யாழ். பல்கலை மாணவர்கள் கொலை வழக்கு: சிங்கள பிரதியை தமிழுக்கு மாற்ற உத்தரவு!!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சிங்கள மொழியில் இருந்த பொலிஸ் அதிகாரியின் சாட்சிய பிரதியை தமிழுக்கு மொழிபெயர்த்து சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் இந்த உத்தரவை பிறப்பித்ததோடு, வழக்கினை வரும் ஜீன் 13 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் வி.சுலக்சன், ந.கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 5 பொலிஸாரைக் கைது செய்தனர். அவர்கள் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்.மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவர்கள் ஐவரும் பொலிஸ் சேவையில் மீண்டும் இணைக்கப்பட்டனர்.

வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த 5 சந்தேகநபர்களில் இரண்டாவது சந்தேகநபர் எக்கநாயக்க முதியான்சலாகே ஜயவர்த்தன, நான்காவது சந்தேகநபர் தங்கராஜன் லங்காமனன், ஐந்தாவது சந்தேகநபர் கமல விதானகே நவரத்ன பண்டார ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து அரச சாட்சிகளாக மாற்றப்பட்டனர்.

மேலும் கடமைக்கு பொறுப்பாகவிருந்தவரான முதலாவது சந்தேகநபர் சரத் பண்டார திசாநாயக்க மற்றும் சூடு நடத்தியவரான மூன்றாவது சந்தேகநபர் சமர ஆராய்சிலாகே சந்தன குமார சமர ஆராச்சி ஆகிய இருவருக்கும் எதிராக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296ஆம் பிரிவின் கீழான கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பிராது பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, சுருக்கமுறையற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டது. அதனடிப்படையில் வழக்குத் தொடுநர் தரப்பால் நெறிப்படுத்தப்பட்ட சாட்சியங்கள் மன்றில் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று யாழ்.நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பி.போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது, வழக்குத் தொடுநர் தரப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் மன்றில் முற்படுத்தப்பட்டதுடன் அவரது பதிவுப் புத்தகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பிரதி மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தப் பிரதி தனிச் சிங்கள மொழியில் காணப்பட்டது.

சாட்சியின் பிரித்தெடுக்கப்பட்ட பிரதியின் தமிழ் மொழிபெயர்ப்பை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதவான்,  வழக்கை ஒத்திவைத்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.