மெல்லப் பேசு..!மின்னல் மலரே.!! பாகம்11

தாயைப்போல நேசம் காட்டுகிறாய், தாரமாய் வா என்றால் 
மாட்டேனென்கிறாய்?
இரவு உணவை அப்பாவுடன் அருகில் இருந்து சாப்பிட்டான். சில நாட்களுக்குப் பின்பு அப்பாவும் சாப்பாட்டை ரசித்து ரசித்துச் சாப்பிட்டார். காலையும் மாலையும் மெல்லிய உணவுகளை அதாவது பெரும்பாலும் காலையில் சத்தான கஞ்சி வகைகளை சாப்பிடுவது அவரது வழமை, இரவில் இடியப்பம் என்றால் கூட சொதி மட்டும்தான் எடுத்துக்கொள்வார்.
இன்று, காய்ச்சல் வாய்க்கு, அவரே கனியிடம் ஊர்க் கோழிகுழம்பு வைக்கச்சொல்லியிருந்தார். அவளும் மிகஅருமையாக வைத்திருந்ததால் அப்பாவும் மகனுமாக ஒரு பிடி பிடித்தனர்.

சாப்பாட்டை வைத்துவிட்டு, அவள் சென்றுவிட “அப்பா...” என்றான் வெற்றி.
“என்னப்பா? நாளைக்கே போகப்போறியா? பரவாயில்ல, வேலை தானே,  ”....அவர் இழுக்க......
“அதில்லை அப்பா, உங்களிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லவேணும்,”

“என்னப்பா...சொல்லு?”

“அப்பா.... அது வந்து....கனியைத்தேடி அவளின்ர வீட்டில இருந்து ஒருத்தரும் வரவில்லையே அப்பா,"
அவளுடைய கணவன் என்ற வார்த்தையை உச்சரிப்பதை கவனமாகத் தவிர்த்துக்கொண்டான்.  

"இவ்வளவு காலத்தில அவளும் எங்கயும் போக விரும்பேல்ல, இங்க வந்து ஒரு வருசத்துக்கு மேல ஆச்சு, காலம் முழுதும் அவள் தனியாகவே வாழமுடியுமா?"

"நீ சொல்லுறது சரிதான், அதுக்கு நான் என்னப்பா செய்யமுடியும்?" 
"அவளை டிவோர்ஸ் பண்ணச் சொல்லி அட்வைஸ் பண்ணுங்கப்பா, அவ வாழ்க்கை ஏன் இப்பிடி வீணாகணும்?,” என்றான். 
“அது சரிதான், ஆனா,  டிவோர்ஸ் பண்ணிட்டு அவ என்ன பண்றது, இப்பவாவது அவளின்ர பெயருக்கு பின்னால புருசனின்ர பெயர் இருக்கும், அதுக்குப்பிறகு அவளுடைய  நிலைமையை நினைச்சுப்பார், யார் இந்தக் காலத்தில கல்யாணமாகி விவாகரத்தான பெண்ணை முழு அன்போடயும் நேசத்தோடையும் கல்யாணம் பண்ணப்போறாங்கள்? இப்ப உள்ள பிள்ளைகளுக்கு அப்பிடி ஒரு மனநிலை இருக்கிறதாவே தெரியேல்ல, காதலிச்சிட்டே, பழகிமுடிய கைவிட்டுட்டுப் போயிடுறாங்கள், அல்லது கல்யாணத்துக்குப் பிறகு கைவிடுறாங்கள், அல்லது அடி, ஆய்க்கினை எண்டு, தாங்களாகவே கைவிடுறமாதிரிச் செய்துபோடுறாங்கள்.”
“நீங்கள் சொல்லுறது சரிதான் அப்பா, ஆனா, இப்ப பெண் பிள்ளைகளும் மோசம் தான்,"
"அதுசரி, உந்த சீரியலுகள் படுத்துறபாடுதான் அது, எல்லா சீரியலிலையும், பொம்பிளைதான் வில்லி, அதுவும் உறவுகளுக்குள்ளயே வில்லத்தனம், அடுத்தவளின்ர வாழ்க்கையை அபகரிக்க முயற்சி, எண்டு காட்டுறதால இப்பிடித்தான்  வாழ்க்கையும் எண்டு நினைக்கிதுகள், பழக்கவழக்கம் பூச்சியமா ஆகிப்போகுது. "   

"அப்பா......" 

மகனின் குழைவு அவருக்குள் ஒருவித சிரிப்பைக் கொடுக்க, 
"என்ன வெற்றி?" என்றார். 
"என்னப்பா சொல்லுறாய்?"

"உங்கட மகனுடைய வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கனவு இருக்கா அப்பா, உங்கட மருமகள் அப்பிடி இருக்கோணும், இப்பிடி இருக்கோணும் எண்டு,” 

“இல்லப்பா, மருமகளா வர்றவள் உன்ர மனசுக்குப் பிடிச்சவளா, உன்னை கண்ணுக்குள்ள வைச்சுப் பாத்துக்கொள்ளுறவளா, காலம் எல்லாம் உன்னை நேசிக்கிறவளா, உன் பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல் உனக்கும் தாயா நடக்கக்கூடியவளா இருந்தால் சரி, அதுக்கும் கனியோட வாழ்க்கைக்கும் என்னப்பா சம்பந்தம்?”

“அது....அது....., அவளுக்கு ஒரு வாழ்க்கை காத்திட்டிருக்கு, உங்க பிள்ளை எல்லாரையும் போல இல்லப்பா, அவன் வித்தியாசம்,  நான் என்ன சொல்றன்னா, எனக்கு அவளை பிடிச்சிருக்கு, ஆனா அது இப்ப இல்ல, அவள் இங்க வர்றதுக்கு முன்னமே, ஒருநாள் யுனியில அவளைப் பாத்தன், மனசில ஒரு எண்ணம் இருந்தது, அதுக்குப் பிறகு அவளை நான் காணவே இல்லை, நிறைய நாள் அவளைத் தேடியிருக்கிறன், கடைசியா, இங்கதான் கண்டன். அவ கல்யாணமானவ எண்டு தள்ளித்தான் இருந்தன், ஆனா, அவதான் அந்த வாழ்க்கை வேண்டாம் என்று முடிவுசெய்திட்டாளே, நான் அவளைக் கல்யாணம் பண்ண ஆசைப்படுறன் அப்பா, இது தியாக மனப்பான்மை எல்லாம் இல்லப்பா, அவளோட வாழ்ந்தா நீங்க அம்மாவோட வாழ்ந்த மாதிரி வாழ்க்கை பூரா சந்தோசமா, வாழுவன் என்று தோணுது, அனந்துவை என் மகனா வளர்ப்பேன், அதனாலதான், நீங்க பேசுங்கப்பா, அவ கேப்பா...”.கோர்வையாய் சொல்லிமுடித்த மகனை ஆதூரமாய் பார்த்தார் வெற்றியின் அப்பா. 
“சரி, நான் கதைக்கிறன், கனியை நீ நேசிக்கிறது எனக்கு நிறைய சந்தோசம், காலம் முழுதும் அவ உன்ர பாதுகாப்பில, உன்ர அன்பில வாழப்போறாள் எண்டதும் எனக்கு எப்பிடி இருக்கு தெரியுமே?” அப்பா திருமணமே முடிந்தது போல பேசியது வெற்றிக்குள் ஒருவித சுகஉணர்வை உண்டு பண்ணியது.  

அப்பாவை அன்பு ததும்ப பார்த்தபடி சாப்பிட்டு முடித்தான்.
மறுநாளே, கனியை அருகில் அழைத்த வெற்றியின் அப்பா,
“கனிம்மா உன்னட்ட ஒரு விசயம் கதைக்கப்போறன், அது உன்ர சொந்த விசயம், அதுக்காக நீ அப்பாவை குறைநினைக்க கூடாது, நான் உன்ர சொந்த விசயம் கதைக்கலாமா அம்மா?“ என்றார்.

“அப்பா...என்னப்பா...இது, நான் உங்களில வைச்சிருக்கிற அன்பும் பாசமும் உங்களுக்குத் தெரியாதா? ஆதரவற்று வந்த எனக்கு, தங்க இடமும் பாதுகாப்பும் தந்தது மட்டுமில்லாம, என்ர பிள்ளையை உங்கட பேரன் மாதிரி நினைச்சு வளக்கிறீங்கள், என்ர அப்பாவை நான் பாத்ததே இல்லை, உங்களை அப்பாவாதான் நினைக்கிறன், தயவுசெய்து இப்பிடிகேட்டு என்னை வேற்று ஆளாய் நினைக்க வைக்காதேங்கோ அப்பா, என்ன விசயமெண்டாலும் என்னட்ட சொல்லுங்கோ, நான் ஒண்டும் நினைக்கமாட்டன்,”

“உனக்கு சின்ன வயசம்மா, உனக்கு ஒரு துணை தேவை, அதைப் பற்றித்தான்.....”

“அப்பா...அதுதான் எனக்கு துணையா நீங்கள் இருக்கிறீங்களே,”


“என்ர காலத்துக்குப் பிறகு நீ தனிச்சுப்போடுவாயே அம்மா“

“அப்பா...., அப்பிடிச் சொல்லாதேங்கோ, எனக்கு கேட்கவே பயமா இருக்கு, ”

“நெருப்பெண்டா வாய் வெந்துபோகாதம்மா.....நான் யதார்த்தத்தைச் சொல்லுறன், பயப்பிடாதை” என்றார். 

“அதுக்குப்பிறகு என்ர பிள்ளை இருக்கிறானே, அவன் என்னைப் பாப்பான்....”

“அவன்ர காலம் எங்கயம்மா கிடக்கிது, அதுக்கிடையில என்னென்ன நடக்கிதோ, யாருக்குத் தெரியும்?”

“அப்பா....அப்பிடி எல்லாம் சொல்லாதேங்கோ, நீங்கள் நிறைய நாள் எனக்கும் என்ர பிள்ளைக்கும் துணையா இருப்பீங்கள், எனக்குத் தெரியும், கடவுள், அப்பிடியான கொடுமைக்காரன் இல்லை, எனக்கு இப்ப ஒரே துணை நீங்கள்தான் எண்டு அவருக்குத் தெரியும், அதனால என்னை இனியும் சோதிக்கமாட்டார்” என்றாள். 

“நீ சொல்லுறது சரிதான், கடவுள் உன்ர வாழ்க்கையில ஒரு அழகான கணக்கை எழுதியிருக்கிறார், நீதான் இனி முடிவு எடுக்கவேணும், கடவுள் சந்தர்ப்பத்தை தருவார், நாங்கள்தான் பற்றிப்பிடிக்கவேணும், இல்லாட்டி கஸ்ரம்தான்” என்றவரை கேள்வியாய் பார்த்தவள், 
“என்னப்பா சொல்லுறீங்கள்?”

“நீ இன்னும் ஏன் அவன்ர பெயரை உன்ர பெயருக்குப் பின்னுக்கு சுமந்துகொண்டிருக்கிறாய், பேசாமல் அவனை டிவோர்ஸ் பண்ணிடன்,” 

“யாரை அப்பா?” 

“உன்ர புருசனைத்தான், உன்ர பெயருக்குப் பின்னால மட்டும் அவனின்ர  பெயர் இருக்கு, அவனால வேற எந்த பிரயோசனமும் இல்லைத்தானேம்மா?”
அப்போதுதான், அவளுக்கு தெளிவாகியது, சட்டென்று தன்னைச் சமாளித்தவள், “ஓ....அவரா....டிவோர்ஸ் பண்ணிட்டு என்னப்பா பண்றது, தவிர எனக்கு இந்த, கோட், கேஸ் அலைச்சல், இதெல்லாம் விருப்பம் இல்லை, அதனால் அது அப்பிடியே இருக்கட்டும்” 

“இல்லடாம்மா, அதுக்குப்பிறகு உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை இருக்கு, ஒரு அலைச்சலும் இல்லாமல் நாங்கள் இதை முடிக்கிறம்” என்றார். 
“அப்பா....?”
“நான் என்ன சொல்றனெண்டா, என்ர மகன் வெற்றி...வெற்றிக்கு உன்னை பிடிச்சிருக்காம், கல்யாணம் பண்ண ஆசைப்படுறான்மா,” ஒரு மாதிரிச் சொல்லிமுடித்துவிட்டார். 

அவளுக்கு ஓரளவு தெரிந்தே இருந்தது. இருப்பினும் காட்டிக்கொள்ளாமல், மௌனமாக நின்றாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் வெற்றியின் தந்தையார். அவரது பார்வையில் என்ன சொல்லப்போகிறாளோ, என்ற ஏக்கம் இருந்தது. 
சற்று நேரத்தில் அவளே தொடர்ந்தாள். 

“அப்பா,  ஒரு கல்யாணம் எண்டதும் பெண்ணிடம் ஆயிரம் சட்டதிட்டங்களை எதிர்பார்க்கிற, உலகத்தில, அதுவும் மனைவியை இழந்த, மனைவியை விவாகரத்து செய்த  ஆண்கள் கூட புதுசா, கல்யாணமாகாத  ஒருத்தியைத்தான் கல்யாணம் செய்யவேணும் எண்டு ஆசைப்படுற இந்தக்காலத்தில, உங்கட பிள்ளைமாதிரி ஆக்கள்,  ஒருத்தர் ரெண்டுபேரைத்தான் பாக்கமுடியும். ஆனா, இன்னொரு வாழ்க்கை பற்றி நான் யோசிக்கல்ல, எப்பவும் யோசிக்கவும் விரும்பேல்ல, எனக்கு என்ர வாழ்க்கை முழுமைக்கும் அனந்திதன் மட்டும் தான், அவனுக்கு நானும் எனக்கு அவனுமா வாழ்ந்திட்டுப் போடுவம்,  எனக்கு இந்த வாழ்க்கையே போதும், உங்களைப் பாத்துக்கொண்டு, இந்த வீட்டில கடைசிமட்டும் இருந்திடுவன், அதுக்கு அனுமதி தந்தாப்போதும்,” சொல்லிவிட்டு நிமிர்ந்தவளை நேராய்ப் பார்த்தவர், 

“அம்மா கனி, அனந்துவும் வளருவான், அவனுக்கும் ஒரு வாழ்க்கை வரும், அப்ப தனிமரமா நிப்பியேம்மா, இப்ப இல்லாட்டியும் முதுமைக்காலத்தில உனக்கு ஒரு துணை தேவையம்மா, அதனாலதான் சொல்றன்.”

அவரைப் பேசாமல் இருக்கச்செய்ய வேறு வழி தெரியாததால் கடைசி அஸ்திரத்தை எடுத்தாள் கனிமொழி.   “அப்பா .....இதைப்பத்தி இனிமே பேசவேண்டாம், நான் இனி இங்க இருக்கிறது சரிவராதுதானே , உங்கட மகன் கோபப்படுவார், நான் போய்விடுறன்” என்றவளை கண்வெட்டாது பார்த்தபடி நடந்து வந்தான் வெற்றி.

“அதெல்லாம் ஒண்டும் வேண்டாம், நான் நாளைக்கே வெளிக்கிட்டுறன், நீங்கள் எங்கயும் போகவேண்டாம், நான்தான் அப்பாட்ட கேட்கச் சொன்னன், கேட்டவர், விருப்பமில்லாட்டி விடவேண்டியதுதானே, பிறகென்ன, நீங்கள் வழமைபோலயே இருங்கோ, நான் இனி இதைப்பற்றி கதைக்கமாட்டன், அப்பாவும் கதைக்கமாட்டார்” என்ற வெற்றியைக் கண்டதும் சிலையாக நின்றாள் கனிமொழி. 

அவனது முகம் கல்லென இறுகியிருந்தது, குரலில் கூட அத்தனை துயரம், உள்ளம் ஊமையாய் அழுதது அவளுக்கு.

“அம்மா கனி, இந்தப் பாலனை என்னட்ட இருந்து கொண்டு போடாதையம்மா, எனக்கு பைத்தியம் பிடிச்சிடும்,” என்ற வெற்றியின் அப்பாவிடம்
“இல்லையப்பா, நான் போகமாட்டன்,” என்றுவிட்டு தன்னிடம் சென்றுவிட்டாள்.

தொடரும்.....
கோபிகை!
ஆசிரியர்பீடம்
தமிழருள் இணையத்தளம்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.