வெற்றிகுறித்து பேசும் மோடி!!

17வது மக்களவைத் தேர்தல் முடிவுகளில் 350 தொகுதிகளில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது.
மோடி தலைமையிலான பா.ஜ.க இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. 2014-ம் ஆண்டைவிட இந்த முறை அதிக இடங்களை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சி அமைப்பது 50 ஆண்டுகளில் இது முதல் முறையாகும். இந்த வரலாற்று வெற்றியை நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். வெற்றியை அடுத்து அமித் ஷா, மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் அக்கட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய மோடி, ``உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது. புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு தந்துள்ளனர். 130 கோடி மக்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் தேர்தலில்தான் அதிகபட்சமாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. கடும் வெயிலிலும், மோசமான வானிலை நிலவிய போதும் அதிகளவு மக்கள் வாக்களித்துள்ளனர். இது பெரிய அதிசயம். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டுதான் அதிகளவு மக்கள் வாக்களித்துள்ளனர். உலக நாடுகள் இந்தியாவில் நடந்த இந்த ஜனநாயகத் திருவிழாவை வியந்து பார்க்கின்றன.

மக்கள் மோடி வென்றுள்ளதாக கூறுகிறார்கள். அப்படி இல்லை. இது மோடியின் வெற்றிகிடையாது. இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்த நேர்மையான மக்களின் வெற்றியாகும். இந்தத் தேர்தலில் நாடு வென்றுள்ளது, நாட்டு மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். நாங்களும் எங்கள் கூட்டணிக் கட்சிகளும் இந்த பிரமாண்ட வெற்றியை மக்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம். சொந்த வீட்டுக்காக ஏங்கும் மக்களுக்கு கிடைத்த வெற்றி. வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளின் வெற்றி. சுதந்திரத்துக்குப் பிறகு அதிக பெரும்பான்மையுடன் அமையும் ஆட்சி எங்களுடையது. இந்தத் தீர்ப்பின் மூலம் சாதி, வாரிசு அரசியல் புதைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மூலை முடுக்கில் உள்ள மக்கள் அனைவரும் பா.ஜ.க-வுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். பிரதமராக முதல் பயணத்திலேயே பல தடைகளைக் கடந்தேன். ஆனால், ஒருபோதும் தளர்வடையவில்லை. என்னை நாட்டு மக்கள் புரிந்துகொண்டு வாக்களித்துள்ளனர். பல கோடி மக்கள் இந்த பிச்சைக்காரனின் பையை வாக்குகள் மூலம் நிரப்பியுள்ளனர்.

இதற்காக கடின உழைப்பைக் கொடுத்த அமித் ஷாவுக்கு எனது நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன். பா.ஜ.க ஆளாத மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். கூட்டாட்சித் தத்துவத்தைப் பேணும் வகையில், மாநில அரசுகளுக்கு உதவுவேன். கூட்டாட்சி தத்துவத்தில் எங்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. இந்தியா, இனி சூப்பர் பவர் என்பதை இந்த உலகம் குறித்துக்கொள்ளட்டும். முதல்முறையாக இந்தத் தேர்தலில் தான் ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டை சொல்லமுடியாமல் போனது. இனி மதச்சார்பின்மை முகமூடியை அணிந்துகொண்டு யாரும் நாட்டை ஏமாற்ற முடியாது. இப்போது இரண்டு விஷயங்கள்தான் உள்ளன. ஒன்று ஏழ்மை. இன்னொன்று ஏழ்மையை அகற்ற விரும்பும் நபர் ஒருவர்" எனப் பேசினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.