. இந்திய சென்சாரில் ‘யூ’ சான்றிதழ் பெற்று, தேசிய விருது தேர்வுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


``பாரதிராஜா, சீமானால் எங்கள் சினிமாவை உருவாக்க முடியாது!'' - ஈழ இயக்குநர் ரஞ்சித்


``விடுதலைப் புலிகள் ‘ஆதவன் திரைப்படக் கல்லூரி’ என்ற கல்லூரியைத் தொடங்கி, அதன்கீழ் `எல்லாளன்’, `ஆணிவேர்’ உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்தனர். அவற்றை இயக்கியவர்கள் அனைவருமே தமிழகத்திலிருந்து சென்ற மரியாதைக்குரிய இயக்குநர்கள். அந்தப் படங்களைத் திரையரங்குகளில் வெளியிடவும் செய்தனர். ஆனால், அவை அத்தனையும் தோல்வியடைந்தன. அவ்வளவு ஏன் சினிமாவைப் பற்றி ஈழக் கலைஞர்களுக்குக் கற்றுத்தரவே பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட இயக்குநர்களை பிரபாகரன் அங்கு அழைத்தார். ஆனால், இவர்கள் ஒருவராலும் ஈழ சினிமாவை உருவாக்க முடியாது. இதை நான் ஆணித்தரமான கருத்தாகவே பதிவு செய்கிறேன். ஆனால், நீங்கள் அங்குபோய் வாழ்ந்து உணர்வதன் மூலம் காலப்போக்கில் வேண்டுமானால் அதைச் சாத்தியப்படுத்தலாம்!” - உறுதியாகப் பேசுகிறார், இயக்குநர் ரஞ்சித் ஜோசப். ஈழத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர். `சினம் கொள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தியத் தயாரிப்பில் 100 சதவிகிதம் ஈழ நிலப்பரப்பில் எடுக்கப்பட்ட முதல் சினிமா. சமீபத்தில் இந்தப் படத்தைச் சிறப்புக் காட்சியாகத் திரையிட்டுக் காட்டிய ரஞ்சித், படம் முடிந்த பிறகு நம்மிடம் பேசினார்.

``உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?”

``பிறந்து வளர்ந்தது, இலங்கை யாழ்ப்பாணம் நீர்வேலி. எங்கட வீட்டில் எல்லோரையும் சேர்த்து மொத்தம் ஏழு பிள்ளைகள். அப்பா இந்தியாவிலிருந்து அகதியாக கனடா போனார். அங்கு அகதியுரிமை பெற்ற பிறகு, தன் குடும்பத்தை அழைத்துக்கொள்ள ஸ்பான்சர் பண்ணுவார்கள். இது ஈழத் தமிழர்கள் மத்தியில் வழக்கமாக நடக்கும் விஷயம். இப்படி என் 16-வது வயதில் 93-ம் ஆண்டு கொழும்பிலிருந்து கனடாவுக்குப் போனோம். பள்ளி, கல்லூரி எனப் படித்தது எல்லாம் அங்குதான். கார்ல்டென் யூனிவர்சிட்டி. தமிழர்கள் அதிகளவில் படிக்கும், புலிகளின் மாணவர் இயக்கம் இயங்கிய பல்கலைக்கழகம். இங்கு ஆர்க்கிடெக்சர் படித்தேன். பிறகு, ட்ரைவர்ஸ் இன்ஸ்டிட்யூட் என்ற ஒரு ஃபிலிம் ஸ்கூலில் ஃபிலிம் அண்ட் டெலிவிஷனில் டிகிரி படித்தேன். கோர்ஸ் முடித்துவிட்டு குறும்படங்கள் இயக்கினேன். சுனாமி பேரழிவின் ஓராண்டு நினைவை புலிகள் அனுசரித்துக்கொண்டிருந்த சமயத்தில் 2005-ல் ஈழத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது.

அப்போது அங்கு டிடிஎன் என்கிற புலிகளின் தமிழ் நேஷனல் டெலிவிஷன் ஒன்று இருந்தது. 2003-ல் தொடங்கி 2009-ல் இறுதி யுத்தம் வரை உலகளாவிய அளவில் செய்திகளைப் பரிமாறிக்கொண்டு இருந்தது. டிடிஎன் ஊழியர்கள் சிலருக்கு, போராட்டம் சம்பந்தப்படாத மீடியா ஸ்டெடிஸ், ஆவணப்படம், கேமரா, போட்டோகிராபி பற்றி டீச் பண்ணத்தான் அழைத்திருந்தனர். இப்படி வன்னியில் நான்கைந்து மாதங்கள் தங்கியிருந்தேன். என்னோடு கனடாவில் படித்த நிறைய மாணவர்கள், அதாவது ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயரிங், எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் எல்லாம் வன்னியில் இருந்ததைப் பார்த்தேன். விசாரிக்கும்போது, அவர்கள் அனைவருமே இயக்கத்திலிருந்துகொண்டு படித்துவிட்டு ஊருக்குத் திரும்பியவர்கள் என்பது புரிந்தது. அந்தச் சமயத்தில்தான் சினிமாவை நம் விடுதலைப் போராட்டத்துக்கு எப்படிப் பயன்படுத்தலாம் எனப் பேசப்பட்டது. அதன்பேரில் தமிழ்நாடு சென்று இயக்குநர்கள் யாரிடமாவது உதவி இயக்குநராகச் சேருவது என முடிவெடுத்தேன்.”

"தமிழ் சினிமாவில் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?”

``2007-ல் இந்தியா வந்து கவிஞர் அறிவுமதி அண்ணனின் மூலம் இயக்குநர் சசி சாரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து `பூ’ படத்தில் வேலை செய்தேன். இந்தியாவுக்கு வரும்போது சினிமாவின் டெக்னிக்கல் விஷயங்களை நிறைய கற்றவன் என்ற கர்வம் இருந்தது. ஆனால், `பூ’ படத்துக்காக மதுரையைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சுற்றும்போதுதான், எனக்கு எதுவுமே தெரியாது என்பதை உணர்ந்தேன். இங்குள்ள உதவி இயக்குநர்களின் கிரியேடிவ் தாட்ஸ், எழுத்து, சிந்திக்கும் திறனைப் பார்த்த பிறகு டெக்னிக்கல் விஷயங்களைத் தாண்டி சினிமாவுக்கான அவசியம் இதுதான் என்பது புரிந்தது. நான் மீண்டும் ஜீரோவிலிருந்து ஆரம்பிக்கவேண்டிய சூழ்நிலை.”


``இயக்குநர் சசியிடம் இருந்தது, `சினம்கொள்’ படம் இயக்கியது... இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தீர்கள்?”

`` `நான் திருப்பி வருவேன் சார்’ என்று சசி சாரிடம் சொல்லிவிட்டு 2008 இறுதியில் இங்கிருந்து கனடா சென்றேன். அது போர் உச்சம் தொட்ட காலம். நாடு சம்பந்தமாக கனடாவில் செயல்படத் தொடங்கியதால், மன உளைச்சலில் சினிமாவைப் பற்றி யோசிக்கவேயில்லை. இதற்கு முன்பாக `பூ’ படத்தில் வேலை செய்யும்போது, `காக்கா முட்டை’ மணிகண்டனின் நட்பு கிடைத்தது. அவர் கேமரா டிபார்ட்மென்ட். நான் டைரக்ஷன் டிபார்ட்மென்ட். அவர் மூலம் கார்த்திக் சுப்புராஜ், நலன் குமரசாமி என நியூ வே இயக்குநர்கள் பழக்கமானார்கள். அப்படித்தான் விஜய் சேதுபதியின் அறிமுகமும் கிடைத்தது. கனடாவில் இருக்கும்போதுகூட அவர்களுடன் ஸ்கைப்பில் மணிக்கணக்கில் கதைகள் பேசுவேன்.

2012-ல் மீண்டும் சென்னை வந்தேன். அப்போதுதான், `பனை’ என்றொரு ஸ்கிரிப்ட் எழுதினேன். என் பள்ளித் தோழன் அமுதன். டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவோடு இருந்தவன். எனக்கோ போராளிக் கனவு. நான் வன்னிக்குத் திரும்பும்போது அவன் மாவீரன். போராளியாகி நாட்டுக்காக இறந்துவிட்டான். அப்போது அமுதனின் நாள்குறிப்பு கிடைத்தது. `நான் ஏன் போராளியானேன்’ என்ற அவனின் கதை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தக் கதையையும், ஆனந்த விகடனில் வந்த காசி ஆனந்தனின் `வடு’ என்ற கதையையும் இணைத்து `பனை’யை எழுதினேன். `இறுதி யுத்தம் சமயத்தில் கொழும்பு உட்பட இலங்கையினுடைய முக்கியமான பகுதிகளில் புலிகள் பரவியிருந்தனர். அவர்கள் நினைத்திருந்தால், அன்றே கொழும்பு சுடுகாடாக மாறியிருக்கும். ஆனால், பிரபாகரன் சிங்களப் பகுதிகளில் இன அழிப்பைப் பற்றி நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை. இன அழிப்பு செய்யாத ஒரு விடுதலை அமைப்பு எப்படி பயங்கரவாத அமைப்பாகச் சித்திரிக்கப்பட்டது’ என்று சர்வதேசத்தைப் பார்த்துக் கேட்கும் கேள்வியாகத்தான் `பனையை எழுதியிருந்தேன். `2019 மே 17-ல் பிரபாகரன் இறந்துவிட்டார்’ என்று சொல்லும் அந்தக் கணத்திலிருந்துதான் `பனை’யின் கதை தொடங்கும். விஜய் சேதுபதிக்கு அந்த ஸ்கிரிப்ட் பிடித்திருந்தது. அப்போது அவர் `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, `பீட்சா’ படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போதே அதற்கு 10 கோடி ரூபாய் பட்ஜெட். தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. `பனை’ வளராமல் நின்றுபோனது.”

``பிறகு கனடாவுக்குப் போய்விட்டீர்களா, இங்கேயே தங்கி முயற்சி செய்தீர்களா?”

``பிறகு, தயாரிப்பாளரைத் தேடி கனடா போய்விட்டேன். அந்தச் சமயத்தில் இசைப்பிரியாவின் காணொலி வெளியானது. அது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அந்தக் காணொலி ஏற்படுத்திய தாக்கத்தில், நடிகர் விஷால் ஈழம் சார்ந்த ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்திருப்பதாகச் சொன்னார்கள். உடனே என்னை சென்னைக்கு வரச்சொன்னார்கள். வந்தேன். விஷாலுக்கு `பனை’ ஸ்கிரிப்ட் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. தன் வடபழனி அலுவலகத்திலேயே தனியாக எனக்கு இடம் ஒதுக்கித் தந்தார். அங்கேயே டிஸ்கஷனைத் தொடங்கினோம். கேமராமேன் மதி. எடிட்டர் ரூபன் என அருமையான டீம். ஈழத்தில் நடக்கும் காட்சிகளைக் கம்போடியாவில் எடுக்கலாம் எனத் திட்டமிட்டோம். `என் சம்பளத்தையே இந்தப் படத்துக்கு முதலீடாகத் தருகிறேன்’ என்றார், விஷால். படத்தை எடுக்க ஃபண்ட் பண்ணச்சொல்லிப் புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்தேன். யாரும் முன்வரவில்லை. அந்த முயற்சியும் டிராப் ஆனது. பிறகு, வருடத்தில் ஆறு மாதம் கனடா, மீதி ஆறு மாதம் சென்னை என ஓடியது. 2016-ல் தான் `சினம்கொள்’ பற்றிப் பேசத் தொடங்கினோம்.”

 `சினம்கொள்’ என்ன மாதிரியான கதை?”

``இறுதிக்கட்டப் போரில் கைது செய்யப்பட்ட ஒரு போராளி. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ல் விடுவிக்கப்பட்டு, தாயகம் திரும்புகிறான். அவனுடைய பார்வையில், `போராட்டம் மவுனிக்கப்பட்ட 2009-க்குப் பிறகு ஈழத்தினுடைய நிலை என்ன?!’ என்ற கேள்வியுடன் கதையில் மூன்று விதமான கருத்துகளை முன்வைக்கிறேன். ஒன்று, `எந்நேரத்திலும் சுடப்படுவாய். செத்துப்போகத் தயாராகவே இரு’ என்று மக்களைப் பய உணர்வோடே வைத்திருப்பது. ஆமாம், ஒட்டுமொத்த தமிழர்களின் நிலப்பரப்புமே திறந்தவெளி சிறைச்சாலையாகக் காட்சி தருகிறது. இரண்டு கிலோ மீட்டருக்கு ஒன்றாக இராணுவ முகாம்கள் இருக்கின்றன. வீதியில் 50 வாகனங்கள் சென்றால், அவற்றில் ஐந்து, ராணுவ வாகனங்கள். புலிகள் இல்லை,  பிரபாகரனைக் கொன்றுவிட்டீர்கள். பிறகு எதற்கு உங்களின் கைகளில் ஆயுதம்?! ‘நீ எனக்கு அடிமை’ என்பதை உணர்த்தத்தான் இந்த ஆயுத அச்சுறுத்தல்.


இரண்டாவது, கலாசார சீரழிவு. ஓர் இனத்தைத் துப்பாக்கி கொண்டுதான் அழிக்க வேண்டும் என்பதில்லை, கலாசார ரீதியிலும் அழிக்க முடியும். ஒரு காலத்தில் கல்வி, ஈழத் தமிழர்களின் மிகப்பெரிய மூலதனம். ஆனால், இன்று அந்தக் கனவு குறைந்துவிட்டது. தமிழ் நிலப்பரப்பில் கஞ்சா, ஆல்கஹால் போன்ற போதை வஸ்துக்கள், நீலப்படம் என அனைத்தும் தாராளமாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் டாஸ்மாக் போல ஈழத்தில் ஏகப்பட்ட போதைகள். அவர்களை போதையிலேயே கிடக்கவைத்து சிந்திக்கும் திறனை மட்டுப்படுத்தி, அடுத்த தலைமுறை வளர்ந்துவிடாமல் பின்தங்க வைப்பதுதான், இதன் பின்னால் உள்ள அரசியல்.

மூன்றாவது, போராளிகளின் தற்போதைய நிலை. இன்று விடுவிக்கப்பட்ட போராளிகளின் பொருளாதார நிலை பரிதாபகரமாக உள்ளது. ஒருவேளை சாப்பாட்டுக்கே அல்லல்படுகிறார்கள். விடுவிக்கப்பட்ட போராளிகளில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஸ்லோ பாய்சன் மூலம் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அங்குள்ள மீடியாக்களே பேசுகின்றன. `என் இறுதிக்காலத்தில் மாவீரர்களின் குடும்பங்களுக்காகவும், காயப்பட்டு உடல் அவயங்களை இழந்த போராளிகளுக்காகவும் வாழ்வதுதான் இலக்கு’ என்று தலைவர் பிரபாகரன் சொல்லியிருக்கிறார். அதற்கு சர்வதேச ரீதியில் ஒரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி வைத்திருந்தார். இன்று அவர் இல்லை என்ற சூழலில், அவர் கட்டியெழுப்பிய அந்தப் பொருளாதாரம் என்ன ஆனது?! வெளிநாடுகளில் உள்ள அந்தப் பொருளாதாரக் கட்டமைப்புகள் அனைத்துமே அதற்கான பொறுப்பாக இருந்தவர்களின் சொந்த சொத்தாக மாறிவிட்டது என்பதே உண்மை. `சினம்கொள்’ பட வில்லனே அப்படி ஒரு புலம்பெயர்ந்த தமிழர்தான். இப்படியான பிரச்னைகளை ஓரளவுக்கேனும் சர்வதேச சமூகத்தின் முன் இந்தப் படம் வைக்கும். முக்கியமாக, போராளிகளின் மரணத்தை வெளிச்சமிட்டுக்காட்டும்.”

``நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?”

``தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் திறமையானவர்கள், ஏற்கெனவே பரிட்சியமானவர்கள். `ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடித்த அரவிந்தன், நர்வினி டேவிட். தமிழ் நடிகர் தனஞ்செயன். இந்த மூவரை மட்டும்தான் இங்கிருந்தே தேர்வு செய்து அழைத்துச் சென்றேன். மற்ற அனைவரையும் அங்குபோய் ஆடிஷன் செய்து தேர்வு செய்தேன். `இப்படி ஒரு படம் நடக்கப்போகிறது’ என்று சொன்னதும், நான் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுசின் முன் சுமார் 300 பேர் வரிசையில் காத்திருந்தனர். ஈழத்தில் சினிமாவின் தாக்கம் பெரிது. அவர்கள் அனைவரும் இந்தியத் தமிழ் பேசுகிறார்கள். `என்னடா இப்படிக் கதைக்கிறீர்கள்’ என்றால், `தெரியலை.. அப்படியே வந்துடுச்சு’ என்கிறார்கள். நம்பமாட்டீர்கள், பல இளைஞர்கள் தமிழ் சினிமாவில் ஹீரோ ஆகவேண்டும், டைரக்டர் ஆகவேண்டும், ஒளிப்பதிவாளர் ஆகவேண்டும் என்ற கனவோடு காத்திருக்கிறார்கள். `இதுதான் உன் மொழி. இந்த உச்சரிப்பில் பேசப்பழகு. ஈழ சினிமா என்பது நம் வாழ்வியலை நம் மொழியைப் பேசக்கூடிய சினிமாவாக இருக்கவேண்டும். சினிமாவை நீ எங்குவேண்டுமானாலும் போய் கற்றுவா. ஆனால், இங்கிருந்துதான் நம் சினிமாவை உருவாக்க வேண்டும்’ என்று அறிவுரை கூறினேன். இன்று ஈழத்தில் நல்ல சினிமாவை உருவாக்கும் ஓர் இயக்கமாகவே `சினம்கொள்’ படத்தில் வேலை செய்த 150 பேரும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். `இந்திய சினிமா வேண்டாம். எங்களுக்கான சினிமாவை நாங்களே செய்வோம்’ என்ற இயக்கமாகவே அது மாறியிருக்கிறது.”

``ஈழத்தில் படப்பிடிப்பு நடத்திய அந்த அனுபவம் எப்படி இருந்தது?”

``ஸ்கிரிப்டை இலங்கைத் திரைப்பட கூட்டுத்தாவனம் ஏற்றுக்கொள்ளுமா என்ற தயக்கத்திலேதான் கொடுத்தோம். ஆனால், படப்பிடிப்பு நடத்த அனுமதித்தனர். வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்களில் 15 நாள்கள் ஷூட்டிங் முடித்திருந்த நிலையில், திடீரென்று ஒருநாள் ஸ்ரீலங்கன் ஃபிலிம் போர்டிலிருந்து எங்கள் லைன் புரொடியூசருக்கு ஒரு போன். `ஷூட்டிங்கை நிறுத்துங்கள். மீறி நடத்தினால் கேமராவை சீஸ் செய்வோம், உங்களைக் கைது செய்வோம்’ என்றார்கள். படப்பிடிப்பை நிறுத்தினோம். படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கும் என்று காத்திருந்தோம். 15 நாள்கள் ஆகிவிட்டன. எம்.பி ஸ்ரீதரன், மனோ கணேசனிடம் பிரச்னைகளைச் சொன்னோம். அப்போது, ஸ்ரீதரன் முக்கியமான ஒரு கருத்தைச் சொன்னார். `சின்ன கேமரா கொண்டுபோய் குறும்படம் எடுக்க அனுமதிப்பார்கள். நீங்கள் 75 பேரைக் கொண்டுபோய் ஷூட் செய்வதைப் பார்த்ததும் பயந்துபோயிருப்பார்கள். இலங்கையில் தமிழ் சினிமா வளர்வதை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இலங்கையின் சினிமா அடையாளமாகச் சிங்களம்தான் இருக்கவேண்டும் என நினைப்பார்கள். ஒருவேளை ஈழ சினிமா உருவாகிவிட்டால், அதன் பக்கபலமாகத் தமிழக சினிமா இருக்கும். இந்த இரு சினிமாக்களும் இணைந்தால், ஈழத்து சினிமா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும். அப்போது இலங்கையின் சினிமா அடையாளமாகத் தமிழ் சினிமா மாறிவிடும் என்ற பயம் அவர்களுக்கு உண்டு’ என்றார். அதுவும் ஒருவகையில் உண்மைதான்.”



``பிறகு ஷூட்டிங் எப்படி நடந்தது?”

``எங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்ல ஒரு பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்தோம். இந்தச் செய்தி அரசுக்குச் சென்றது. பிறகு, `நீங்கள் ஷூட் பண்ணும்போது எங்களின் கண்காணிப்பாளர் ஒருவர் உங்களுடனேயே இருப்பார். என்னென்ன காட்சிகளை எடுக்கப்போகிறோம் என்பதைச் சொல்லி, அவரிடம் அனுமதி பெற்ற பிறகே ஷூட் செய்யவேண்டும்’ என்ற நிபந்தனையுடன் அனுமதித்தார்கள். அப்படி கண்காணிப்பாளராக வந்தவர், ஒரு சினிமா ஆர்வலர். ஒருகட்டத்தில் காடு, மலை, வெயில் என்று எங்களின் அலைச்சலுக்கு அவரால் ஈடுகொடுக்கமுடியவில்லை. `நீங்க ஷூட் பண்ணிக்கங்க. ஈவினிங் ஃபுட்டேஜ் பார்த்துக்கிறேன்’ என்றார். அப்படித்தான் படத்தை முடித்தோம்."



``2005-க்குப் பிறகு 12 வருடங்கள் கழித்து 2017-ல் ஈழம் செல்கிறீர்கள். எப்படி இருந்தது அந்த உணர்வு?”

``போருக்கு முந்தைய தமிழ் ஈழத்துக்கும், இன்று மாற்றமடைந்த தமிழ் ஈழத்துக்கும் கொடுமையான வேறுபாடு. 2005-ல் வன்னியில் போய் இறங்கும்போது, `தமிழீழம் உங்களை வரவேற்கிறது’ என்ற சொல், கூடவே துவிச்சக்கரவண்டி, மிதிவண்டி, வெதுப்பகம், தறிப்பிடம், வைப்பகம் என்று தூய தமிழ்ப் பெயர்கள். அழகு நிறைந்த அந்தப் பகுதிகளில் அப்போது ஒரு பிச்சைக்காரரைக்கூடக் காணமுடியாது. எங்களுக்கென ஓர் அரசாங்கம் உருவாகிக்கொண்டிருந்த காலகட்டம். தமிழர்கள் எவ்விதத் தங்குதடையும் இன்றி வேறுமொழிக் கலப்பின்றி அழகாகப் பேசிக்கொண்டனர். இன்று தமிழ் இரண்டாம் நிலைக்குப்போய், எங்கும் சிங்களம். கிளிநொச்சி பிரதேசங்களில் சில கடைகளில் சிங்களப் பெயர்கள் மட்டுமே. எங்கு பார்த்தாலும் ராணுவம். விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் ராணுவமயமாக்கம். சுதந்திரமாக இருக்கிறோம் என்ற எண்ணமே உங்களுக்கு வராது. யாரோ ஒருவர் உங்களைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்ற எண்ணம்தான் வரும்.


ஆனால், வெளிநாடுகளிலிருந்து போகக்கூடிய தமிழர்களுக்கோ, `நல்ல ரோடு, நல்ல வீடு, சாப்பாடு கிடைக்குது, மக்கள் சந்தோஷமா இருக்காங்க. நாமளும் நல்லூர் முருகன் கோயில் திருவிழாவில் 24 நாள்கள் நல்லா டிரெஸ் பண்ணி, ஜாலியா இருக்கிறோமே, பிறகென்ன பிரச்சினை?’ என்று கேட்டுவிட்டுத் திரும்பி ஊருக்குப் போய்விடுவார்கள். வெளியிலிருந்து பார்க்கும்போது, யுத்தத்துக்குப் பிறகு எல்லாம் சுமுகமாக இருப்பதாக ஒரு தோற்றப்பாடு இருக்கிறது. ஆனால், அழிவுகள், ஆயிரமாயிரம் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட நிலப்பரப்பு உடனடியாக சீன அரசின் உதவியோடு சுத்திகரிக்கப்பட்டிருக்கிறது. பிரதான வீதிகளை விட்டுவிட்டு, உள்ளே போய்ப் பார்த்தால்தான் வீடு, உணவு, உடுப்பு இல்லாமல் மக்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கமுடியும். எத்தனையோ ஆயிரம் குடும்பங்களில் தலைவன் கிடையாது, தலைவி கிடையாது, பிள்ளைகள் கிடையாது. மீதம் இருப்பவர்களுக்கும் கை, கால்கள் இருக்காது. ஒரு படைப்பாளியாக இதைத் தேடித்தான் நான் போனேன்.”

`` `சினம்கொள்’ பற்றித் தமிழகத்தில் என்ன சொல்கிறார்கள்?”

`` `சினம்கொள்’ பற்றி இங்குள்ள முக்கியமான ஒருவரிடம் பேசினேன். `இந்தப்படம் இங்கு ஓடாதுப்பா’ என்றார். `ஏன் ஓடாது’ என்கிறீர்கள்’ என்றேன். `இந்த மொழி எங்களுக்குப் புரியாது’ என்றார். தமிழகத் தமிழர்களைவிட, ஈழத் தமிழர்கள்தான் இங்கிருந்து வரும் படங்களை உயிராக நேசிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கிருந்து வரக்கூடிய குப்பையோ, நல்ல சினிமாவோ நாங்கள் ஆதரிக்கிறோம். மேலும், உங்களுடைய நெல்லைத் தமிழை, மதுரைத் தமிழை, கோவைத் தமிழை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஈழத் தமிழர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக, ஈழத் தமிழிலா உங்கள் படங்களை டப்பிங் செய்து ரிலீஸ் செய்கிறீர்கள்?!

ஒருமுறை எங்கள் இயக்குநர் சசி சார், `தமிழகத்திலிருந்து வரக்கூடிய கதைகள் எல்லாம் இரவல் வாங்கியவை. ஈழத்திலிருந்து வரக்கூடிய படைப்புகள்தான் உண்மையான கதைகள். அதுதான் தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டுபோய்ச் சேர்க்கக்கூடிய களம். அதைநோக்கித்தான் நாங்கள் நகர்கிறோம்’ என்று சொன்னார். ஈழத் தமிழர்களுக்காகப் பேசும் அத்தனைபேரும் இந்தப் படத்தை எப்படி அங்கீகரிக்கப்போகிறார்கள் என்று பார்க்க நான் காத்திருக்கிறேன்.”

``இலங்கையில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``என் பார்வையில் இது ஒரு திட்டமிடப்பட்ட சதி. தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தில் சிங்களப் பேரினவாத அரசு முஸ்லீம்களைப் பயன்படுத்திக்கொண்டது. முள்ளி வாய்க்கால் யுத்தத்துக்குப் பிறகு, `அரசுடன் சேர்ந்து புலிகளைத் தோற்கடித்தோம்’ என்று முஸ்லிம் தலைவர்கள் பெருமையாகச் சொல்லிக்கொண்டனர். ஆனால், சமீபகாலங்களில் பொருளாதாரம், மக்கள் தொகையில் முஸ்லிம் மக்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. கிழக்கு மாகாணத்தில் அராப் பல்கலைக்கழம் அமைக்கப்பட்டுள்ளது. அரேபிய நாடுகளிலிருந்து நிறைய பணம் வருகிறது. மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து ஆள்கள் வந்து அராப் மொழி கற்றுத்தருகிறார்கள். இப்படியான முஸ்லிம்களின் வளர்ச்சி சிங்கள அரசின் கண்களை உறுத்தியது. முஸ்லிம் மக்களின் வளர்ச்சியைத் தடுக்க என்ன செய்யலாம் எனக் கண்காணித்தபடி இருந்தனர். அப்போது சில குறிக்கப்பட்ட குழுக்கள் தானாகவே தீவிரவாதத் தன்மையோடு இயங்கியதைக் கண்டறிந்திருக்கின்றனர். அதாவது, அடிக்கவிட்டு அடிப்போம் எனக் காத்திருந்தனர். குண்டுகள் வெடித்தன. தாக்குதல் நடந்த 12 மணிநேரங்களில் இலங்கை அரசின் புலனாய்வுத்துறை உயிர்பெற்றுச் சொல்லிவைத்தாற்போல், எல்லா இடங்களிலும் குண்டுகளைக் கைப்பற்றி ஆள்களைக் கைது செய்யது. 12 மணிநேரத்தில் அவ்வளவு துல்லிய விவரத்தை எப்படிப் பெற்றீர்கள்?! அப்படி என்றால், இவை அனைத்தும் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. இப்போது இதைக் காரணம் காட்டி முஸ்லிம்களின் மீது உடைக் கட்டுப்பாடு உட்பட பல்வேறு நெருக்கடிகளைத் தரத் தொடங்கியுள்ளனர். இதுவரை 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.


இந்த நிலையில் விடுக்கப்பட்ட போராளிகளைச் சந்தித்து. `முஸ்லிம் தீவிரவாதத்தை ஒடுக்க நீங்கள் எங்களோடு துணை நிற்கணும்’ என்று இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், இலங்கை நாடாளுமன்றத்தில் `புலித்தலைவர் பிரபாகரன் கொள்கை ரீதியானவர். எந்தவொரு காலகட்டத்திலும் மதம் சார்ந்த தாக்குதல்களை நடத்தியதில்லை. பொதுமக்களைத் தாக்கியதில்லை’ என்று தலைவரைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் இப்படிப் பேசியது சந்தோஷம். ஆனால், தமிழர்களை அழிக்க முஸ்லிம்களைக் கூட்டு சேர்த்துக்கொண்டதுபோல, இப்போது முஸ்லிம் மக்களை ஒடுக்க தமிழர்களை இழுக்கிறார்கள். ஆக, சிங்களவர்களை  தவிர தமிழர்கள், முஸ்லிம்கள் எனச் சிறுபான்மை இனங்கள் இலங்கையில் நிம்மதியாக வாழ முடியாது என்ற சூழலை இலங்கை அரசாங்கம் உருவாக்கியுள்ளது என்பதே உண்மை.”


நன்றி விகடன்!!
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.