சூரத் தீவிபத்தில் உயிர் பிழைத்தவர்கள் விவரிக்கும் திக் திக் நொடிகள்!!

குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று மாலை கோச்சிங் சென்டர் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஒட்டு மொத்த நாட்டையும் உலுக்கிவிட்டது.


சுமார் 60 பேர் படிக்கும் கோச்சிங் சென்டர் அது. சூரத்தில் உள்ள அந்தக் கட்டடத்தில் நேற்று மாலை 4 மணியளவில் தீப்பிடித்து கரும்புகை சூழ ஆரம்பித்தது. அங்கு இருந்த மாணவர்கள் எங்கு செல்வது எனத் தெரியாமல் முட்டி மோதினர். அதன் பின்னர் நடந்தது எல்லாம் வீடியோவாக வெளியாகிப் பார்ப்பவர்களை பதறவைத்தது. தப்பிக்க வழி இல்லாமல் மாணவர்களும் மாணவிகளும் 4 வது தளத்தில் இருந்து குதிக்கும் காட்சிகள்தான் அது.

இந்தத் தீ விபத்தில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளனர். 4-வது மாடியில் இருந்து குதித்த அனைவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கோச்சிங் சென்டர் உரிமையாளர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, அங்கு 2 மாடி கட்ட மட்டுமே அனுமதி வாங்கியுள்ளனர். மீதம் இருக்கும் இரண்டு மாடியும் சட்டவிதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளது.

மேலும், முதற்கட்ட ஆய்வு நடத்திய தீயணைப்புத்துறை அதிகாரிகள், தீவிபத்து நடந்த அந்தக் தளத்தில் சில ஏசி எந்திரத்தின் பாகங்களும் வாகனங்களின் டயர்களும் கிடைத்துள்ளன. கரும்புகைக்கு இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இருக்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோச்சிங் சென்டர் ஒன்றில் கடந்த 4 மாதங்களில் நடக்கும் இரண்டாவது தீ விபத்து இது.

இந்நிலையில் கட்டடத்தில் இருந்து குதித்து உயிர் தப்பிய உர்மிளா என்ற மாணவி, ``திடீரென தீயும் புகையும் பரவியது. நாங்கள் படிக்கட்டுகளை நோக்கிப் பாய்ந்தோம். ஆனால், அந்தப் பகுதி முழுவதும் தீ எரிந்துகொண்டு இருந்தது. காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் எனக் கத்தினோம். பின் அனைவரையும் போன்று நாங்களும் கட்டடத்தின் பின்புறம் சென்றோம். எங்களுக்கு வேறு வழி இல்லை. பலர் 4வது மாடியில் இருந்து குதிப்பதைப் பார்த்தேன். வேறு வழியில்லாமல் அவர்களைப் பின்பற்றி நானும் குதித்துவிட்டேன்” என்றார்.

மற்றொரு 15 வயது மாணவி பாஞ்சாலி, ``நான் அனுபவித்தது நரக வேதனை. நான் எத்துணை நேரம் அங்கு இருந்தேன் எனத் தெரியாது. அங்கிருந்து என்னைக் குதிக்க வைத்த சக்தி எது என்றும் தெரியாது. எனக்கு நினைவில் இருப்பதெல்லாம் அனைவரின் கூக்குரல்கள்தான். நான் அங்கு இருந்து குதிக்கும்போது நான் இறந்துவிடப் போகிறேன் என்றுதான் நினைத்தேன்” என்றார்.

இந்த விபத்தை நேரில் பார்த்த சிலர், தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனத்தில் வந்தவர்களிடம் இருந்த ஏணி போதுமான உயரத்தில் இல்லை. அதை வைத்து 3 வது மாடிகூட செல்ல முடியவில்லை. குறைந்த பட்சம் வலை வைத்திருந்தால்கூட சிலரைக் காப்பாற்றி இருக்கலாம் என்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.