கமராக்களை அகற்றுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு!!

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள CCTV கமராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லைத்தீவு நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அத்துமீறி விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குகளால் பிள்ளையார் ஆலயத்துக்கு மட்டும் பொருத்தப்பட்டுள்ள இரகசிய CCTV கமராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளார் .

நேற்றைய தினம் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றின் அனுமதிகளுடன் பிள்ளையார் ஆலயத்தின் வீதி இருமருங்கிலும் பெயர் பலகையை நடுவதற்காக  ஆலய நிர்வாகத்தினரும் செம்மலைக்கிராம மக்களும்  அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது பாதுகாப்பு பணியிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் அவர்களை  தடுத்ததோடு, அப்பகுதியிலுள்ள பௌத்த பிக்குவின் முறைப்பாட்டுக்கு அமைய, அம்மக்களை நிலத்தில் அமர்த்தி குற்றவாளிகளை போன்று விசாரணைகளை நடத்தி பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவங்களையடுத்து குறித்த நீராவியடி பிள்ளையார் ஆலயத்தினை சேர்ந்தவர்களால் மனுவொன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கின் மனு மீதான விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) எடுத்துகொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் சிரேஷ்ட சட்டதரணி அன்டன் புனிதநாயகம் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினை சேர்ந்த சட்டத்தரணிகளும்  முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றவர்களுக்கு பொலிஸாரினாலும் பௌத்த பிக்கு தரப்பினராலும் இடையூறு ஏற்பட்டமை தொடர்பில் தமிழ் பத்திரிகையொன்றில் வெளியான செய்தியை  சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம்  நீதிமன்றத்தின் கவனத்திற்கு ஆதாரமாக கொண்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து  முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நீதிமன்றுக்கு அழைத்த நீதிபதி, ”வழக்கின் தீர்ப்பின்படி பௌத்த பிக்குவால் மாற்றம் செய்யப்பட்ட கணதேவி தேவாலயம் என்ற பெயரை ஏற்கனவே இருந்ததை போன்று நீராவியடி பிள்ளையார் ஆலயம் என மாற்றம் செய்யுமாறு பொலிஸாருக்கு கூறப்பட்டது. இன்னும் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் இரண்டு புதிய இரகசிய கமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் வினவினார் .

அதற்கு பதிலளித்த முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ”இன்றைய தினமே இரகசிய கமராக்களை அகற்றுவதாகவும் பெயரினையும் மாற்றுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

பின்னர் நீதிபதி,  குறித்த வேலைகளை உடனடியாக செய்யுமாறு பணித்ததோடு  நீதிமன்றத்தின்  தீர்ப்பை மீறி செயற்பட்டால்  அவமதிப்பு குற்றச்சாட்டுக்குக்கு உள்ளாக நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.