கைதான முஸ்லிம் வைத்தியரும் இலங்கை அரசும்!!

யாழ் வேலனை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய குடும்பநல மருத்துவத் தாதியான சரவணை தர்சிகா, அங்கு பணியாற்றிய சிங்கள வைத்தியர் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகம் புரியப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.


2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் படுகொலை நடந்தது. கைது செய்யப்பட்ட சிங்கள வைத்தியர் யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுப் பின்னர் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

வழக்கும் யாழ் நீதிமன்றத்தில் இருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டிருந்தது. ஆனால் அந்த வழக்கு விசாரணைக்கு என்ன நடந்தது? சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வைத்தியர் எங்கே?

அதே ஆண்டில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற சிங்களப் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு புரிந்து மாடியில் இருந்து தள்ளிவிழுத்திக் கொலை செய்த சிங்கள வைத்தியர் கைது செய்ய்ப்பட்டு அவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் 1970களில் அதிகளிவில் பணம் சம்பாதித்த  சிங்கள வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் இன்று வரை அவர் மீது உரிய விசாரணை நடத்தப்படவில்லை.

இது மாத்திரமல்ல, வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப் பல பெண்கள் கொலை செய்யப்பட்டனர்.

அது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இராணுவத்தினர் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலருக்கு உடல்களைப் பலவீனப்படுத்தி நோய் ஏற்பட்டு உயிரிழக்கக் கூடிய அளவுக்கு ஊசிகள் ஏற்றப்பட்டதாக இன்று வரை சந்தேகங்கள் உண்டு. ஆனால் அது பற்றி எந்த விசாரணையும் இல்லை. (இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டதா இல்லையா என்பது வேறு)

கிளிநொச்சியில் 2012 ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் பலருக்கு நடந்ததென்ன? இன்று வரை உரிய விசாரணை நடந்ததா?

2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் நடந்தது தமிழ் இனப் படுகொலைதான் என்று தமிழ் மக்கள் கூறுகின்றனர்.

ஆகவே இவற்றையெல்லாம் ஏற்க மறுக்கும் இலங்கை அரசாங்கம், குருநாகல் வைத்தியசாலையில் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் சிங்களப் பெண்களைக் கருத்தரிக்க விடாமல் செய்து விட்டார் என்று குற்றம் சுமத்தி விசாரணை நடத்துகின்ற வேகம் என்ன?

சிங்கள இன விகிதாசாரத்தைக் குறைக்க முஸ்லிம் வைத்தியர் திட்டமிட்டுச் செய்தார் என்று குற்றம் சுமத்துகின்ற சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள ஊடகங்களும் 30 ஆண்டுகால போரில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு என்ன பதில் சொல்வார்கள்?

முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களோடுதான் சேர்ந்து வாழ்ந்தார்கள்- ஆனால் இரண்டு சமூகங்களையும் ஒன்றுடன் ஒன்று மோதவிட்டுக் கூத்துப்பார்த்து ரசித்துப் பிரித்தாளும் தந்திரத்தால் இந்திய, இலங்கை அரசுகள் வெற்றியடைந்தன.

ஈழப் போர் உக்கிரமாக நடந்த காலங்களில் முஸ்லிம் மக்களின் உரிமைக்காகவும் இலங்கை அரசாங்கம் நீலிக் கண்ணீர் வடித்திருந்தது.

ஆனால் இன்று ஸர்க்கான் என்ற ஏவல் கொலையாளியும் அவனது சகாக்களும் உயிர்த்த ஞாயிறன்று செய்த மனிதப் படுகொலைகளுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையே இலங்கை அரசாங்கம் கருவறுக்கின்றது.

ஈழப் போரின்போதும் 2002 இல் சமாதானப் பேச்சுக்கள்  நடந்தபோதும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரை குறிப்பாகக் கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரை அமெரிக்க, இந்திய, இலங்கை அரசுகள் கையாண்ட அணுகு முறையின் பக்க விளைவுகள்தான், ஸர்க்கான் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்குக் காரணம் எனலாம்.

-அமிர்தநாயகம் நிக்சன்-

No comments

Powered by Blogger.